Sports

ஒரே ஸ்பெல்லில் மேட்ச்சை மாற்றிய ப்ரார்... பழைய ஃபார்முக்கு திரும்பும் பெங்களூரு! IPL 2021

குஜராத்தின் அஹமதாபாத் மைதானத்தில் வைத்து போட்டி நடைபெற்றது. பெங்களூர் அணியின் கேப்டன் கோலியே டாஸை வென்றார். வலிமையான பேட்டிங் லைன் அப்பை வைத்திருப்பதால் சேஸிங்கை தேர்வு செய்தார். தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தரை காரணமேயின்றி பென்ச்சில் வைத்துவிட்டு ஷபாஸ் அஹமதை அணியே சேர்த்திருந்தார் கோலி.

பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் கே.எல்.ராகுலும் பிரப்சிம்ரன் சிங்கும் ஓப்பனர்களாக களமிறங்கினர். தொடக்கத்திலேயே சில பவுண்டரிகள் அடித்து இந்த கூட்டணி சிறப்பாக தொடங்கினாலும் பிரப்சிம்ரன் சீக்கிரமே வெளியேறினார். ஜேமிசன் வீசிய ஒரு ஷார்ட் பாலை தூக்கியடித்து கோலியிடம் கேட்ச் ஆனார். நம்பர் 3 இல் யுனிவர்சல் பாஸ் களமிறங்கினார். கே.எல்.ராகுலை ஒரு முனையில் நிற்க வைத்துவிட்டு கெய்ல் அவர் இஷ்டத்திற்கு வாணவேடிக்கை காட்டினார். ஜேமிசன் வீசிய 6 வது ஓவரில் மட்டும் 5 பவுண்டரிகளை சிதறடித்தார். சஹால் ஓவரில் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார். ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 24 பந்துகளில் 46 ரன்கள் என அரைசதத்தை நெருங்கிய நிலையில் டேனியல் சாம்ஸின் ஓவரில் எட்ஜ்ஜாகி டீவில்லியர்ஸிடம் கேட்ச் ஆனார்.

இன்னொரு புறம் கே.எல்.ராகுல் சில பவுண்டரிகளை அடித்து அரைசதம் கடந்திருந்தார். கெய்ல் அவுட் ஆனதற்கு பிறகு ரன்ரேட் குறைய ஆரம்பித்தது. நிக்கோலஸ் பூரண் இந்த சீசனில் 4 வது முறையாக டக் அவுட் ஆகி வெளியேறினார். தமிழக வீரரான ஷாரூக்கானும் டக் அவுட் ஆகினார். இதனால் மிடில் ஓவர்கள் பஞ்சாப் அணி சொதப்பியது. டெத் ஓவர்களில் கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு ரன்ரேட்டை உயர்த்தியது. ஆல்ரவுண்டரான ஹர்பீரித் ப்ரார் சில சிக்சர்களையும் பவுண்டரியையும் அடித்தார். செட்டில் ஆகியிருந்த கே.எல்.ராகுலும் அதிரடி காட்டினார். இதனால் கடைசி மூன்று ஓவர்களில் மட்டும் 47 ரன்கள் வந்தது. இன்னிங்ஸிம் கடைசி பந்தை ப்ரார் சிக்சராக முடிக்க பஞ்சாப் அணி 179 ரன்களை எட்டியது. ஆங்கர் ரோல் அட்டாக்கிங் பேட்ஸ்மேன் என இரண்டு முகங்களை காட்டிய கே.எல்.ராகுல் 91 ரன்களில் நாட் அவுட்டாக இருந்தார்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு களமிறங்கியது. எல்லா பேட்ஸ்மேன்களும் ஃபார்மில் இருப்பதால் பெங்களூரு சுலபமாக வென்றுவிடும் என தோன்றியது. ஆனால், கோலிப்படை பேட்டிங்கில் கடுமையாக சொதப்பியது. ஒரு சிக்சரை மட்டும் அடித்துவிட்டு மெரிடித்தின் ஓவரில் இறங்கி வந்து போல்டை பறிகொடுத்தார் படிக்கல். இதன்பிறகு கேப்டன் கோலி கொஞ்சம் உருட்டி ஆடிக்கொண்டிருந்தார். கோலி கொஞ்சம் செட்டில் ஆவது போல் தோன்றியது. அதற்குள் ஹர்ப்ரீத் ப்ரார் ஒரே ஓவரில் மேட்ச்சை மாற்றிவிட்டார். ப்ரார் வீசிய 11 வது ஓவரில் கோலி மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் போல்டாகி வெளியேறினர். இதன்பிறகு, டீவில்லியர்ஸ் மட்டும்தான் ஒரே நம்பிக்கை என்றானது. ஆனால், அவரையும் ப்ரார் விட்டுவைக்கவில்லை. இதே ஸ்பெல்லின் அடுத்த ஓவரிலேயே டீவில்லியர்ஸையும் எக்ஸ்ட்ரா கவரில் கேட்ச் ஆக வைத்தார்.

கோலி, மேக்ஸ்வெல், டீவில்லியர்ஸ் என பெங்களூருவின் முதுகெலும்புகள் மூவரையும் ஒரே ஸ்பெல்லி ப்ரார் வெளியேற்றி மிரட்டினார். இது அவருடைய கரியரிலேயே மறக்க முடியாத விஷயமாக இருக்கும். இதன்பிறகு, பெங்களூரு வெல்ல வேண்டும் என நினைப்பதெல்லாம் அதீத கற்பனை. பட்டிதர், ஜேமிசன், ஹர்ஷல் படேல் ஆகியோர் தங்கள் சக்திக்கேற்ப சிறிதாக அதிரடி காட்டினர். அதற்கு மேல் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. பெங்களூர் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

பெங்களூர் அணி தன்னுடைய பழைய ஃபார்முக்கு திரும்புவது போல் தோன்றுகிறது. இது கோலிக்கான அலாரம். சீக்கிரமே விழித்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் இந்த முறையும் ஐ.பி.எல் கோப்பை கனவாக மட்டுமே இருக்கும்.

Also Read: ஜடேஜாவிடம் தோற்ற பெங்களூர்... மீண்டும் முதலிடத்தில் சென்னை அணி! #IPL2021