Sports

ஒலிம்பிக் வளையத்துக்கான அர்த்தம் என்ன தெரியுமா? Olympic Updates

01. ஒலிம்பிக் வரலாறு

கிரேக்க நாட்டில்தான் பழைய ஒலிம்பிக் பிறந்தது. கிரேக்கர்களின் மத கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகதான் இந்த போட்டி நடத்தப்பட்டது. கிரேக்க கடவுளுக்கெல்லாம் கடவுளாக விளங்கும் ‘ஜீயஸ்’ புகழை பரப்பும் விழாவாக இது கொண்டாடப்பட்டது. முதல் ஒலிம்பிக் விழா கி.மு 776ம் ஆண்டு கிரீஸில் உள்ள இயற்கை வளமிக்க நகரான ஒலிம்பியாவில் நடந்துது. இந்த மத திருவிழா ஒலிம்பியா நகரத்துல 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டது. இந்த ஒலிம்பிக் விழாவுக்கு நாட்டின் எல்லா பகுதிகளில் இருக்கும் மக்கள் பங்கேற்கும் வசதியாக அந்த நேரத்தில் கிரேக்க நகரங்களுக்கு இடையில் போர் நிறுத்தும் உடன்படிக்கைகளும் அமல்படுத்தப்பட்டிருந்ததாம். போருக்கு தயாராவதற்கு உதவும் ஓட்டப்பந்தயம், குத்துச்சண்டை, மல்யுத்தம், ஈட்டி எறிதல், குதிரையேற்றம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. அந்த காலத்தில் போர் பற்றிய தகவல்கள சீக்கிரம் போய் சேர்வதற்கு பயன்படும் மாரத்தான் மாதிரியான நீண்ட தூர ஓட்டப்பந்தயத்துக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

இந்த போட்டிகளில் வெல்பவர்களுக்கு வெற்றி வீரர் என்ற பட்டத்தோடு ஆலிவ் மரக்கிளையால் செய்த கிரீடமும் சூட்டப்படும். கிரேக்கர்களால் விமரிசையாக கொண்டாடப்பட்ட இந்த ஒலிம்பிக் போட்டிக்கு ரோமானியர்களுடைய படையெடுப்பால் பெரிய பாதிப்பு ஏற்பட்டது. ரோமானியர்களின் படையெடுப்பால் பாதிக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிக்கு கி.பி.393ம் ஆண்டில் ரோமானிய பேரரசர் முதலாம் தியோடோசியஸ் தடை விதித்தார். அவருக்கு அடுத்து ஆட்சி பொறுப்ப ஏற்ற அவருடைய மகன் இரண்டாம் தியோடோசியஸ் உத்தரவால் ஒலிம்பிக் போட்டி நடந்த இடங்கள் எல்லாம் இடிக்கப்பட்டது.

ஒலிம்பிக்கையே எல்லாரும் மறந்து போன நிலையில் 1,400 வருஷத்துக்கு பிறகு பிரான்ஸ் நாட்டு வரலாற்று ஆய்வாளரும், கல்வியாளருமான பியர்ரே டி கோபர்ட்டின் ஒலிம்பிக்கின் மகத்துவத்தை ஆராய்ந்து அதை நவீன ஒலிம்பிக் போட்டியாக புதுப்பித்தார். இடைவிடாத முயற்சியால் பல நாட்டு பிரதிநிதிகளை ஒன்றுதிரட்டி 1894-ல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை உருவாக்கினார். அதைத் தொடர்ந்து ஒலிம்பிக் விளையாட்டின் தாயகமான கிரீஸ் நாட்டில் நவீன ஒலிம்பிக்கின் முதல் போட்டியை நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் நவீன ஒலிம்பிக் போட்டி 1896-ல் கிரீஸ் தலைநகரான ஏதென்ஸில் ஏப்ரல் 6 - 15 வரை நடந்துது. இதில் டென்னிஸ், நீச்சல், துப்பாக்கி சுடுதல், ஜிம்னாஸ்டிக்ஸ், தடகளம், சைக்கிளிங், பளு தூக்குதல், மல்யுத்தம், வாள் சண்டை என 9 போட்டிகள் நடத்தப்பட்டது. 14 நாடுகளைச் சேர்ந்த 241 வீரர்கள் இதில் பங்கேற்றார்கள்.

