Sports
பரபரப்பின் உச்சத்தை தொட்ட போட்டி.. கொரிய வீரரை வீழ்த்தி வரலாறு படைத்த ‘அடானு தாஸ்’ : குவியும் பாராட்டு !
இந்தியா சார்பில் வில்வித்தையில் பெரிய நம்பிக்கையாக இருப்பவர் அடானு தாஸ். 2016 ரியோ ஒலிம்பிக்கிலும் பங்கேற்று பதக்கத்தை வெல்லாவிட்டாலும் சிறப்பாக ஆடி கவனத்தை ஈர்த்திருந்தார். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளில் இன்னும் தனது திறமைகளை வளர்த்துக்கொண்டு மிகச்சிறப்பாக பல தொடர்களில் ஆடியிருந்தார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள இந்திய வீரர்களின் பட்டியலில் இவருடைய பெயரும் இருந்தது. ஆனால், டோக்கியோவில் அவருடைய முதல் பெர்ஃபார்மென்ஸ் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. 64 வீரர்கள் பங்கேற்றிருந்த ரேங்கிங் சுற்றில் 34 வது இடமே பிடித்திருந்தார். இந்தியா சார்பில் வில்வித்தையில் பங்கேற்றிருந்த மூன்று வீரர்களில் ரொம்பவே சுமாராக ஆடியிருந்தது அடானு தாஸ்தான்.
இந்த சுமாரான பெர்ஃபார்மென்ஸால் வில்வித்தை கலப்பு இரட்டையர் பிரிவில் தனது மனைவியான தீபிகா குமாரியுடன் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார். ஆனால், முக்கியமான போட்டிகளில் மீண்டு வந்து பழையபடியே மிரட்ட தொடங்கியிருக்கிறார். இன்று காலை சீன தைபே வீரருக்கு எதிரான போட்டியில் 6-4 என்ற நிலையில் அவரை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியிருந்தார்.
வில்வித்தையை பொறுத்தவரை கொரிய வீரர்கள்தான் அதில் பேரரசர்கள். அத்தனை ஒலிம்பிக்கிலும் தங்கப்பதக்கம் அவர்களுடைய கழுத்தையே அலங்கரிக்கும். அடானு தாஸ் ரேங்கிங் பிரிவில் சுமாராக ஆடியதால் கொரிய வீரர்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரும். அப்படியான சூழலில் அடானுதாஸால் அவர்களை வெல்வது கடினம் என்றே கணிக்கப்பட்டிருந்தது.
ஆனால், அடானு தாஸ் அந்த கணிப்புகளையெல்லாம் உடைத்தெறிந்து வரலாறு படைத்துவிட்டார். மூன்று முறை பதக்கம் வென்றிருந்த ஓ ஜின் ஹியெக் எனும் தென் கொரிய வீரரை வீழ்த்தி அடுத்தச்சுற்றுக்கு முன்னேறி இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
பரபரப்பின் உச்சத்தை தொட்டிருந்தது இந்த ஆட்டம். முதல் செட்டை கொரிய வீரர் வெல்ல, அடுத்த இரண்டு செட்டும் டை ஆனது. கடைசி செட்டை அடானு தாஸ் வென்றே ஆக வேண்டிய சூழலில், கடைசி செட்டில் கடைசி வாய்ப்பில் இலக்கின் மையத்தை துளைத்து 10 புள்ளிகளை பெற்று 4-4 என போட்டியை டை ஆக்கினார். டை ப்ரேக்கர் செட் தொடங்கியது. இதில் மூன்று வாய்ப்புகளிலும் இருவரும் 10,9,9 என ஒரே மாதிரியாக ஸ்கோர் செய்தனர். இதனால் போட்டி மீண்டும் டை ஆகி சூட் அவுட்டுக்கு சென்றது.
சூட் அவுட்டில் ஒரே ஒரு வாய்ப்பு மட்டுமே வழங்கப்படும். இதில் கொரிய வீரர் 9 புள்ளிகளை பெற்றார். 10 எடுத்தால் வரலாறு படைத்துவிடலாம் என்ற நிலையில், அழுத்தமான அந்த சூழலில் பொறுமையாக நேரம் எடுத்து இலக்கின் மையத்தை துல்லியமாக குறிவைத்து துளைத்தார் அடானுதாஸ். 10 புள்ளிகள் வழங்கப்பட அடானு தாஸ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டுவிட்டார்.
ஒரு கொரிய வீரரை வீழ்த்துவதென்பது பலருக்கும் அசாத்திய விஷயமாக இருக்கும் போது, அடானு தாஸ் மிகச்சிறப்பாக ஆடி அவரை வீழ்த்தி வரலாறு படைத்திருக்கிறார். கொரிய வீரரையே ஒருவரால் வீழ்த்த முடியுமானால் அவரால் பதக்கத்தையும் எளிதில் வெல்ல முடியும். அடானு தாஸ் சீக்கிரமே இந்தியாவிற்கு ஒரு பதக்கத்தை வென்று கொடுப்பார்.
-உ.ஸ்ரீ
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?