Sports
'நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!' - ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த சென்னை அணி!
சென்னை அணி மீண்டும் தன்னுடைய தடாலடி ஃபார்முக்கு திரும்பியிருக்கிறது. எளிதில் வென்றுவிடலாம் என்ற போட்டியை கடைசி வரை பரபரப்பாக கொண்டு சென்று த்ரில்லாக வென்றுள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருக்கும் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் வைத்து நடைபெற்ற இந்த போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டன் இயான் மோர்கன் டாஸ் வென்றார். வான்கடே மைதானத்தில் எவ்வளவு பெரிய ஸ்கோராக இருந்தாலும் சேஸ் செய்யலாம் என்பதால் மோர்கன் பந்துவீச்சை தேர்வு செய்தார். கொல்கத்தா அணியில் ஷகிப்-அல்-ஹசனுக்கு பதில் சுனில் நரைனை கொண்டு வந்திருந்தார் மோர்கன்.
ஒரு நல்ல வேகப்பந்து வீச்சாளர் வேண்டும் என்பதால் ப்ராவோவை பென்ச்சில் வைத்துவிட்டு லுங்கி இங்கிடியை ப்ளேயிங் லெவனில் சேர்த்திருந்தார் தோனி. சென்னை அணியின் சார்பில் ருத்ராஜ் கெய்க்வாட்டும் டூப்ளெஸ்சிஸும் ஓப்பனர்களாக களமிறங்கினார். கடந்த மூன்று போட்டிகளிலும் சொதப்பியிருந்ர்ந் ருத்ராஜ் கெய்க்வாட் மீண்டும் தன்னுடைய ஃபார்முக்கு திரும்பினார். 140+ கி.மீ வேகத்தில் வீசும் கம்மின்ஸை கவர் ட்ரைவும் புல் ஷாட்டும் அடித்து மிரட்டினார்.
டூப்ளெஸ்சிஸும் சிறப்பாகவே ஆடிக்கொண்டிருந்தார். நன்றாக ஆடிய இந்த கூட்டணியால் பவர்ப்ளேயில் சென்னை அணி 54 ரன்களை சேர்த்தது. சமீபமாக பவர்ப்ளேயில் சென்னை அணி சேர்த்த அதிகப்படியான ஸ்கோர் இதுதான். தொடர்ந்து, ருத்ராஜ் கெய்க்வாட் நன்றாக ஆடி அரைசதம் கடந்தார். இதன்பிறகு, கியரை மாற்றி சிக்சர்களை பறக்கவிட்ட அவர் 64 ரன்கள் வருண் சக்கரவர்த்தி பந்தில் பெரிய சிக்சருக்கு முயன்று கேட்ச் ஆனார்.
12.1 ஓவர்களிலேயே சென்னை அணி 115 ரன்களை சேர்த்திருந்ததால், இனிமேல் அதிரடிதான் என்ற மனநிலைக்கு வந்தது. நம்பர் 3 இல் வந்த மொயீன் அலி 2 பவுண்டரி மற்றும் 2 சிக்சர்களை அடித்து 25 ரன்களில் வெளியேறினார். அடுத்து கேப்டன் தோனி களமிறங்கி, தன் பங்குக்கு 2 பவுண்டரி மற்றும் சிக்சருடன் 17 ரன்களை சேர்த்தார்.
இன்னொரு பக்கம் டூப்ளெஸ்சிஸ் ருத்ரதாண்டவம் ஆடினார். ரஸலின் ஓவரில் தொடர்ந்தது மூன்று பவுண்டரிக்களை அடித்தவர், பேட் கம்மின்ஸின் ஓவரில் இரண்டு சிக்சர்களை பறக்கவிட்டார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த டூப்ளெஸ்சிஸ் 95 ரன்களை அடித்திருந்தார். கடைசி பந்தில் ஜடேஜா ஒரு சிக்சரை அடித்து சென்னை அணியின் இன்னிங்ஸை சிறப்பாக முடித்து வைத்தார்.
20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 220 ரன்களை சேர்த்தது. 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. ஆனால், அந்த அணி டாப்-4 பேட்ஸ்மேன்களை தீபக் சஹார் தனது ஸ்விங் மூலம் திணறடித்து சீக்கிரமே வெளியேற்றினார். முதல் ஓவரில் சுப்மன் கில்லின் விக்கெட்டை சாய்த்தார் சஹார். அடுத்து வீசிய மூன்றாவது ஓவரில் ராணா எட்ஜ் ஆக்கி தோனியிடம் கேட்ச் ஆக வைத்தார்.
ஐந்தாவது ஓவரில் மேலும் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார் சஹார். கொல்கத்தாவின் கேப்டனான இயான் மோர்கன் எட்ஜ் ஆகி தோனியிடம் கேட்ச் ஆக, நரைன் ஜடேஜாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். லுங்கி இங்கிடியின் அடுத்த ஓவரில் திரிபாதியும் அவுட் ஆனார். சொற்ப ரன்களில் கொல்கத்தாவின் டாப்-5 பேட்ஸ்மேன்களும் வெளியேறினார். இப்போதே சென்னை அணியின் வெற்றி உறுதியாகிவிட்டது என நினைத்த போதுதான் ரஸல்லும் தினேஷ் கார்த்திக்கும் அதிரடியை தொடங்கினர்.
ஸ்பின்னர்களை தினேஷ் கார்த்திக் அடிக்க, வேகப்பந்து வீச்சாளர்களை ரஸல் அடித்தார். ஷர்துல் தாகூரின் ஒரே ஓவரில் மூன்று சிக்சர்களை அடித்து 24 ரன்களை சேர்த்தார் ரஸல். 21 பந்துகளிலேயே அரைசதத்தை கடந்தார் ரஸல். சாம் கர்ரன் வீசிய 12 வது ஓவரில் லெக் ஸ்டம்ப் லைனில் வீசப்பட்ட ஒரு பந்தை வைடுக்கு ஆசைப்பட்டு ரஸல் ஆடாமல் விட அந்த பந்து ஸ்டம்பை தாக்கியது. 54 ரன்களில் ரஸல் வெளியேறினார். முடிந்தது அபாயம் என நினைத்தால், அடுத்து பேட் கம்மின்ஸ் உள்ளே வந்தார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய தினேஷ் கார்த்திக் 40 ரன்களில் இங்கிடி பந்தில் lbw ஆனார்.
இதன்பிறகு ஒற்றை ஆளாக நின்று பேட் கம்மின்ஸ் சென்னை அணியை பயமுறுத்தினார். சாம்கர்ரன் வீசிய ஒரே ஓவரில் 4 சிக்சர்களுடன் 30 ரன்களை சேர்த்தார். அரைசதத்தை கடந்த கம்மின்ஸ் கடைசி ஓவரில் 20 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலை வரை அணியை கொண்டு வந்தார். ஆனால், கடைசி ஓவரின் முதல் பந்திலேயே கம்மின்ஸ் இரண்டு ரன்களுக்கு முயல பிரஷித் கிருஷ்ணா ரன் அவுட் ஆக கொல்கத்தாவும் ஆல் அவுட் ஆனது. பேட் கம்மின்ஸ் 66 ரன்களில் நாட் அவுட்டாக இருந்தார்.
சென்னை அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இந்த வெற்றியின் மூலம் இந்த சீசனில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்திருக்கிறது சென்னை அணி. கடந்த சீசனில் சொதப்பியதற்கெல்லாம் சேர்த்து வைத்து இந்த சீசனில் பட்டையைக் கிளப்பி வரும் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கும் முன்னேறியிருக்கிறது. விசில் போடு!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!