Sports

‘உலகக்கோப்பை ஹீரோ’ யாஷ்பால் சர்மா மரணம்... வருத்தத்தில் இந்தியா கிரிக்கெட் உலகம்!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான யாஷ்பால் சர்மா மாரடைப்பின் காரணமாக இயற்கை எய்தியிருக்கிறார். 66 வயதாகும் யாஷ்பால் சர்மா டெல்லியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று இந்த வருந்தத்தக்க சம்பவம் நடந்திருக்கிறது.

இந்தியாவில் கிரிக்கெட் இந்தளவுக்கு வேரூன்றியதற்கு 1983 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றதே காரணம். அந்த வெற்றிக்குப் பிறகுதான் இந்தியாவின் இண்டு இடுக்குகள் எங்கும் கிரிக்கெட் எனும் விளையாட்டு சென்று சேர்ந்தது.

அந்த உலகக்கோப்பையை பற்றி பேசும்போது வேறு எந்த வீரர்களை விடவும் கபில்தேவே முதலில் ஞாபகம் வருவார். அப்போதைய அணியின் கேப்டன் மற்றும் அந்த உலகக்கோப்பையில் சில அசாத்தியமான இன்னிங்ஸ்களை ஆடியிருந்தவர் என்பதால் இன்றைக்கும் உலகக்கோப்பை என்றால் கபில்தேவின் முகமே முதலில் ஞாபகம் வரும். ஆனால், கபில்தேவ் மட்டுமில்லை வேறு சில வீரர்களின் பங்களிப்பும் இந்த உலகக்கோப்பையில் முக்கியமானதாக இருந்திருக்கிறது. அதில் குறிப்பிடத்தக்கவர் யாஷ்பால் சர்மா.

1983 உலகக்கோப்பையில் இந்தியா சார்பில் அதிக ரன்களை எடுத்த இரண்டாவது வீரர் இவரே. கபில்தேவ் 303 ரன்களை எடுத்து முதலிடம் பிடித்திருந்தார். அவருக்கு அடுத்ததாக 240 ரன்களை குவித்து யாஷ்பால் சர்மா அசத்தியிருந்தார். குறிப்பாக, அவர் ஆடிய இரண்டு இன்னிங்ஸ்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

80களில் வெஸ்ட் இண்டீஸ் அணிதான் கிரிக்கெட் உலகில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருந்தது. இந்திய அணி ஒரு கத்துக்குட்டி அணி. ஆனால், 1983 உலகக்கோப்பையின் முதல் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸை தோற்கடித்திருந்தது இந்திய அணி. அதற்கு காரணமாக இருந்தவர் யாஷ்பால் சர்மா. மற்ற பேட்ஸ்மேன்கள் சொதப்பியபோதும் 89 ரன்களை எடுத்து இந்திய அணியை நல்ல நிலையை எட்டச் செய்தார். அவரின் இந்த ஆட்டம்தான் போட்டியின் முடிவையே மாற்றியது. உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸை இந்தியா வீழ்த்துவதற்கான நம்பிக்கை விதை இங்கேயே விதைக்கப்பட்டது.

அதேமாதிரி, முக்கியமான அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக டார்கெட்டை சேஸ் செய்த போது நின்று நிதானமாக ஒரு அரைசதத்தை அடித்து இந்தியாவை வெற்றி பெறச் செய்திருப்பார். இந்த போட்டியில் பாப் வில்ஸின் பந்துவீச்சில் ஆஃப் சைடில் நகர்ந்து வந்து ஸ்கொயர் லெகில் இவர் அடித்த பிரம்மாண்ட சிக்சர் இன்றைக்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.

சூழலை உணர்ந்து அணிக்கு தேவையான முறையில் ஆடிக்கொடுப்பதில் வல்லவராக விளங்கியிருக்கிறார் யாஷ்பால் சர்மா. அவரால் நின்று நிதானமாகவும் ஆட முடியும். பெரிய சிக்சர்களை அடித்து அதிரடியாகவும் ஆட முடியும். மேலும், ஒரு சிறந்த ஃபீல்டராகவும் கலக்கியிருக்கிறார். 80களில் பெரிதாக எந்த வீரரும் ஃபீல்டிங்கில் பெரிதாக கவனம் செலுத்தமாட்டார்கள். அப்போதே இவர் ஃபீல்டிங்கில் சில ஆச்சர்யமான விஷயங்களை செய்திருக்கிறார். உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ஆலன் லாம்பை ரன் அவுட் ஆக்கிய விதம் இன்றளவும் பாராட்டப்படுகிறது.

1983 உலகக்கோப்பையில் ஒரு வீரராக ஜொலித்த இவர், ஓய்வுக்குப் பிறகு இந்திய அணியின் தேர்வுக்குழு உறுப்பினராகவும் சிறப்பாகச் செயல்பட்டார். 2011 உலகக்கோப்பை இந்திய அணியை தேர்வு செய்த ஐவர் குழுவில் இவரும் ஒருவர். இந்திய அணி வென்றிருக்கும் இரண்டு பெரிய உலகக்கோப்பைகளில் யாஷ்பால் சர்மாவின் பங்கு பெரிதாக இருக்கிறது.

இந்திய கிரிக்கெட்டிற்கு பெருமை சேர்த்த வெற்றிகளை பெற்றுத்தந்த யாஷ்பால் சர்மாவின் மறைவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 'அவர் ஒரு டீடோட்லர். உடற்பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்துபவர். அவருக்கு இப்படியொரு மாரடைப்பு ஏற்பட்டதை நம்பவே முடியவில்லை' என முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் தங்களின் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.

Also Read: “ஒரே ஒரு கோல்.. 28 ஆண்டு காத்திருப்பு” : கோபா அமெரிக்கா கோப்பையை வென்று சாதித்த ‘அர்ஜென்டினா’ !