Sports
வெல்க இந்தியா..! புது வரலாற்றை எழுதியிருக்கும் இந்திய ஹாக்கி அணிகள்!!
டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஹாக்கி அணிகள் மேஜிக்கை நிகழ்த்தி வருகின்றனர். ஆண்கள் அணி நேற்று அரையிறுதிக்கு தகுதிப்பெற்றிருந்த நிலையில் இன்று பெண்கள் ஹாக்கி அணியும் அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறது. அதுவும் வலுவான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி!
க்ரூப் சுற்றில் ஆஸ்திரேலியாவிடம் மிக மோசமாக தோற்றிருந்தது இந்திய ஆண்கள் ஹாக்கி அணி. ஆனால், அந்த தோல்வியிலிருந்து மீண்டு வந்து மீதமிருந்த அத்தனை போட்டிகளிலும் வென்று காலிறுதிக்கு வந்திருந்தது. காலிறுதியில் க்ரேட் பிரிட்டனை எதிர்கொண்டது இந்தியா. சமபலம் வாய்ந்த அணிகளாகவே இரண்டு அணிகளும் இருந்தது.
ஆனால், முதல் 15 நிமிடத்திலிருந்தே ஆட்டத்தை தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர் இந்திய வீரர்கள். 7 வது நிமிடத்தில் தில்ப்ரீத் சிங் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து 16 வது நிமிடத்தில் இரண்டாவது கோலை குர்ஜந்த் சிங் அடித்தார். கடைசி நிமிடங்களில் ஹர்திக் சிங் ஒரு கோலை அடித்தார். பதிலுக்கு பிரிட்டன் ஒரு கோலை மட்டுமே அடித்தது. கோல் கீப்பரான ஸ்ரீஜேஸ் மிகச்சிறப்பாக பல கோல் வாய்ப்புகளை தடுத்திருந்தார். இதனால் இந்திய அணி 3-1 என வென்றிருந்தது.
கடைசியாக 1972 இல் இந்திய ஆண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியிருந்தது. கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்கு பிறகு இப்போதுதான் மீண்டும் அந்த வாய்ப்பு சாத்தியப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக்கில் 11 பதக்கங்களை வென்றிருக்கும் ஆண்கள் ஹாக்கி அணி மீண்டும் தங்களது பதக்க வேட்டைக்காக அரையிறுதியில் காலடி எடுத்து வைத்துள்ளது.இதே மாதிரியே பெண்கள் அணியும் ஒரு வரலாற்று சாதனை படைத்துள்ளது.
ஹாக்கியில் ஆஸ்திரேலிய பெண்கள் அணி பலமிக்கதாக கருதப்படுகிறது. மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்றிருக்கிறார்கள். 2 உலகக்கோப்பைகளை வென்றிருக்கிறார்கள். 4 முறை காமென்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்றிருக்கிறார்கள். இந்த டோக்கியோ ஒலிம்பிக்கிலும் க்ரூப் சுற்றில் ஆடிய அத்தனை போட்டிகளையும் வென்றிருக்கிறார்கள். மொத்தம் 13 கோல்களை அடித்திருக்கிறார்கள்.
இப்படியான எந்த ரெக்கார்டுமே இந்திய ஹாக்கி அணிக்கு கிடையாது. 1980 மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் அணி கலந்துக்கொண்டது. அதில் நான்காம் இடம்பிடித்து பதக்க வாய்ப்பை இழந்திருந்தது. அதன்பிறகு, பல ஆண்டுகளாக இந்திய அணியால் ஒலிம்பிக்கிற்கு தகுதியே பெற முடியவில்லை. 2016 ல்தான் மீண்டும் ஒலிம்பிக்கிற்கு தகுதிப்பெற்றது. ஆனால், அந்த ரியோ ஒலிம்பிக்கிலுமே கடைசி இடமே பெற்றிருந்தது. ஆஸ்திரேலியாவுடன் க்ரூப் சுற்றில் மிக மோசமாக தோற்றிருந்தது.
இந்த டோக்கியோ ஒலிம்பிக்கிலும் க்ரூப் சுற்றில் முதல் மூன்று போட்டிகளில் மோசமாக தோற்றிருந்தது. அயர்லாந்து மற்றும் சவுத் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் வென்று ஒரு வழியாக காலிறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றது.
காலிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள வேண்டுமென்றவுடனே, பலரும் இந்தியா எப்படியும் தோற்றுவிடும் என்றே கணித்திருந்தனர். ஆனால், நடந்திருப்பது வேறு. பலமிக்க வீழ்த்தவே முடியாத ஆஸ்திரேலியாவை 1-0 என வீழ்த்தி அதிர்ச்சியளித்திருக்கிறது இந்திய அணி.
இரண்டாவது 15 நிமிடத்தில் கிடைத்த ஒரு பெனால்ட்டி வாய்ப்பை இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் கோலாக மாற்றினார். இந்த லீடுக்கு பிறகு இந்திய அணி ரொம்பவே ஜாக்கிரதையாக தற்காப்பு ஆட்டம் ஆட தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் அட்டாக்குகளை மிகச்சிறப்பாக தடுத்திருந்தது. ஆஸ்திரேலியாவுக்கு 7 பெனால்ட்டி வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால், ஆஸ்திரேலியாவாக் எதையுமே கோலாக மாற்ற முடியவில்லை. இறுதியில் 1-0 என இந்திய அணி வென்றது.
இந்த தோல்வியை ஆஸ்திரேலியா எதிர்பார்த்திருக்கவே இல்லை. ஆஸ்திரேலிய வீராங்கனைகள் ஏமாற்றம் தாங்க முடியாமல் மைதானத்தில் அமர்ந்து கண்ணீர் சிந்தினர். அதே மைதானத்தில் இந்திய வீராங்கனைகள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தனர்.
முதல் முறையாக ஒலிம்பிக்கின் அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்திருக்கிறது இந்திய மகளிர் அணி. ஒரு வெண்கல பதக்கத்தையாவது இரண்டு அணிகளும் போராடி வென்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கையை இந்தியா கொடுத்திருக்கிறது. வெல்க இந்தியா!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!