Sports
IPL2021 : மீண்டும் சொதப்பிய மிடில் ஆர்டர்; மீள முடியாமல் தவிக்கும் சன்ரைசர்ஸ்! MI vs SRH
ஐ.பி.எல் 2021 சீசனில் எல்லா அணிகளும் தங்களுடைய முதல் வெற்றியைப் பதிவு செய்து புள்ளிக்கணக்கை தொடங்கிவிட்டனர். சன்ரைசர்ஸ் அணி மட்டுமே முதல் வெற்றியை பெற முடியாமல் தடுமாறி வந்தது. மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியை எப்படியாவது வென்று வெற்றிக்கணக்கை தொடங்கிவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தது சன்ரைசர்ஸ் அணி.
ஆனால், சொதப்பலான ஆட்டத்தால் மும்பை அணியிடம் 13 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தையே பிடித்துள்ளது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். சராசரியான ஸ்கோரை எடுத்தாலும் டிஃபண்ட் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையில் ரோஹிரத் சர்மா இந்த முடிவை எடுத்தார்.
சன்ரைசர்ஸ் அணியில் தமிழக வீரரான நடராஜன் நீக்கப்பட்டு, கலீல் அஹமது சேர்க்கப்பட்டிருந்தார். மும்பை அணியின் சார்பில் ரோஹித் சர்மாவும் டீகாக்கும் ஓப்பனர்களாக களமிறங்கினர். சென்னை சேப்பாக்கம் மைதானம் ரொம்பவே மெதுவாக இருக்கும். அதனால் டெத் ஓவர்களில் அதிக ரன்களை சேர்க்க முடியாது என்பதால், கடந்த போட்டியை போன்று மெதுவாக ஆடாமல் பவர்ப்ளேயிலேயே அதிரடி காட்டத் தொடங்கினார் ரோஹிரத் சர்மா.
முஜிபுர் ரஹ்மான், புவனேஷ்வர் குமார், கலீல் அஹமது என பவர்ப்ளேயில் பந்துவீசிய மூவரின் ஓவரிலும் பவுண்டரிக்களையும் சிக்சரையும் அடித்தார் ரோஹித் சர்மா. ரோஹித்தின் அதிரடியால் மும்பை அணி பவர்ப்ளேயின் முடிவில் விக்கெட் விடாமல் 53 ரன்களை சேர்த்தது. இந்நிலையில், 7 வது ஓவரை வீசுவதற்கு தமிழக வீரரான விஜய் சங்கரை அழைத்து வந்தார் வார்னர்.
சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ரோஹித் சர்மாவின் விக்கெட்டை இந்த ஓவரில் வீழ்த்தினார் விஜய் சங்கர். பெரிய ஷாட்டுக்கு முயன்று கேட்ச் கொடுத்து 32 ரன்களில் வெளியேறினார் ரோஹித் சர்மா. தொடர்ந்து, விஜய் சங்கர் சிறப்பாக வீசினார். விஜய் சங்கரின் மெதுவான பந்துகளை சமாளிக்க மும்பை இந்தியன்ஸ் பேட்ஸ்மேன்கள் தடுமாறிமார். விஜய் சங்கர் வீசிய 9 வது ஓவரில் சூரியகுமார் யாதவ் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
இதுவரை மும்பை அணியின் ரன்ரேட் நன்றாகவே உயர்ந்துக் கொண்டிருந்தது. இதன்பிறகுதான் மும்பை அணி கொஞ்சம் மெதுவாக ஆட தொடங்கியது. சன்ரைசர்ஸ் அணியின் பௌலர்களும் சிறப்பாக வீசினர். நீண்ட நேரம் க்ரீஸில் நின்ற டீகாக் 39 பந்துகளில் 40 ரன்களை எடுத்து வெளியேறினார். ஹர்திக் பாண்ட்யா, இஷன் கிஷன் என யாராலுமே எதிர்பார்த்த அளவுக்கு பெரிய ஷாட்களை ஆட முடியவில்லை. பொல்லார்ட் மட்டுமே கடைசி ஓவரில் இரண்டு பெரிய சிக்சர்களை அடித்து மும்பை அணியின் ஸ்கோரை 150 ஆக உயர்த்தினார். 22 பந்துகளில் 35 ரன்களை அடித்த பொல்லார்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. விருத்திமான் சஹா இல்லாததால் கேப்டன் வார்னரும் பேர்ஸ்ட்டோவும் ஓப்பனர்களாக இறங்கினர். முதல் இரண்டு ஓவரை இந்தக் கூட்டணி கொஞ்சம் அமைதியாகவே எதிர்கொண்டது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்னிங்ஸின் பிற்பகுதியில் அதிக ரன்கள் அடிக்க முடியாது என்பதை சன்ரைசர்ஸும் உணர்ந்திருந்தது. அதனால், பேர்ஸ்ட்டோ அதிரடியை கையில் எடுத்தார்.
பந்துகளை பவுண்டரியும் சிக்சருமாக பறக்கவிட்டுக் கொண்டே இருந்தார் பேர்ஸ்ட்டோ. இதனால் 3,4,5 இந்த மூன்று ஓவர்களில் மட்டுமே 50 ரன்கள் வந்திருந்தது. தொடர்ந்து அதிரடிக்காட்டி அரைசதம் கடந்த பேர்ஸ்ட்டோ துரதிர்ஷ்டவசமாக க்ரூணால் பாண்ட்யாவின் ஓவரில் ஹிட் விக்கெட் ஆகி வெளியேறினார். இந்த ஒரு விக்கெட்தான் ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. மேலும், நன்கு செட்டில் ஆகி நின்ற கேப்டன் வார்னரும் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
இதன்பிறகு, வழக்கம்போல சன்ரைசர்ஸ் அணியின் மிடில் ஓவர் சொதப்ப தொடங்கியது. விஜய் சங்கர் மட்டுமே கொஞ்சம் நின்று முயன்று பார்த்தார். ஆனால், அவராலும் அணியை வெற்றிபெறச் செய்ய முடியவில்லை. 28 ரன்களில் விஜய் சங்கர் அவுட் ஆனார். கடைசி ஓவரில் சன்ரைசர்ஸின் வெற்றிக்கு 16 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், பெரிய பேட்ஸ்மேன்கள் யாரும் இல்லாததால் மும்பை அணி எளிதில் 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பேர்ஸ்ட்டோ ஆடிக்கொண்டிருக்கும் போது சன்ரைசர்ஸ் அணி சுலபமாக வென்றுவிடும் என்றே தோன்றியது. ஆனால், அந்த அணியின் மிடில் ஆர்டர் மீண்டும் சொதப்பியதால் கையிலிருந்த மேட்ச்சை மீண்டும் ஒரு முறை கோட்டைவிட்டிருக்கிறது சன்ரைசர்ஸ். மிடில் ஆர்டர் பிரச்சனையை தீர்க்கும் வரை அந்த அணி பெரிய வெற்றிகளை பெறுவது சந்தேகமே. பென்ச்சில் இருக்கும் வில்லியம்சனை ப்ளேயிங் லெவனில் கொண்டு வாங்க சன்ரைசர்ஸ்!
Also Read
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?