Sports
நோய்த்தொற்று... போராட்டம்... எச்சரிக்கை... தடைகளைத் தாண்டி தடதடக்கப்போகும் டோக்கியோ ஒலிம்பிக்ஸ்!
பல தடைகளைத் தாண்டி தடம்பதிக்க இருக்கிறது டோக்கியோ ஒலிம்பிக்ஸ். இன்று முதல் ஆகஸ்ட 8 வரை 206 நாடுகள் 33 போட்டிகளில் 339 விதமான பிரிவுகளில் பங்கேற்க இருக்கின்றனர். பலவித கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் டோக்கியோவில் திருவிழாவாக தொடங்கவிருக்கிறது ஒலிம்பிக்ஸ்.
2032 ஒலிம்பிக்ஸ் பிரிஸ்பேனில் நடைபெறும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தெரிவித்துள்ளது. இதேபோலத்தான், சில ஆண்டுகளுக்கு முன்பே 2020 ஒலிம்பிக்கிற்கு டோக்கியோ தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. ஜப்பானும் ஆர்வத்தோடு ஒலிம்பிக்கிற்கான முன்னேற்பாடுகளில் இறங்கி சிறப்பாக செய்திருந்தது. இந்நிலையிலேயே திடீரென உலகம் முழுவதும் கொரோனா பரவல் வேகமெடுத்ததால் 2020 ஒலிம்பிக் ஒத்திவைக்கப்பட்டது. ஒலிம்பிக்கை நடத்தலாமா? வேண்டாமா? என்கிற நீண்ட விவாதத்திற்கு பிறகு 2021 ஜுலையில் நடத்த திட்டமிடப்பட்டது.
உலகம் முழுவதுமே கொரோனா பரவலின் வேகம் கொஞ்சம் குறைய ஒலிம்பிக்கிற்கான நம்பிக்கை கூடியது. முன்னேற்பாடுகள் வேகமெடுத்தன. வீரர்/வீராங்கனைகள் பரபரப்பாக இறுதிக்கட்ட பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கினர்.
இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து மீண்டும் கொரோனா பரவலின் வேகம் அதிகரித்தது. ஜப்பானிலும் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒலிம்பிக்கிற்கு மீண்டும் பிரச்சனை உண்டானது. மக்களின் உயிரைப் பணயம் வைத்து விளையாட்டு போட்டிகள் எதற்கு? என மக்கள் வீதியில் இறங்கி போராடினர். மருத்துவர்கள் குழுவும் உலக சுகாதார நிறுவனம் தங்களின் எச்சரிக்கைகளை வெளியிட்டது. ஆனாலும், இந்த முறை ஒலிம்பிக்ஸ் தள்ளிப்போனால் அடுத்தடுத்த ஒலிம்பிக்ஸ்கள் பாதிக்கப்படும் என்பதால் ஒலிம்பிக்கை நடத்திவிடுவதில் சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்பு உறுதியாக இருந்தது. ஜப்பானிய அரசும் அதிக பொருட்செலவு செய்திருந்ததால் ஒலிம்பிக்கை நடத்துவதில் உறுதியாக இருந்தது.
பார்வையாளர்கள் இல்லாமல் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேதி நெருங்க நெருங்க பரபரப்பு கூடியது. வீரர்களும் பயிற்சியாளர்களும் டோக்கியோவில் முகாமிடத் தொடங்கினர். இன்றைக்கு வரை போட்டிகளில் பங்கேற்கவிருந்த வீரர்/வீராங்கனைகள், பயிற்சியாளர்களில் 90 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா பரவல் அதிகமாகும் பட்சத்தில் திடீரென இடையிலேயே தொடர் நிறுத்தப்படவும் வாய்ப்பிருப்பதாகவே சொல்லப்படுகிறது. இத்தனை தடைகளுக்கு பிறகும், இன்று டோக்கியோவில் தொடக்கவிழாவோடு கோலாகலமாக தொடங்கவிருக்கிறது ஒலிம்பிக்ஸ். வீரர்/வீராங்கனைகளுக்கும் சரி மக்களுக்கும் சரி எந்த பாதிப்புமின்றி இந்தத் தொடர் நடைபெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் இருக்கிறது.
நாளை முதல் அனைத்து நாடுகள் பதக்க வேட்டையை தொடங்கிவிடும். இந்தியாவும் இந்த முறை கூடுதல் நம்பிக்கையோடு களமிறங்குகிறது. இரட்டை இலக்கத்தில் பதக்கத்தை வென்று வரலாற்று சாதனை செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
-உ.ஸ்ரீ
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!