Sports

ஒலிம்பிக்கில் இதுவரை 3 தங்கம் வென்று அசத்திய ‘கொசவோ’: அடிமைப்படுத்தப்பட்ட தேசத்தின் எழுச்சி வெற்றி!

டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் ஜூடோ போட்டியில் இரண்டு தங்கப் பதக்கம் வென்று சாதனைப்படைத்துள்ளது கொசவோ நாடு. ஜூடோ 48 கிலோ எடைப்பிரிவில் கொசவோ நாட்டைச் சேர்ந்த தீஸ்திரி க்ராஸ்னிக், ஜப்பான் வீராங்கனையை வீழ்த்தி தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார். அதேபோல் 57 கிலோ பிரிவில் ஜாகோவோவும் தங்கம் வென்றுள்ளார்.

இவர்களின் இந்த வெற்றியை கொசவோ நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தானே வெற்றி பெற்றதாக நினைத்துக் கொண்டாடி வருகிறார்கள். இந்த வெற்றி கொண்டாட்டத்திற்குக் காரணம், கொசவோ நாட்டிற்கு அடிமை சமூகத்திற்கான வரலாறு இருப்பதே. இதனால் தான் இந்த வெற்றியை தங்களின் எழுச்சியாக நினைத்துக் கொண்டாடி வருகிறார்கள்.

13ம் நூற்றாண்டுக்கு முன்பு கொசவோ செர்பியாவின் கட்டுப்பாட்டிலிருந்தது. அதன் பின்னர் துருக்கி பேரரசின் கீழ் சென்றது. மேலும் செர்பியா கிறிஸ்தவர்கள் அதிகம் இருக்கும் நாடு. துருக்கி வருகைக்குப் பிறகு இஸ்லாமிய பண்பாடுகள் கொசவோ மக்களைக் கவர்ந்து கொண்டது. இதனால் செர்பியாவுக்கும், கொசவோவுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தமாக இருந்தது.

பின்னர், 19ம் நூற்றாண்டின் துருக்கி பலவீனமாகியது. இதனால் மீண்டும் செர்பியாவின் கையில் சிக்கிக் கொண்டது கொசவோ. இதன் பின்னர் தொடர்ந்து செர்வியாவுக்கும், கொசவோவுக்கும் எப்போதும் மோதல் போக்கு இருந்துவந்தது. தாங்கள் தனி நாடாகச் சுதந்திர காற்றைச் சுவாசிக்க வேண்டும் என தொடர்ந்து அடிமைச் சங்கிலியை உடைக்கத் பல ஆண்டுகளாக அந்நாட்டு மக்கள் போராடிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், கொசவோ மக்களின் நீண்ட நெடிய போராட்டத்தால், கடந்த 2008ம் ஆண்டு கொசவோ விடுதலை பெற்ற சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது. பல நாடுகளை கொசசோவை அங்கீகரித்தாலும் இன்னும் செர்பியா உள்ளிட்ட பல நாடுகளை இவர்களை நாடாகவே அங்கீகரிக்காமல் அலட்சியம் செய்து வருகிறார்கள்.

இப்படி ஒரு அடிமைச் சங்கிலியை உடைத்த வரலாற்றை உடைய கொசவோ, டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதை அந்த நாட்டு மக்கள் கொண்டாடுகிறார்கள். மேலும் கொசவோ நாடு சுதந்திரம் பெற்ற பிறகு 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் முதல் முதலாக பங்கேற்றனர்.

இந்த ஒலிம்பிக்கிலும் ஜூடோவிலும் மஜ்லிந்தா மேல்மந்தி தனது நாட்டிற்காக முதல் தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்தார். தற்போது, தனது நாட்டிற்காக இரண்டாவது தங்கப் பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார் தீஸ்திரியா க்ராஸ்னிக்.

அதேபோல், ஜூடோ 57 கிலோ பிரிவில், கொசவோ நாட்டைச் சேர்ந்த ஜாகோவோ மூன்றாவது தங்கம் வென்றுள்ளார். நேற்று தீஸ்திரியா க்ராஸ்னிக் தங்கப் பதக்கம் வென்ற நிலையில், இன்று மற்றொரு வீராங்கனையும் தங்கம் வென்றுள்ளார்.

கொசவோ சுதந்திரம் பெற்று 13 ஆண்டுகளில் இரண்டு ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு மூன்று தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. அதுவும் ஜூடோவில் மட்டுமே இந்த மூன்று தங்கமும் கிடைத்துள்ளது.

எத்தனையோ நாடுகள் ஒலிம்பிக்கில் பங்கேற்று பதக்கம் வாங்காமல் வெறும் கையோடு திரும்பும் சூழலில், கொசவோ நாட்டு வீராங்கனைகள் அடுத்தடுத்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கத்தைத் தட்டி அந்நாட்டுக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.

இந்த டோக்கியோ ஒலிம்பிக் வெற்றியின் மூலம் தங்களை அங்கீகரிக்காத நாடுகளுக்கு மத்தியில் தனது நாட்டின் பெயரை உலகம் அறியச் செய்துள்ளார் தீஸ்திரியா க்ராஸ்னிக் மற்றும் ஜாகோவோ வீராங்கனைகள். இவர்களுக்கு உலகம் முழுவதிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Also Read: டோக்கியோ ஒலிம்பிக்கின் இன்றைய நாள் : பதக்கத்தை எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு தொடர் தோல்வி - ஏமாற்றம் !