Sports
வட்டு எறிதலில் இன்ப அதிர்ச்சி கொடுத்த இந்திய வீராங்கனை.. பதக்கம் வெல்லப்போகும் கமல்ப்ரீத்.. யார் இவர்?
டோக்கியோ ஒலிம்பிக்கில் வட்டு எறிதல் போட்டியில் இந்தியா சார்பில் களமிறங்கிய கமல்ப்ரீத் கவுர் சிறப்பாக செயல்பட்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கில் தடகள போட்டிகள் நேற்றிலிருந்து தொடங்கியிருக்கின்றது.
இன்று பெண்களுக்கான வட்டு எறிதல் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா சார்பில் சீமா புனியாவும் கமல்ப்ரீத் கவுரும் கலந்துக் கொண்டனர். 37 வயதாகும் சீமா புனியாவிற்கு இது நான்காவது ஒலிம்பிக்ஸ். ஏற்கனவே காமென்வெல்த் போட்டிகளில் தங்கம் உட்பட பல பதக்கங்களை வென்றிருக்கிறார். ஆசிய போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார். சில பதக்கங்களையும் வென்றிருக்கிறார்.
ஆனால், கமல்ப்ரீத் கவுருக்கு இந்தளவுக்கு அனுபவம் கிடையாது. அவருக்கு 25 வயதே ஆகிறது. ஆசிய போட்டிகள் மற்றும் காமென்வெல்த் போட்டிகளில் பங்கேற்றதில்லை. தேசிய மற்றும் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றிருக்கிறார். இன்று நடைபெற்ற போட்டியில் அனுபவமிக்க சீமாவை விட கமல்ப்ரீத் கவுரே மிகச்சிறப்பாக செயல்பட்டார். சீமா புனியாவிற்கு வழங்கப்பட்ட மூன்று வாய்ப்புகளில் இரண்டில் மட்டுமே சரியாக வட்டை எறிந்திருந்தார். அதிலும், அடுத்த சுற்று தகுதிக்கு தேவையான 64 புள்ளிகளை அவரால் எடுக்க முடியவில்லை.
பல வீராங்கனைகளுமே இப்படி தங்களுக்கு வழங்கப்பட்ட மூன்று வாய்ப்புகளை சரியாக வீச தடுமாறியிருந்தனர். ஆனால், கமல்ப்ரீத் கவுர் தனக்கு வழங்கப்பட்ட மூன்று வாய்ப்புகளிலும் ஃபவுலே வாங்காமல் சிறப்பாக வட்டை வீசியிருந்தார். ஒவ்வொரு வாய்ப்பின் போதும் தன்னுடைய முந்தைய வீச்சை முந்தி அசத்தியிருந்தார்.
முதல் வாய்ப்பில் வட்டை 60.29 மீட்டர் தூரத்திற்கு வீசியிருந்தார். இரண்டாவது வாய்ப்பில் 63.97 மீட்டருக்கு வீசினார். தகுதிக்கு தேவையான 64 புள்ளிகளுக்கு 0.3 மட்டுமே குறைவு. அதையும் அடுத்த வாய்ப்பில் வீசி மிரட்டினார். மூன்றாவது வாய்ப்பில் சரியாக 64 புள்ளிகளை எடுத்து இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார். புள்ளிகளின் அடிப்படையில் இரண்டாமிடமும் பிடித்திருக்கிறார்.
பல இந்திய வீரர்/வீராங்கனைகளும் சுமாராக செயல்பட்டு ஏமாற்றம் அளித்த நிலையில், சர்ப்ரைஸாக இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் கமல்ப்ரீத் கவுர். இறுதிப்போட்டி திங்கள் கிழமை நடைபெற இருக்கிறது. கமல்ப்ரீத் ஏற்கனவே 65 மற்றும் 66 புள்ளிகளுக்கு மேல் வீசி தேசிய ரெக்கார்டுகளை வைத்துள்ளார். இதனால் இறுதிப்போட்டியிலும் வென்று பதக்கத்தை வெல்வார் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
-உ.ஸ்ரீ
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!