Sports

போர்க்களத்தில் இந்தியா vs நியுசிலாந்து.. சாம்பியன்ஷிப் டைட்டிலை வென்று அரியாசனத்தில் ஏறப்போவது யார்?!

டி20, டி10 என கிரிக்கெட் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பரிணாமம் அடைந்திருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் ஆரம்பப்புள்ளி டெஸ்ட் போட்டிகள்தான். கிரிக்கெட்டின் 'ஆன்மா' குலையாமல் காத்து வருபவை டெஸ்ட் போட்டிகள் மட்டுமே. அப்பேற்பட்ட டெஸ்ட் போட்டிகளுக்கென உருவாக்கப்பட்ட 'உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்' ன் இறுதிப்போட்டி நடக்கவிருக்கிறது. இந்திய அணியும் நியுசிலாந்து அணியும் சாம்பியன் பட்டத்திற்காக முட்டி மோத போகின்றனர்.

ஒரு லிமிட்டெட் ஓவர் போட்டிகளுக்கான உலகக்கோப்பை இறுதிப்போட்டிக்கு எந்தளவுக்கு எதிர்பார்ப்பு இருக்குமோ அதே அளவுக்கான எதிர்பார்ப்பு இந்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் உருவாகியுள்ளது.

1932 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் ஆடி வருகிறது. 1932 இல் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியிருந்தாலும் முதல் வெற்றியை பெறுவதற்கு இந்திய அணி நெடுங்காலம் காத்திருந்தது. கிட்டத்தட்ட 20 வருடங்கள் மற்றும் 25 போட்டிகளில் ஆடிய பிறகே இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்திய அணியை முதல் போட்டியில் தலைமைதாங்கிய சி.கே.நாயுடு, இந்திய அணிக்கு முதல் வெற்றியை தேடித்தந்த விஜய் ஹசாரே ஆகியோரின் காலம் தொடங்கி கோலி காலம் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் பல பரிணாமங்களை அடைந்திருக்கிறது. அதன் உச்சமாக இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டியில் ஆடவிருக்கிறது.

2014 ல் தோனியின் ஓய்விற்கு பிறகு கோலி கேப்டன் பதவியேற்றார். கோலி கேப்டனான பிறகு இந்திய அணியில் பல விஷயங்கள் தலைகீழாக மாற தொடங்கியது. பேட்ஸ்மேன்கள் மற்றும் ஸ்பின்னர்களின் அணியாக அறியப்பட்ட இந்திய அணியை வேகப்பந்து வீச்சாளர்களுக்கான அணியாக உருமாற்றினார் கோலி.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சை பார்த்து ஆஸ்திரேலியாவும் வெஸ்ட் இண்டீஸுமே நடுங்குமாறு செய்தார். இதன்விளைவாக, கடந்த 5 ஆண்டுகளாக டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணியே முதலிடம் வகிக்கிறது. நியுசிலாந்து அணியையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. கடந்த 10-20 ஆண்டுகளில் வேறெந்த அணியை விடவும் ரொம்பவே சீராக வெற்றிகளை குவித்திருக்கின்றனர்.

இந்த காலக்கட்டத்தில் எந்த ஐ.சி.சி தொடரை எடுத்து பார்த்தாலும் நாக் அவுட் சுற்று வரை நியுசிலாந்து அணி கட்டாயம் தேர்வாகியிருக்கும். கடந்த 2019 உலகக்கோப்பை கூட நூலிழையில் ஐ.சி.சி யின் குழப்பமான விதிமுறைகளால் மட்டுமே தவறிப்போனது. அதற்கெல்லாம் சேர்த்து வைத்தாற் போல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வென்றுவிட வேண்டும் என்பதில் நியுசிலாந்து குறியாக இருக்கிறது.

மேலும், கடந்த வாரத்தில் இங்கிலாந்தில் வைத்தே இங்கிலாந்தை 1-0 என வீழ்த்தி டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியிருக்கிறது. குறிப்பாக, நியுசிலாந்து வென்றிருந்த இரண்டாவது போட்டியில் கேப்டன் கேன் வில்லியம்சன் போன்ற முக்கிய வீரர்கள் பலர் ஆடவில்லை. அப்படியான சூழலிலும் நியுசிலாந்து அணி இங்கிலாந்து வீழ்த்தி தொடரை வென்றது. இது நியுசிலாந்துக்கு மிகப்பெரிய தன்னம்பிக்கையை கொடுத்திருக்கும்.

