Sports
ஜப்பானின் யமகுச்சிக்கு எதிராக கடுமையான போராட்டம்.. அரையிறுதிக்கு முன்னேறினார் பி.வி.சிந்து! #OLYMPICS
அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பல வீரர்/வீராங்கனைகளும் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருக்க பி.வி.சிந்து மட்டும் அட்டகாசமாக பெர்ஃபார்ம் செய்து வருகிறார். டோக்கியோ ஒலிம்பிக்கின் க்ரூப் பிரிவுகளில் ஆடிய மூன்று போட்டிகளிலும் வென்று தனது க்ரூப்பில் முதலிடம் பிடித்து முதல் ஆளாக காலிறுதிக்கு தகுதிப்பெற்றிருந்தார்.
காலிறுதி போட்டியில் இன்று ஜப்பானிய வீராங்கனையான யமகுச்சியுடன் மோதினார். சொந்த மண்ணை சேர்ந்த வீராங்கனை என்பதால் யமகுச்சி மீது பெரிய எதிர்பார்ப்பு. ஆனால், ரெக்கார்டுகள் எதுவும் அவருக்கு சாதகமாக இல்லை. இதுவரை 18 முறை பி.வி.சிந்துவும் யமகுச்சியும் நேருக்கு நேர் மோதியிருக்கின்றனர். அதில் பி.வி.சிந்துவே அதிகபட்சமாக 11 முறை வென்றுள்ளார். 7 முறை மட்டுமே யமகுச்சி வென்றிருக்கிறார்.
போட்டியின் முதல் செட்டிலேயே சிந்து தனது ஆதிக்கத்தை காட்ட தொடங்கிவிட்டார். இரண்டு மூலைகளிலும் மாற்றி மாற்றி ஸ்மாச் செய்து யமகுச்சியை ஓடவிட்டார். பல நேரங்களில் சிந்துவின் ஷாட்களை ரிட்டர்ன் செய்வதற்கு தடுமாறி கீழேயெல்லாம் விழுந்தார். முதல் செட்டை கச்சிதமாக 21-13 என்ற கணக்கில் வென்றார் சிந்து.
இரண்டாவது செட்டில்தான் இருவருக்குமிடையே கடுமையான போட்டி நிலவியது. யமகுச்சி தனது மொத்த ஆற்றலையும் வெளிக்காட்ட தொடங்கினார். தொடக்கத்தில் சிந்து நல்ல லீட் எடுப்பது போல தெரிந்தது. 14-8 என்ற நிலையிலிருந்தார் சிந்து. ஆனால், இதன்பிறகு யமகுச்சியின் ஆட்டம் வெறித்தனமாக மாறியது.
தொடர்ந்து லாங் ரேலிக்களாக கொண்டு சென்று சிந்துவை ரொம்பவே களைப்படைய செய்து தொடர்ந்து புள்ளிகளை பெற்று ஒரு கட்டத்தில் லீடே எடுத்தார். 18-20 என கேம் பாயிண்ட்டிற்காக யமகுச்சி காத்திருக்கும் போது இரண்டு மூன்று வலுவான ஸ்மாஸ்களை அடித்து சிந்து மீண்டு வந்தார். இறுதியாக 22-20 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் வென்றார். இந்த செட்டில் சிந்து காட்டிய போராட்ட குணத்திற்கே அவருக்கு அவருக்கு ஒரு பதக்கம் கொடுக்கலாம்.
அழுத்தமான பரபரப்பான சூழலிலும் நிதானத்தை இழக்காமல் இருக்கும் குணம் பாராட்டுக்குரியது. 16-16 என இருக்கும் போது இரண்டு அவுட் ஷாட்களை அடித்து யமகுச்சிக்கு பாயிண்டை கொடுத்தார் சிந்து. யமகுச்சி இரண்டாவது செட்டை வெல்லும் நிலையில் இருந்தார். அந்த நிலையிலும் யமகுச்சியின் ரொம்பவே க்ளோஸான ஒரு அவுட் ஷாட்டை துணிச்சலாக அடிக்காமல் விட்டு பாயிண்டை எடுத்தார். இந்த நிதானம்...இந்த தைரியம்...இந்த போராட்டம் அதுதான் சிந்து.
டோக்கியோ ஒலிம்பிக்கில் சிந்து இதுவரை ஆடியிருக்கும் நான்கு போட்டிகளிலுமே எதிராளிக்கு ஒரு செட்டை கூட கொடுக்கவில்லை. நேர் செட் கணக்கில் அத்தனை போட்டிகளையும் வென்று அசத்தியிருக்கிறார்.
இப்போது அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். இன்னும் ஒரு போட்டியில் வென்றால் போடியத்தில் ஏறிவிடுவார். இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக இரண்டு முறை பதக்கம் வெல்லும் வீராங்கனை எனும் பெருமையையும் பெறுவார்.
-உ.ஸ்ரீ
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே செல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!