Sports

சொதப்பிய பஞ்சாப்... மோர்கனின் பொறுப்பான ஆட்டத்தால் அடிவாரத்தில் இருந்து கரை சேர்ந்த கொல்கத்தா! IPL 2021

பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் வழக்கம்போல, இரண்டு அணிகளும் சொதப்பவே செய்தனர். குறைவாக சொதப்பிய கொல்கத்தா அணி பஞ்சாபை வீழ்த்தியது. குஜராத்தின் அஹமதாபாத் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் டாஸை வென்றார். மோர்கம் சேஸிங் செய்ய விருப்பம் தெரிவிக்க, பஞ்சாப் அணி முதல் பேட்டிங் செய்தது.

கே.எல்.ராகுலும் மயங்க் அகர்வாலும் ஓப்பனர்களாக களமிறங்கினர். சிவம் மவிக்கு முதல் ஓவரை கொடுத்தார் மோர்கன். இந்த ஓவரில் கொஞ்சம் அடக்கி வாசித்த பஞ்சாப் பேட்ஸ்மேன்கள், பேட் கம்மின்ஸ் வீசிய அடுத்த ஓவரிலிருந்து வேலையை ஆரம்பித்தனர்.

இந்த ஓவரில் மயங்க் அகர்வால் ஒரு சிக்சரையும் ராகுல் ஒரு பவுண்டரியையும் அடித்தார். சிவம் மவி ஓவரில் மட்டும் பார்த்து ஆடிவிட்டு, மற்ற ஓவர்களில் ஒரு பவுண்டரியையாவது அடித்துக் கொண்டிருந்தது இந்த கூட்டணி. பவர்ப்ளேயின் கடைசி ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்சரை அடித்த ராகுல் அடுத்த பந்திலேயே இன்னொரு ஷாட்டுக்கு முயன்று 19 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

நம்பர் 3 இல் யுனிவர்சல் பாஸ் கெய்ல் களமிறங்கினார். ஆனால், வந்த வேகத்திலேயே இவரை பெவிலியனுக்கு அனுப்பியது கொல்கத்தா. சிவம் மவியின் ஓவரில் எட்ஜ் ஆகி தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். பிரஷித் கிருஷ்ணா வீசிய அடுத்த ஓவரிலேயே தீபக் ஹீடாவும் வெளியேறினார். ஒரு பக்கம் விக்கெட்டாக விழ, இன்னொரு பக்கம் மயங்க் அகர்வால் நின்று ஆடிக்கொண்டிருந்தார்.

ஏதுவான பந்துகளை பவுண்டரிக்களாக்கிய மயங்க் அகர்வால் சுனில் நரைனின் ஓவரில் கேட்ச் ஆகி 31 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு, பஞ்சாப் அணியால் பெரிதாக ஸ்கோர் செய்ய முடியவில்லை. வருண் சக்கரவர்த்தியின் ஓவரில் சிக்சரையும் பவுண்டரியையும் அடித்து அசத்திய நிக்கோலஸ் பூரன் அவர் வீசிய அடுத்த ஓவரிலேயே போல்டாகி வெளியேறினார். தமிழக வீரரான ஷாருக்கானும் அணியை காப்பாற்ற தவறினார்.

கடைசிக்கட்டத்தில் ஆல்ரவுண்டரான ஜோர்டன் மட்டும் 3 சிக்சர்களை அடித்து அதிரடியை ஃபினிஷிங்கை கொடுத்தார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 123 ரன்களை எடுத்தது பஞ்சாப் அணி. சுவாரஸ்யமே இல்லாத ஆட்டமாக இருக்கும் என தோன்றினாலும், கொல்கத்தா பஞ்சாபை விட சொதப்பும் என்ற நம்பிக்கை ஒரு ஓரமாக இருந்தது.

எதிர்பார்த்ததை போலவே முதல் மூன்று ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து கொல்கத்தா பஞ்சாபுக்கு வெற்றி நம்பிக்கையை கொடுத்தது. ஹென்றிக்ஸ் வீசிய முதல் ஓவரில் நிதிஷ் ராணா டக் அவுட் ஆக, ஷமி வீசிய அடுத்த ஓவரில் சுப்மன் கில் அவுட் ஆகி வெளியேறினார். அர்ஷ்தீப் சிங் வீசிய மூன்றாவது ஓவரில் ஒரு ஷார்ட் பாலில் நரைன் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.

இதன்பிறகு, ராகுல் திரிபாதியும் கேப்டன் மோர்கனும் கூட்டணி போட்டனர். கடந்த போட்டியில் மோர்கனை ரன் அவுட் ஆக்கிவிட்டிருந்த திரிபாதி, இந்த முறை அவரே ரன் அவுட் ஆபத்தில் சிக்கி தப்பித்தார். ரன் அவுட்டிலிருந்து தப்பித்த பிறகு இந்த கூட்டணி சிறப்பாகவே செயல்பட்டது.

குறைவான ஸ்கோர்தான் என்பதால் ரன்ரேட் அழுத்தம் இல்லாதது கொல்கத்தாவுக்கு பாசிட்டிவ்வாக அமைந்தது. ஓவருக்கு ஒரு பவுண்டரியை அடித்துவிட்டு பெரிதாக ரிஸ்க் எடுக்காமல் திரிபாதியும் மோர்கனும் ஆடிய ஆட்டம் கொல்கத்தாவை காப்பாற்றியது. இடக்கை பேட்ஸ்மேனான இயான் மோர்கனுக்காக ஆஃப் ஸ்பின்னரான தீபக் ஹீடாவை வைத்து ராகுல் ஸ்கெட்ச் போட, அந்த திட்டத்தில் எதிர்பாராதவிதமாக திரிபாதி வீழ்ந்தார்.

41 ரன்களில் ஷாருக்கானிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் திரிபாதி. அடுத்து உள்ளே வந்த அதிரடி சூறாவளியான ரஸல் இரண்டு பவுண்டரிகளை மட்டும் அடித்துவிட்டு நடையைக்கட்டினார்.

இதன்பிறகு, தமிழக வீரரான தினேஷ் கார்த்திக்கும் மோர்கனும் வேகமாக ஒரு சில பவுண்டரிகளை அடித்து அணியை வெற்றி பெற வைத்தனர். 16.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து டார்கெட்டை எட்டியது கொல்கத்தா. கேப்டன் மோர்கன் 47 ரன்களில் நாட் அவுட்டாக இருந்தார். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலின் அடிவாரத்தில் இருந்த கொல்கத்தா 5 வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.