Sports
“வினோதமாக யோசித்துச் செயல்படும் கோலி - சாஸ்திரி கூட்டணி” - கடுப்பான கபில்தேவ்!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தோற்ற பிறகும் இந்திய அணி இங்கிலாந்திலேயே இருக்கிறது. காரணம், அடுத்த மாதம் நடைபெற இருக்கும் இங்கிலாந்து தொடர். 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஆடிய பிறகே இந்திய அணி வீரர்கள் இங்கிலாந்திலிருந்து ஐ.பி.எல்-க்கு கிளம்புகின்றனர்.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் சுப்மன் கில்லும் ரோஹித் சர்மாவும் ஓப்பனர்களாக களமிறங்கியிருந்தனர். கடந்த ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஹோம் சீரிஸ்களிலும் இவர்களே ஓப்பனர்களாக களமிறங்கியிருந்தனர். பெரிதாக போற்றும் வகையில் ஆடாவிட்டாலும் மோசமில்லாத வகையில் கொஞ்சம் நன்றாகவே இந்த கூட்டணி ஆடியிருந்தது. அதனால், இங்கிலாந்து சீரிஸிலும் இதே கூட்டணியே ஓப்பனிங் இறங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், திடீர் திருப்பமாக சுப்மன் கில் காயம் காரணமாக இங்கிலாந்து சீரிஸிலிருந்து முழுமையாக விலகுவதாக அறிவிப்பு வெளியானது. இதனால், ரோஹித்துடன் எந்த வீரர் ஓப்பனிங் இறங்குவார் எனும் கேள்வி எழுந்திருந்தது. 20 பேர் கொண்ட இந்திய அணியின் குழுவிலேயே மேலும் 3 ஓப்பனர்கள் இருக்கின்றனர். கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் மற்றும் ரிசர்வ் ப்ளேயரான அபிமன்யு ஈஸ்வரன் என மூன்று வீரர்கள் இருக்கின்றனர்.
கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் இருவரும் இந்திய அணிக்கு ஓப்பனிங் ஆடிய அனுபவம் உள்ளவர்கள். ஆஸ்திரேலிய சீரிஸில் சொதப்பியதால் மயங்க் அகர்வால் ஓரங்கட்டப்பட்டிருந்தார். காயம் காரணமாக சமீபமாக டெஸ்ட் போட்டிகளில் ஆடாமல் இருந்ததால் கே.எல்.ராகுல் ஓரங்கட்டப்பட்டிருந்தார். இப்போது எல்லாம் சரியாகி இருவரும் ஆடுவதற்கு தயாராக இருப்பதால் இருவரில் ஒருவர் ரோஹித்துடன் ஓப்பனிங் இறங்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
இவர்கள் இல்லையேல் அபிமன்யு ஈஸ்வரன் எனும் அறிமுக வீரர் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இவர் ரஞ்சி போட்டிகளில் பெங்கால் அணிக்கு கேப்டனாக இருந்தவர். ஓப்பனராகவும் சிறப்பாக ஆடியிருக்கிறார். அதனால் இவர் ரோஹித்துடன் இறக்கப்படுவதற்கும் வாய்ப்பிருந்தது.
ஆனால், இப்போது திடீரென கோலி-சாஸ்திரி கூட்டணி ஒரு வினோதமான முடிவை எடுத்திருக்கிறது. இலங்கை தொடருக்காக இலங்கை சென்றிருக்கும் இந்திய அணியிலுள்ள பிரித்திவி ஷாவை இங்கிலாந்துக்கு வருமாறு இந்திய அணி அழைத்திருக்கிறது. ஏற்கனவே 4 ஓப்பனர்கள் இருக்கும்போது ஐந்தாவதாக இன்னொரு வீரர் எதற்கு என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது சம்பந்தமாக மிகக்கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார் முன்னாள் வீரர் கபில்தேவ். 'கோலி-சாஸ்திரி இருவரின் ஆலோசனைகளுக்குப் பிறகே அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்போது அணியில் தேவையான வீரர்கள் இருக்கும் போது இன்னொரு வீரரை இடையில் அழைப்பது மற்ற வீரர்களை அவமானப்படுத்தும் செயல். இந்திய அணியின் தேர்வாளர்களை கொஞ்சமேனும் மதியுங்கள். நீங்களே எல்லாவற்றையும் முடிவு செய்வீர்கள் எனில் தேர்வாளர்களே தேவையில்லை' என கோலி-சாஸ்திரி கூட்டணியை காட்டமாக விமர்சித்திருக்கிறார்.
கபில்தேவை தொடர்ந்து பலருமே இந்த விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர். ராகுலும் மயங்க்கும் சிறந்த வீரர்கள் அவர்களுக்கு இன்னொரு வாய்ப்பை கொடுப்பதில் தவறில்லை என்பதே பெரும்பாலானோரின் கருத்தாக இருக்கிறது. இந்த கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து தங்கள் முடிவிலிருந்து கோலி-சாஸ்திரி கூட்டணி பின்வாங்குமா அல்லது தங்கள் முடிவில் உறுதியாக நிற்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!