Sports
“அமித் மிஷ்ராவின் 4 விக்கெட்டும்; தவானின் பொறுப்பான ஆட்டமும்” - மும்பையை காலி செய்த டெல்லி! IPL2021
டெல்லியும் மும்பையும் கடைசியாக மோதிக்கொண்ட 5 போட்டிகளில் மும்பை அணியே வென்றிருந்தது. அதனால் நேற்றைய போட்டியிலும் மும்பை அணி எப்படியும் வென்றுவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பண்ட் தலைமையிலான டெல்லி அணி வரலாற்றை மாற்றி எழுதியுள்ளது.
சேப்பாக்கம் சம்பிரதாயப்படி, மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். சுமாரான ஒரு ஸ்கோரை எடுத்துவிட்டால் கூட டிஃபண்ட் செய்துவிடலாம் என்கிற நம்பிக்கை ரோஹித்துக்கு இருந்தது.
மும்பை அணியின் சார்பில் ரோஹித் சர்மாவும் டீகாக்கும் ஓப்பனர்களாக களமிறங்கினார். டெல்லி அணியின் கேப்டனான பண்ட் கொஞ்சன் வித்தியாசமாக யோசித்து ஆல்ரவுண்டரான ஸ்டாய்னிஸுக்கு முதல் ஓவரை கொடுத்தார். முதல் ஓவரிலேயே பவுண்டரி அடித்து அசத்தினார் ரோஹித் சர்மா. ஆனாலும், பண்ட்டின் வித்தியாசமான யுக்திக்கு பலன் கிடைக்கவே செய்தது. ஸ்டாய்னிஸ் வீசிய மூன்றாவது ஓவரில் 2 ரன்னில் இருந்த டீகாக் எட்ஜ் ஆகி ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
நம்பர் 3 இல் சூரியகுமார் யாதவ் களமிறங்கினார். அவரின் உதவியுடன் ரோஹித் சர்மா அதிரடியாக ஆட ஆரம்பித்தார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்புவதால் அவர்களுக்கும் சேர்த்து பவர்ப்ளேயில் அதிரடி காட்ட வேண்டும் என்கிற பொறுப்பு ரோஹித்துக்கு இருந்தது. அதை திறம்பட சமாளித்தார் ரோஹித். முடிந்தளவு எல்லா பௌலர்களையுமே பவுண்டரிக்கு விரட்டினார். குறிப்பாக, ரபாடாவின் ஓவரில் லெக் ஸ்டம்புக்கு வெளியே நகர்ந்து வந்து லாங் ஆஃபில் அடித்த சிக்சர் அட்டகாசமாக இருந்தது. இந்த கூட்டணி சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கும் போதே ஆவேஷ்கானின் ஓவரில் சூரியகுமார் யாதவ் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்த 14 ரன்களுக்குள் மும்பை அணி மேலும் 5 விக்கெட்டுகளை இழந்தது. அமித் மிஷ்ராவின் சுழலில் சிக்கி ரோஹித் சர்மா 44 ரன்களில் வெளியேறினார். அதே அமித் மிஷ்ராவிடமே ஹர்திக் பாண்ட்யா மற்றும் பொல்லார்டும் சிக்கி அவுட் ஆக, மும்பை அணியின் மிடில் ஆர்டர் காலியானது. ஹர்திக் பாண்ட்யாவுக்கு பந்தை காற்றில் தூக்கிப் போட்டு பெரிய ஷாட்டுக்கு இழுத்து வம்படியாக அவுட் ஆக்கியிருப்பார் அமித் மிஷ்ரா. அதேநேரத்தில், பொல்லார்ட்க்கு ஒரு கூக்ளியை வீசி lbw ஆக்கியிருப்பார். மொத்தமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அட்டகாசப்படுத்தினார் மிஷ்ரா.
இஷன் கிஷன் மற்றும் ஜெயந்த் யாதவ் மட்டுமே கொஞ்சம் நின்று ஆடி மும்பை அணி கௌரவமான டார்கெட்டை எட்ட வைத்தனர். 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்களை சேர்த்தது. 138 ரன்கள் என்ற எளிய டார்கெட்தான் என்றாலும் டெல்லி அணி கொஞ்சம் கவனமுடனே களமிறங்கியது. மும்பை அணியும் டெல்லிக்கு கடினம் அளிக்கும் வகையிலேயே பந்துவீசியது. ஜெயந்த் யாதவ் வீசிய இரண்டாவது ஓவரிலேயே ஓப்பனரான பிரித்திவி ஷா அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதன்பிறகு, தவானும் ஸ்டீவ் ஸ்மித்தும் கூட்டணி போட்டனர். இவர்களின் பார்ட்னர்ஷிப்தான் டெல்லி அணியை தூக்கி நிறுத்தியது. இந்த கூட்டணி 53 ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய ஸ்மித் 33 ரன்களில் வெளியேறினார். ஆட்டத்தை டெல்லி பக்கம் திருப்பியதில் தவானின் பங்கு முக்கியமாக இருந்தது. ரிஸ்க் எடுத்து தேவையில்லாத ஷாட் ஆடாமல் அவ்வப்போது பவுண்டரிக்களை அடித்து சிறப்பாக ஆடினார் தவான். ராகுல் சஹாரின் ஓவரில் ஒரு சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்தவர் அதே ஓவரில் க்ரூணால் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து 45 ரன்களில் வெளியேறினார்.
Also Read: சென்னையின் சுழலில் சிக்கி சின்னாபின்னமான ராஜஸ்தான்: 2வது இடத்துக்கு முன்னேறிய சி.எஸ்.கே! IPL2021
தவான் அவுட் ஆனவுடன், கேப்டன் ரிஷப் பண்ட்டும் சீக்கிரமே அவுட் ஆக ஆட்டம் கொஞ்சம் பரபரப்பான கட்டத்தை எட்டியது. மும்பை அணிக்கும் வெற்றிக்கான வாய்ப்பு இருப்பது போல் தோன்றியது. கடைசி ஓவரில் டெல்லி அணியின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. பொல்லார்ட் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தையே பவுண்டரிக்கு அடித்து அழுத்தத்தை குறைத்து வெற்றி பெற வைத்தார் ஹெட்மயர். இறுதியாக, 19.1 ஓவர்களில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
4 விக்கெட்டுகள் எடுத்து மிஷ்ராவும் நிலைத்து நின்று ஆடி தவானும் டெல்லிக்கு இந்த வெற்றியை பெற்றுக் கொடுத்தனர். 4 போட்டிகளில் ஆடி மூன்றில் வென்றுள்ள டெல்லி அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!