Sports

கோலி - படிக்கலிடம் தோற்ற ராஜஸ்தான் : மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது பெங்களூர் அணி!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் மூன்று போட்டிகளை ஆடியிருந்த பெங்களூர் அணி மூன்று போட்டிகளையும் வென்றிருந்தது. நேற்று, மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தானை எதிர்கொண்டது பெங்களூர் அணி.

டாஸை பெங்களூர் அணியின் கேப்டன் கோலியே வென்றார். வான்கடே வழக்கப்படி கோலியும் பந்து வீச்சையே தேர்வு செய்தார். எவ்வளவு பெரிய ஸ்கோராக இருந்தாலும் சேஸ் செய்துவிடலாம் என்கிற நம்பிக்கையும் கோலியிடம் இருந்தது.

ராஜஸ்தான் அணியின் சார்பில் பட்லரும் மனன் வோராவும் ஓப்பனர்களாக களமிறங்கினர். நியுபால் சிராஜின் கையில் கொடுக்கப்பட்டது. முதல் 4 பந்துகளை டாட் ஆக்கிய சிராஜ் அடுத்த இரண்டு பந்துகளில் பட்லருக்கு பவுண்டரி கொடுத்தார். ஆனால், இதே ஸ்பெல்லின் அடுத்த ஓவரில் பட்லரின் விக்கெட்டை காலி செய்தார் சிராஜ்.

ஒரு இன்கம்மிங் டெலிவரியை சிராஜ் மெதுவாக வீச நகர்ந்து வந்து ஷாட் ஆட முயன்ற பட்லர் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்த ஓவரிலேயே வோராவின் விக்கெட்டை ஜேமிசன் வீழ்த்தினார். சிராஜ் வீசிய 5 வது ஓவரில் கில்லர் மில்லரை டக் அவுட் ஆக்கினார். Lbw அப்பீலுக்கு கோலி சரியாக ரிவியூவை எடுத்து அசத்தினார்.

Also Read: “ஸ்டீவ் ஸ்மித்துக்கு ஆதரவாக நின்றது ஏன்?” - உண்மையைப் பகிர்ந்துகொண்ட விராட் கோலி!

பவர்ப்ளேக்குள்ளாகவே முதல் 3 விக்கெட்டுகளை இழந்தது ராஜஸ்தான் அணி. கேப்டன் சஞ்சு சாம்சன் சில பவுண்டரிகளையும் சிக்சரையும் அடித்தார். ஆனால், அவரும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் ஓவரில் சிக்சர் அடித்த அடுத்த பந்திலேயே மிட் விக்கெட்டில் கேட்ச் ஆகி வெளியேறினார்.

ராஜஸ்தான் அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் எல்லாரும் 8 ஓவர்களுக்குள்ளாகவே அவுட் ஆனார். ராஜஸ்தான் அணி ஒரு கௌரவமான ஸ்கோரை எடுப்பதை கடினம் என்றிருந்த நிலையில், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆட தொடங்கினர்.

ஷிவம் துபேவும் ரியான் பராக்கும் நன்றாக நின்று அதிரடி காட்டினார். ஷிவம் துபே பௌலரின் தலைக்கு மேல் சிக்சர்களை பறக்கவிட்டார். ரியான் பராக் ஹெலிகாப்டர் ஷாட் எல்லாம் அடித்தார். இருவரும் சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் போதே 25 ரன்களில் ரியான் பராக் தேர்டு மேனில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி வெளியேறினார்.

இதன்பிறகு, துபேவுடன் சேர்ந்து ராகுல் திவேதியா அதிரடி காட்ட தொடங்கினார். க்ரீஸுக்கு வந்து சந்தித்த இரண்டாவது பந்தையே சிக்சராக்கினார் திவேதியா. துபே 46 ரன்களிலும் திவேதியா 40 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால்தான் ராஜஸ்தான் அணி 170 ரன்களை கடந்தது. இறுதியாக, 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்களை எடுத்தது ராஜஸ்தான் அணி.

177 என்பது வான்கடே மைதானத்தில் சராசரியை விட குறைவான ஸ்கோரே. பலமான பேட்டிங் ஆர்டரை கொண்டிருக்கும் பெங்களூர் அணி எளிமையாக வென்றுவிடும் என்றே அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், இவ்வளவு எளிமையாக வெல்லும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. விக்கெட்டே விடாமல் ராஜஸ்தான் பௌலர்களை அடித்து துவம்சம் செய்துவிட்டது கோலி-படிக்கல் கூட்டணி.

கூக்ளி கோபாலின் முதல் ஓவரிலேயே சிக்சரோடு தொடங்கினார் கோலி. கோலி அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கையில், தொடர்ந்து படிக்கல் அதிரடியில் வெளுத்தெடுக்க தொடங்கினார். எல்லா பௌலர்களையும் ஆகாய மார்க்கமாக பறக்கவிட்டார். கோலி அவருக்கு சப்போர்ட் செய்து நிதானமாக நின்று ஆடினார்.

இந்த கூட்டணி முறிக்க முடியாமல் ராஜஸ்தான் பௌலர்கள் திணறினர். ஒரு கட்டத்தில் விக்கெட்டுக்கே முயற்சிக்காமல் துவண்டுவிட்டது ராஜஸ்தான் அணி. கோலி அரைசதம் கடக்க, படிக்கல் சதமடித்து அசத்தினார். கோலி 72 ரன்களிலும் படிக்கல் 101 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 18 வது ஓவரிலேயே இலக்கை எட்டியது பெங்களூர் அணி.

பெங்களூர் அணி தொடர்ந்து நான்கு போட்டிகளில் வென்றிருக்கிறது. சென்னை அணியை பின்னுக்குத் தள்ளி முதல் இடத்துக்கு முன்னேறியிருக்கிறது பெங்களூர் அணி. பேட்டிங், பௌலிங், ஃபீல்டிங் என எல்லாவற்றிலுமே சிறப்பாக செயல்படுகிறது பெங்களூர் அணி. இத்தனை நாள் கனவாக இருந்த சாம்பியன் பட்டம் பெங்களூர் அணிக்கு சாத்தியப்படும் வாய்ப்பு தென்பட தொடங்கியிருக்கிறது.

Also Read: 'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!' - ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி!