Sports
ஜடேஜாவிடம் தோற்ற பெங்களூர்... மீண்டும் முதலிடத்தில் சென்னை அணி! #IPL2021
ஐ.பி.எல்-இன் இந்த சீசனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போட்டி நடந்து முடிந்திருக்கிறது. புள்ளிப்பட்டியலின் முதலிரண்டு இடங்களில் இருக்கும் சென்னை மற்றும் பெங்களூர் அணிகளுக்கிடையே நடைபெற்ற இந்தப் போட்டியில் சென்னை அணி சுலபமாக வென்றுள்ளது.
பெங்களூர் அணி இந்த சீசனில் இதற்கு முன் ஆடியிருந்த நான்கு போட்டிகளையும் வென்றிருந்தது. கடந்த சீசனில் மோசமாக ஆடியிருந்த சென்னை இந்த சீசனில் ஹாட்ரிக் வெற்றியை பெற்றிருந்தது. மேலும், சென்னை அணிக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியும் பெங்களூர் அணிக்கு இந்திய அணியின் தற்போதைய கேப்டன் கோலியும் கேப்டனாக இருப்பதால் இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு எகிறியிருந்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணியின் கேப்டன் தோனி டாஸை வென்றார். தோனி பேட்டிங் செய்ய விருப்பம் தெரிவிக்க, பெங்களூர் அணி பந்துவீச வேண்டியிருந்தது. சென்னை அணியின் சார்பாக ருத்ராஜ் கெய்க்வாட்டும் டூப்ளெஸ்சிஸும் ஓப்பனர்களாக களமிறங்கினர். பெங்களூர் அணியின் சார்பில் சிராஜும் கைல் ஜேமிசனும் முதல் ஸ்பெல்லை வீசினர். இருவரும் ஸ்விங்குக்காக முயற்சி செய்தனர். ஃபுல் லெந்தில் ஸ்விங்குக்கு முயற்சி செய்து இவர்கள் வீசிய பந்துகள் ஸ்விங் ஆகாமல் ஏமாற்றியதால் சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் சுலபமாக பெரிய ஷாட்களை ஆடினர்.
மூன்றாவது ஓவரிலிருந்து தொடர்ந்து பவுண்டரிகள் வந்து கொண்டே இருந்தது. இதன் விளைவாக, 6 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்களை எடுத்தது சென்னை அணி. பவர்ப்ளே முடிந்தபிறகும் ருத்ராஜ்-டூப்ளெஸ்சிஸ் கூட்டணி நன்றாக ஆடியது. 10 வது ஓவரில் சஹால்தான் இந்த கூட்டணியை பிரித்தார். ஒரு பெரிய ஷாட்டுக்கு முயன்று ஜேமிசனடம் 33 ரன்களில் கேட்ச் ஆனார் ருத்ராஜ். நம்பர் 3 இல் ரெய்னா உள்ளே வந்தார். க்ரீஸுக்குள் வந்த முதல் ஓவரிலேயே சிக்சர் அடித்து மிரட்டினார் ரெய்னா. டூப்ளெஸ்சிஸும் அரைசதம் அடித்து அசத்தினார். சென்னை அணியின் ரன்ரேட் நன்றாக உயர்ந்து கொண்டிருந்தது. ஆனால், ஹர்ஷல் படேல் வீசிய 14 வது ஓவரில் சென்னை அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அந்த ஓவரில் தொடர்ந்து டூப்ளெஸ்சிஸையும் ரெய்னாவையும் வீழ்த்தினார் ஹர்ஷல் படேல்.
இதன்பின்னர், அம்பத்தி ராயுடுவும் சீக்கிரம் அவுட் ஆக சென்னை அணி கொஞ்சம் தடுமாறியது. 200 ரன்களை தாண்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 170 ரன்களை எடுத்தாலே போதும் என்ற நிலைக்கு சென்னை வந்தது. ஆனால், கடைசி ஓவரில் ஜடேஜா ஒரு வெறித்தனமான ட்விஸ்ட்டை கொடுத்தார். ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் 5 சிக்சர்கள் உட்பட 37 ரன்களை சேர்த்தார் ஜடேஜா. இந்த ஓவரின் முதல் 4 பந்துகளை சிக்சராக்கிய ஜடேஜா, மேலும் ஒரு சிக்சரையும் பவுண்டரியையும் அடித்து அசத்தினார். ஒரு நோபாலையும் இந்த ஓவரில் வீசியிருந்தார் ஹர்ஷல் படேல். 25 பந்துகளில் அரைசதம் கடந்த ஜடேஜா 28 பந்துகளில் 62 ரன்களை சேர்த்தார். இதன்மூலம், சென்னை அணியின் ஸ்கோர் 191 ஆக உயர்ந்தது.
