Sports
ஈடுபாடின்றி டெஸ்ட் ஆட்டம் ஆடிய கொல்கத்தா...சுலபமாக வென்ற ராஜஸ்தான்!
உப்பு சப்பில்லாமல் சுவாரஸ்யமேயின்றி ஒரு போட்டி நடந்து முடிந்திருக்கிறது. புள்ளிப்பட்டியலில் கடைசி இடங்களை வகிக்கும் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கிடையே நடைபெற்ற இந்த போட்டி டெஸ்ட் மேட்ச் போன்ற அனுபவத்தையே கொடுத்தது. மோசமாக ஆடிய கொல்கத்தா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது ராஜஸ்தான் அணி.
மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் அணி டாஸை வென்று முதலில் பந்து வீசியது. இதன்படி, கொல்கத்தா அணி முதல் பேட்டிங்கை செய்தது.
மும்பை வான்கடே மைதானம் ரன்மழை பொழிவதற்கு உகந்த பிட்ச்சை கொண்டது. இங்கே 200+ ரன்களெல்லாம் அசால்ட்டாக அடிக்கப்பட்டிருகிறது. சென்னை அணிக்கு எதிரான கடந்த போட்டியில் கொல்கத்தா அணியே சேஸிங்கில் 220 ரன்களை நெருங்கி வந்து சென்னை அணியை பயமுறுத்தியிருந்தது. ஆனால், நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணி இதையெல்லாம் மறந்துவிட்டு உருட்டி தள்ளியது.
இரண்டே இரண்டு ஃபீல்டர்கள் மட்டும் 30 யார்டு வட்டத்துக்கு வெளியே நிற்கும் பவர்ப்ளேயில் வெறும் 25 ரன்களை மட்டுமே கொல்கத்தா அணி சேர்த்திருந்தது. தேவையில்லாமல் சுப்மன் கில்லும் ரன் அவுட் ஆகி வெளியேறியிருந்தார். இன்னொரு ஓப்பனரான நிதிஷ் ராணா நீண்ட நேரம் க்ரீஸில் நின்றும் பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை. 25 பந்துகளை எதிர்கொண்ட ராணா வெறும் 22 ரன்களை மட்டுமே எடுத்து சக்காரியாவின் பந்துவீச்சில் எட்ஜ் ஆகி கீப்பரிடம் கேட்ச் ஆனார்.
இதன்பிறகு, கேப்டன் மோர்கனை ராகுல் திரிபாதி ரன் அவுட் ஆக்கிவிட்டார். ஒரு பந்தை கூட சந்திக்காமல் அய்யோ பாவமாக பெவிலியனுக்கு திரும்பினார் மோர்கன். மோர்கனுக்கும் சேர்த்து திரிபாதி அடைமழையாக வெளுத்தெடுப்பார் என எதிர்பார்க்கையில் அவர் ஒரு பவுண்டரி மற்றும் சிக்சரை மட்டுமே அடித்து சாரலாக தூறி வெளியேறினார். தினேஷ் கார்த்திக், ரஸல், கம்மின்ஸ் போன்ற பிக் ஹிட்டர்களும் இந்த போட்டியில் சொதப்பவே செய்தனர். தினேஷ் கார்த்திக் மட்டும் ஒரு சில பவுண்டரிகளை அடித்து 25 ரன்களை சேர்த்தார்.
தினேஷ் கார்த்திக் மற்றும் ரஸலை ஒரே ஓவரில் வெளியேற்றி அசத்தினார் மோரிஸ். இவர் வீசிய 20 வது ஓவரில் கம்மின்ஸ் ஒரு சிக்சரை மடும் அடித்து அடுத்த பந்திலேயே விக்கெட்டையும் விட்டார். கொல்கத்தா அணியின் பிக்ஹிட்டர்களை மொத்தமாக காலி செய்தார் மோரிஸ். 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களை மட்டுமே சேர்த்தது.
134 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. பவர்ப்ளேயில் முடிந்தளவு ரன்களை சேர்த்துவிட வேண்டும் என்பதில் ராஜஸ்தான் அணி கவனமாக இருந்தது. அபாயகரமான வீரரான ஜாஸ் பட்லரை தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி lbw முறையில் வீழ்த்தி சீக்கிரமே வெளியேற்றினார். இதன்பிறகு, ஜெய்ஸ்வாலுடன் சாம்சன் கூட்டணி போட்டார். இந்த கூட்டணி ஏதுவான பந்துகளை பவுண்டரி அடித்து சிறப்பாக ஆடியது.
இதனால் பவர்ப்ளே முடிவில் ராஜஸ்தான் அணி 50 ரன்களை சேர்த்தது. ஜெய்ஸ்வால் 22 ரன்களில் அவுட் ஆன பிறகு சிவம் துபே உள்ளே வந்து சாம்சனுக்கு ஆதரவாக ஆடினார். ஒன்றிரண்டு பவுண்டரிகளை அடித்த சிவம் துபே 22 ரன்களில் அவுட் ஆனார். சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும் கேப்டன் சாம்சன் மட்டும் நின்று நிதானமாக ஆடினார். இது அவரின் வழக்கமான ஆட்டமே கிடையாது. பெரும்பாலும் தேவையில்லாத நேரத்தில் தேவையில்லாத ஷாட்டை ஆடி அவுட் ஆகும் சாம்சன் நேற்று பொறுமையாக நின்று ஆடியது வரவேற்கத்தக்கது.
41 பந்துகளை சந்தித்த அவர் 42 ரன்களை எடுத்து அணியையும் வெற்றிபெற வைத்தார். 4 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது ராஜஸ்தான். உலகத்தரமான வீரர்கள் பலர் இருந்தும் கொல்கத்தா அணி டெஸ்ட் மேட்ச் போன்று ஆடியது ரசிகர்களை வெறுப்படைய வைத்தது. அடுத்தடுத்த போட்டிகளிலாவது வெற்றிக்கான முனைப்போடு முழு ஈடுபாட்டோடு கொல்கத்தா அணி ஆட வேண்டும். இல்லையேல், ப்ளே ஆஃப்ஸ் வாய்ப்பை இழக்கும் முதல் அணியாக கொல்கத்தாவே இருக்கும்.
Also Read
-
கூட்டாட்சி தத்துவத்தை உறுதிசெய்யும் இந்திய அரசியலமைப்பு : முரசொலி தலையங்கம்!
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!