கடைசியாக, இந்தியா-நியுசிலாந்து மோதியிருந்த டெஸ்ட் தொடருமே நியுசிலாந்துக்கு சாதகமாகவே முடிந்திருந்தது. 2020 தொடக்கத்தில் நடைபெற்ற அந்த தொடரில் 2-0 என நியுசிலாந்து வென்றிருந்தது. கோலி உட்பட இந்தியாவின் முக்கிய பேட்ஸ்மேன்கள் எல்லாருமே கடுமையாக சொதப்பியிருந்தனர். இதெல்லாம் நியுசிலாந்து அணிக்கு சாதகமாக இருக்கிறது.

ஆனால், இந்திய அணியின் சமீபத்திய பெர்ஃபார்மென்ஸ் பெரிய நம்பிக்கையை கொடுக்கிறது. ஆஸ்திரேலியாவில் அனுபவமே இல்லாத ஒரு இரண்டாம் கட்ட அணியை வைத்துக் கொண்டு ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கிறது. இங்கிலாந்தை மொத்தமாக காலி செய்து ஹோம் சீரிஸையும் வென்றிருக்கிறது. இதனால் இந்திய அணியும் ஒரு நல்ல நேர்மறையான எண்ணத்தோடே இந்த போட்டியை அணுக இருக்கிறது.

இரண்டு அணிகளையும் கடந்து வில்லியம்சன், கோலி இருவருக்குமே தனிப்பட்ட முறையிலும் இந்த கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. காரணம், இருவரும் இதுவரை பெரிய ஐ.சி.சி கோப்பைகளை வென்றதில்லை. இதை மாற்றிக்காட்டவும் இருவரும் முனைப்போடு ஆடுவர்.

இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டன் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற இருக்கிறது. இங்கே கடுமையான வெயில் அடிப்பதாகவும் பிட்ச் ட்ரையாக இருப்பதாகவும் கமெண்டேட்டராக சென்றிருக்கும் கவாஸ்கர் கூறியிருக்கிறார். இதன்மூலம், பிட்ச் பேட்டிங்குக்கும் கொஞ்சம் சாதகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், போட்டி நடைபெறும் நாட்களில் மழைப்பொழிவுக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை நிலவரங்கள் வெளியாகியுள்ளன. ஒரு வேளை போட்டிக்கு இடையே மலைப்பொழிவு ஏற்பட்டு பிட்ச்சில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது யாருக்கு சாதகமாக முடியும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

ப்ளேயிங் லெவனை தேர்ந்தெடுப்பதில் இரண்டு அணிகளுக்கும் பெரிய குழப்பங்கழ் இருக்கப்போவதில்லை. கடந்த வாரம்தான் ஒரு தொடரை முடித்திருப்பதால் நியுசிலாந்து எளிதில் ப்ளேயிங் லெவனை தேர்ந்தெடுத்துவிடும். பேட்டிங்கை பொறுத்தவரைக்கும் டெவான் கான்வே, வில்லியம்சன், ராஸ் டெய்லர், நிக்கோலஸ் போன்றவர்கள் முக்கிய வீரர்களாக இருப்பார்கள்.

முதல் இன்னிங்ஸிலேயே இவர்களை சீக்கிரம் வீழ்த்துவது இந்திய அணி முன்னிலையை எடுக்க உதவியாக இருக்கும். பௌலிங்கில் போல்ட், வேக்னர், சவுதி, ஜேமிசன் என ஒரு பெரும்படையையே நியுசிலாந்து வைத்திருக்கிறது. இவர்களை எதிர்கொள்ள தெளிவான கேம் ப்ளானோடு இந்திய அணி வர வேண்டும். அவசரப்படாமல் பொறுமையாக அதேநேரத்தில் அவர்களின் கை ஓங்கிவிடாத வகையில் இந்திய அணி ஆடியாக வேண்டும்.

டெஸ்ட் போட்டிகள் ஒரு போர்க்களம் போன்றவை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அதன் உச்சம். இரண்டு அணிகளும் போர்ப்படைகள் போல சகலவித ஆயுதங்களுடனும் முருக்கேற்றி மோதிக்கொள்ள தயாராக இருக்கின்றனர். இந்த போரில் வெற்றி பெற்று எந்த அணி அரியாசனத்தில் ஏறப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

-உ.ஸ்ரீ

Also Read: பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கிறதா பாஜக?: கேள்வி எழுப்பிய சமூக ஆர்வலரை மிரட்டிய ஆட்டுக்குட்டி அண்ணாமலை!