கடைசி ஓவரில் 37 ரன்கள் சேர்க்கப்பட்டதால் சென்னை அணி செம பாசிட்டிவ்வாக ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு திரும்பியது. 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. தேவ்தத் படிக்கலும் கோலியும் ஓப்பனர்களாக களமிறங்கினர். கடந்த போட்டியில் விக்கெட்டே விடாமல் 170+ ஸ்கோரை இந்த கூட்டணி சேச் செய்திருந்தது. இந்த போட்டியிலும் அதே ஃபார்மை தொடர்ந்தது இந்த கூட்டணி. தேவ்தத் படிக்கல் பெரிய ஷாட்களாக ஆடி அசத்தினார்.
கடந்த போட்டியை போலவே படிக்கலும் துணையாக கோலி நிற்பார் என எதிர்பார்க்கையில் சீக்கிரமே வெளியேறினார். சாம் கர்ரன வீசிய ஓவரில் எட்ஜ்ஜாகி தோனியிடம் கேட்ச் ஆனார் கோலி. ஆனாலும் பெங்களூர் அணியின் ரன்ரேட் விழவில்லை. படிக்கல் ஒரு முனையில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். இதனால் 5 வது ஓவரிலேயே பெங்களூர் அணி 50 ரன்களை 15 பந்துகளில் 34 ரன்களை எடுத்த படிக்கல் ஷர்துல் தாகூர் வீசிய ஒரு ஷாட் பாலில் புல் ஷாட் ஆட முயன்று ரெய்னாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஓப்பனர்கள் இருவருமே வெளியேறினாலும் மேக்ஸ்வெல் மற்றும் டீவில்லியர்ஸ் என இருபெரும் வீரர்கள் இருந்ததால் பெங்களூர் அணி நம்பிக்கையிழக்காமல் இருந்தது.
ஆனால், இன்றைய நாளின் நாயகனான ஜடேஜா பெங்களூருவின் அத்தனை நம்பிக்கைகளையும் சுக்கு நூறாக நொறுக்கினார். அடுத்தடுத்த ஓவர்களில் வாஷிங்டன் சுந்தர், மேக்ஸ்வெல், டீவில்லியர்ஸ் என மூன்று முக்கிய பேட்ஸ்மேன்களின் விக்கெட்டையும் வீழ்த்தினார். ஸ்டம்ப் லைனில் டைட்டாக தொடர்ந்து வீசி மேக்ஸ்வெல், டீவில்லியர்ஸ் இருவரையும் போல்டாக்கினார் ஜடேஜா. டேன் கிறிஸ்டியனை டைரக்ட் ஹிட்டாக ரன் அவுட் ஆக்கியும் அசத்தினார். ஜடேஜா பேட்டை தொட்டால் சிக்சர், ஓவர் வீசினால் விக்கெட், ஃபீல்டிங் செய்தால் டைரக்ட் ஹிட்கள் என அத்தனை டிபார்ட்மெண்ட்டிலும் ரவுண்டு கட்டி அசத்தினார் ஜடேஜா. ஜடேஜாவின் அபாரமான ஆட்டத்தில் விழுந்த பெங்களூர் அணியால் மீண்டும் எழ முடியவே இல்லை. 20 ஓவர் முடிவில் 122 ரன்களை மட்டுமே பெங்களூர் அணியால் எடுக்க முடிந்தது.
இதனால் 69 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னையிடம் இல்லை ஜடேஜாவிடமே பெங்களூர் அணி தோற்றுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேறியிருக்கிறது சென்னை அணி.
- உ.ஸ்ரீ
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!