02. ஒலிம்பிக் சின்னத்துக்கான அர்த்தம்

ஒலிம்பிக் சின்னம் ஐந்து நிறங்களால் ஆன வளையங்கள் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டு இருக்கும். நவீன ஒலிம்பிக்கின் தந்தையான பியர்ரே டி கோபர்ட்டின் இதை வடிவமைத்தார். இது ஆசியா, ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா என உலகின் ஐந்து முக்கிய கண்டங்களை குறிப்பதாகும். கொடி வெள்ளை நிறத்தில் எந்த பார்டரும் இல்லாமல் இருக்கும். இதற்கு நடுவில் ஐந்து வளையங்கள் இருக்கும். இதில் இருக்கும் நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை இந்த 6 நிறங்களில் உள்ள ஏதேனும் ஒரு நிறம் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தேசியக் கொடியிலும் இருக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன். ஆனால் முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்ற உலக நாடுகளின் கொடியில் இருந்த பொதுவான நிறங்களை வைத்து அந்த வளையங்களுக்கு நிறம் தேர்வு செய்யப்பட்டது எனவும் கூறப்படுகிறது. இதில் அந்த வளையங்கள் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டிருக்குறதுக்கு காரணம், இந்த ஒலிம்பிக் போட்டியோட அடிப்படையே மக்களுக்கு இடையில் விளையாட்டு மூலமாக நட்புறவை ஏற்படுத்துவதுதான்.

ஒலிம்பிக் போட்டியோட இன்னொரு முக்கியமான நிகழ்வு ஒலிம்பிக் ஜோதி. கிரேக்கர்களோட ஒலிம்பிக் தோன்றிய இடமான ஒலிம்பியாவில் சூரிய கதிர்கள் மூலமாக ஒலிம்பிக் ஜோதி ஏற்றினார்கள். இன்று வரை தொடர்ச்சியாக அது ஒரு மரபாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ’ஒலிம்பிக்கின் முக்கிய நோக்கம் அல்லது லட்சியமாக பார்க்கப்படுவது, போட்டியில் கட்டாயம் வெற்றி பெறவேண்டும் என்பது இல்லை, பங்கேற்று சிறப்பாக செயல்பட வேண்டும்’ என கூறிய்ள்ளார் நவீன ஒலிம்பிக்கின் நிறுவனரான டி கோபர்டின். ஒலிம்பிக்கின் அடிப்படை கோட்பாடு 'சைட்டியஸ், அல்டியஸ், பார்டியஸ்'. இது லத்தீன் மொழி வார்த்தைகள். இதற்கான அர்த்தம் விரைவு, உயர்வு, துணிவு. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் விளையாட்டு நட்சத்திரங்கள் எடுத்துக்கும் உறுதி மொழி, ’ஒலிம்பிக் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு, எவ்வித தவறான செயலிலும் ஈடுபடாமல், உண்மையான விளையாட்டு உணர்வுடன் நடந்து கொள்வேன். விளையாட்டின் பெருமையை காப்பதாகவும், நான் சார்ந்த நாட்டை பெருமைப்படுத்துவதாகவும் எனது செயல்பாடுகள் இருக்கும்’ என்று உறுதிமொழி எடுத்துக் கொள்வார்கள். இதுவே ஒலிம்பிக்கின் நோக்கத்தை நமக்கு தெளிவாக புரிய வைக்கிறது.

