Sports
’தடகள சக்கரவர்த்தி’ உசேன் போல்ட்டின் தீரா ஆசை எது தெரியுமா? - ஒலிம்பிக் அப்டேட்ஸ்!
ஒலிம்பிக்கில் என்னென்ன விளையாட்டுகள்
ஒலிம்பிக்கில் எந்த விளையாட்டை சேர்ப்பது குறித்து சர்வதேச ஒலிம்பிக் குழு தேர்வு செய்கிறது. இந்த குழு உலகளவில் பிரபலமடைந்த விளையாட்டுகள் பற்றி ஆராயும். வெவ்வேறு பகுதிகளில் அவர்கள் வெற்றிபெற வாய்ப்பிருக்கும் ஒரு சில விளையாட்டுகளை கொடுக்க ஒலிம்பிக் கமிட்டி முயற்சிக்கிறது. பல ஆண்டுகளாக இந்த குழுவின் முதன்மை நோக்கமாக பாலின சமத்துவம் இருந்து வருகிறது. இதுனால்தான் இந்த நூற்றாண்டில் பெண்களுக்கான குத்துச்சண்டை, மல்யுத்தம் மாதிரியான விளையாட்டுகள் சேர்க்கப்பட்டது.
மல்யுத்தம் ஒரு கட்டத்தில் 2020 விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலக்கப்பட்டிருந்தாலும், அது மீண்டும் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆண்டு நடக்கும் போட்டியில் எந்த விளையாட்டும் நீக்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக பாலின சமத்துவத்துடன் விளையாட்டுகளை நெருக்கமா கொண்டு வருவதற்காக பல விளையாட்டுகளில் சில ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் போட்டிகள் பெண்கள் போட்டிகளுக்கு ஆதரவாக கைவிடப்பட்டுள்ளது. பேஸ்பால், சாஃப்ட்பால் போட்டிகள் 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடக்கிறது. கராத்தே, சர்ஃபிங், ஸ்போர்ட் க்ளைம்பிங் மற்றும் ஸ்கேட்போர்டிங் இவையெல்லாம் புது விளையாட்டுகளாக இடம்பெற்றுள்ளது. இப்படி மொத்தம் 33 வகையிலான 393 விளையாட்டுப் போட்டிகள் இந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் நடக்கிறது.
ஸ்விம்மிங், டைவிங் மாதிரியான நீர் விளையாட்டுகள், வில்வித்தை போட்டிகளான ஆர்செரி கேம்ஸ், ரன்னிங் மாதிரியான அத்லெட்டிக்ஸ், பேட்மிண்டன், பேஸ்பால், பேஸ்கெட்பால், பாக்ஸிங், படகுப்போட்டிகளான கனோயிங், சைக்கிளிங், குதிரைப் பந்தயங்கள், கத்திச்சண்டை, ஃபீல்ட் ஹாக்கி, ஃபுட்பால், கோல்ஃப், ஜிம்னாஸ்டிக்ஸ், ஹேண்ட்பால், ஜூடோ, கராத்தே, ஐந்து வெவ்வேறான விளையாட்டுகள் உள்ளடக்கிய நவீன பெண்டத்லான், ரோயிங், ரக்பி, செயிலிங், ஷூட்டிங், ஸ்கேட்போர்டு, ஸ்போர்ட் க்ளைம்பிங், சர்ஃபிங், டேபிள் டென்னிஸ், டேக்வாண்டோ, டென்னிஸ், டிரையத்லான், வாலிபால், பீச் வாலிபால், பளு தூக்குதல், ரெஸ்ட்லிங் இப்டி மொத்தம் 33 வகையான விளையாட்டுப் போட்டிகள் இந்த ஒலிம்பிக்கில் இடம்பெற்றுள்ளது.
உசேன் போல்ட்
தடகள வரலாற்றையே மாற்றி எழுதிய உசேன் போல்ட் 1986-ல ஜமைக்காவில் பிறந்தவர். உலகமே வியந்து பார்க்கும் உச்சபட்ச சாதனைகள் பலவற்றையும் படைத்தவர்தான் இந்த மின்னல் வேக ஓட்டக்காரர். பத்து வினாடிக்குள் 100 மீட்டர் தொலைவை கடக்க எவருமே யோசித்துக்கூட பார்க்காத போது அந்த யோசனையை முறியடித்து சாதித்தவர்தான் உசைன் போல்ட். ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் ஜெயிப்பதே பலருக்கும் கனவாக இருக்கும்போது, போல்ட் எட்டு தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார். 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தொடர்ந்து 3 ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வென்ற ஒரே வீரரும் இவர்தான்.
2012, 2016 ஒலிம்பிக்கில் 400 மீட்டர் தொடர் ஓட்டப் பந்தயத்திலும் முதலிடம் பிடித்து தனது நாட்டுக்கு பெருமை சேர்த்திருக்கார். 2009ல் பெர்லினில் நடந்த சாம்பியன்ஷிப் போட்டியில் 100 மீட்டர் இலக்கை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்தார் உசைன் போல்ட். 10 ஆண்டுகள் கடந்திருந்தாலும் இன்றைக்கும் அவரது இந்த சாதனை எவராலும் முறியடிக்கப்படாமல் உள்ளது. 11 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற போல்ட் உலகின் அதிவேக மனிதர் என்று கூறினால் மிகையாகாது. 2017ல் உலக சாம்பியன்ஷிப் போட்டிகளுக்கு அடுத்து விளையாட்டுலிருந்து ஒய்வு பெற்ற போல்ட், சிறிது காலம் கால்பந்து விளையாட்டு மூலமாக ரசிகர்களை மகிழ்வித்தார்.
ஓட்டப்பந்தயத்தில் புது வரலாறே படைத்த இந்த அதிவேக புயல் விட்டுச் சென்ற சாதனைத் தடங்கள் இன்னும் பல ஆண்டுகளுக்கு அவருடைய பெயரை தடகள உலகத்தில் ஒலித்துக்கொண்டே இருக்கும். குறுகிய தூர ஓட்டப்பந்தயத்தில் புயல்வேகத்தில் சீறும் உசேன் போல்ட் 100 மீட்டர் ஓட்டத்தில் 9.58 வினாடி, 200 மீட்டர் ஓட்டத்துல 19.19 வினாடி என உலக சாதனை இலக்கை நிர்ணயித்துள்ளார். அதில் இருந்து தடகள உலகம் இந்த சாதனைய முறியடிக்கத்தான் முயற்சி செய்து வருகிறது. அதுதான் உசைன் போல்ட்டின் உண்மையான சாதனை.
இன்னொரு விஷயம் தெரியுமா? தடகளத்தில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்டி ‘தடகள சக்ரவர்த்தி’யாகவும் வலம் வந்த உசேன் போல்ட்டின் உண்மையான ஆசை கிரிக்கெட் வீரர் ஆக வேண்டும் என்றுதான். தடகளத்தில் கால்பதிக்காவிட்டால் கிரிக்கெட்டில் வேகப்பந்து வீச்சாளராக வந்திருப்பேன் என்று அவ்வப்போது அவர் கூறியிருக்கிறார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!