Also Read: "இதுதான் உண்மையான SportsmanShip": நெகிழ்ச்சியில் ஆழ்த்திய வீரர்கள் - டோக்கியோ ஒலிம்பிக்கில் நடந்தது என்ன?

03. இந்தியாவிலிருந்து முதலில் ஒலிம்பிக் சென்ற வீரர்கள்

1900-ல் பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் போட்டியில்தான் இந்தியா முதன்முதலில் பங்கேற்றது. மொத்தம் 24 நாடுகள் கலந்துக்கொண்ட அந்த ஒலிம்பிக்கில், ஆங்கிலோ-இந்தியரான நார்மன் பிரிச்சர்ட் இந்தியா சார்பாக கலந்துக்கிட்டு 200மீ ஓட்டப்பந்தயம், 200மீ தடை தாண்டுதல் ஆகிய பிரிவுகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதில் இந்தியா 17வது இடத்தைப் பிடித்தது. அதன் பிறகு 20 ஆண்டுகள் கழித்து 1920ல் பெல்ஜியத்தில் நடந்த ஒலிம்பிக்கில்தான் இந்தியா பங்கேற்றது. இந்தியா சார்பாக மொத்தம் 5 வீரர்கள் கலந்துக்கொண்டார்கள். புர்மா பானர்ஜீ என்ற தடகள வீரர், இந்திய அணிக்கு தலைமை தாங்கினார். 3 தடகள வீரர்களும் 2 மல்யுத்த வீரர்களும் இந்த அணியில் இருந்தார்கள். ஆனால் இந்தியா இந்த ஒலிம்பிக்கில் எந்த பதக்கமும் ஜெயிக்கவில்லை. அடுத்து 1924ல் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா முதல் முறையாக டென்னிஸில் பங்கேற்றது. போலே என்ற டென்னிஸ் வீராங்கனை, இந்திய அணியில பங்குபெற்ற முதல் பெண்.

13 வீரர்கள் பங்கேற்ற அந்த ஒலிம்பிக் போட்டியிலும் இந்தியா பதக்கம் வெல்லவில்லை. இதனையடுத்து 1928ல் நடந்த ஒலிம்பிக் இந்தியாவுக்கு ரொம்ப முக்கியமான போட்டி. இந்த ஒலிம்பிக் போட்டிக்கு ஒரு ஆண்டு முன்புதான் டாடா குழும நிறுவனரான தோராப்ஜி மிகவும் முயற்சித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலமாக இந்தியா அணி ஒலிம்பிக்கில் பங்கேற்றது. அதுமட்டுமில்லாமல் ஹாக்கியில் முதல் முறையா பங்கேற்று தங்கம் வென்றது. இந்த 1928ல் ஒலிம்பிக் போட்டியில் இந்த மாதிரி நிறைய சுவாரஸ்யமான முதல் முறை நிகழ்வுகள் நடந்துது. இந்தப்போட்டியில்தான் முதல் முறையாக ஒலிம்பிக் ஜோதி ஏற்றப்பட்டது. அதே மாதிரி விளையாட்டு வீரர்களோட அணிவகுப்பு நிகழ்வும் இந்த போட்டியில் தான் அறிமுகபடுத்தப்பட்டது. இந்த போட்டியில ஜிம்னாஸ்டிக்ஸ், தடகளத்தில் பெண்கள் அனுமதிக்கப்பட்டதால் கலந்துக்கொண்ட பெண்களின் எண்ணிக்கை இரட்டிப்பானது. இதையெல்லாம் விட ஒரு முக்கியமான ‘முதல்முறை நிகழ்வு’ என்னவென்றால், இந்தப் போட்டியில்தான் முதல் முறையாக கோகோ கோலா ஸ்பான்ஸரா இருந்தது.

Also Read: “பீட்ஸா சாப்பிட ஆசை”: வெள்ளி மங்கை மீராபாய்க்கு வாழ்நாள் முழுவதும் இனி பீட்ஸா இலவசம் - Dominos அறிவிப்பு!