Sports
இந்தியா இன்று தலைசிறந்த அணிகளை எல்லாம் புரட்டியெடுப்பதற்கு விதை இவர் போட்டது... யார் இந்த விஜய் ஹசாரே?
இந்திய கிரிக்கெட் அணி இன்று பல அசாத்தியமான வெற்றிகளையும் சாதனைகளையும் பதிவு செய்து உலக அரங்கில் வீரநடை போட்டு வருகிறது. இதற்கெல்லாம், தொடக்கப்புள்ளியாக இருந்தவர் யார் என்பதை அறிய வேண்டியது முக்கியமான விஷயம். ஏனெனில், பாதைகளில் பயணிப்பவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை விட அந்த பாதையை உருவாக்கியவர் அதற்காக எதிர்கொண்ட சிரமங்கள் எப்போதும் அதிகமாகவே இருக்கும். இந்தியா இன்று இங்கிலாந்து ஆஸ்திரேலியா என நாம் அண்ணாந்து பார்த்த நாடுகளையெல்லாம் புரட்டி எடுக்கிறது எனில் அதற்கான விதையை முதல்முதலில் விதைத்தவர் விஜய் ஹசாரே எனும் ஜாம்பவான்!
1930களிலிருந்து இந்திய அணி கிரிக்கெட் ஆடி வருகிறது. ஆனாலும், முதல் வெற்றியை பெறுவதற்காக இந்திய அணி 20 வருடங்களுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது. பிப்ரவரி 10, 1952 இல் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் சென்னையில்தான் இந்திய அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. அந்த வரலாற்று சிறப்புமிக்க போட்டிக்கு இந்திய அணிக்கு கேப்டனாக இருந்து வழிநடத்தியவர் விஜய் ஹசாரேதான். இந்தியாவின் முதல் வெற்றி மட்டுமில்லை. இந்திய கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை முதன்முதலாக செய்தவர் விஜய் ஹசாரேதான்.
முதன்முதலாக முதல்தர போட்டிகளில் முச்சதம் அடித்த இந்தியர்.
இந்திய அணிக்காக ஆயிரம் ரன்களை கடந்த முதல் பேட்ஸ்மேன்.
இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன்.
தொடர்ந்து 3 போட்டிகளில் சதமடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன்.
இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதை வென்ற முதல் கிரிக்கெட் வீரர்
இப்படி விஜய் ஹசாரே முதன்முதலாகச் செய்த சாதனைகளை பட்டியலிட்டால் இன்னும் நீண்டு கொண்டே போகும்.
1934-ம் ஆண்டிலிருந்தே ரஞ்சி போட்டிகளில் ஆடி வரும் விஜய் ஹசாரே 1946-ல்தான் இந்திய அணிக்காக அறிமுகமானார். ஆனாலும், அவர் மிகப்பெரிய வீரராக மாறியது 1948-ல் நடந்த ஆஸ்திரேலிய தொடரில்தான். இந்தத் தொடரில் அடிலெய்டில் நடைபெற்ற போட்டியில் டான் பிராட்மேன் தலைமையிலான வலிமைமிக்க ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸிலும் சதமடித்து மிரட்டினார். விஜய் ஹசாரே இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்தவுடன் கிரிக்கெட்டின் பிதாமகன் பிராட்மேனே விஜய் ஹசாரேவுக்கு கைகுலுக்கி வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
மேலும், மிதவேக பந்துவீச்சாளரான விஜய் ஹசாரே இந்த சீரிஸில் இரண்டு முறை பிராட்மேனை போல்டாக்கினார். 'நான் அடித்த செஞ்சுரிகளை விட பிராட்மேனின் விக்கெட்டுகள்தான் மிகச்சிறந்தவை' என விஜய் ஹசாரேவே பின்னாட்களில் கூறியிருக்கிறார்.
விஜய் ஹசாரே பேட்டை பிடிக்கும் ஸ்டைலே மிகவும் வித்தியாசமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. கைப்பிடியின் மேற்புறத்தில் ஒரு கையையும் பேட்டின் பகுதியில் ஒரு கையையும் வைத்து பிடித்திருப்பாராம். இரண்டு கைகளுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்குமாம். இப்படி பேட் பிடிக்கும் ஸ்டைலால் ஆர்த்தோடாக்ஸ் ஷாட்களை ஆட முடியாது என பலரும் அவரை விமர்சிக்கவும் செய்திருக்கிறார்கள். ஆனால், விஜய் ஹசாரேவோ அச்சுப்பிசகாமல் கவர் ட்ரைவ், ஸ்கொயர் கட், ஹுக் ஷாட் என ஆடி ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார்.
இரண்டாம் உலகப்போர் சமயத்தில் உலகளவில் இந்தியாவில் மட்டுமே கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. இந்திய ரசிகர்களுக்கு கிரிக்கெட் அந்நியமாகாமல் இருந்ததற்கு விஜய் ஹசாரே இந்த போர்க்காலத்தில் ஆடிய வெறித்தனமான ஆட்டங்களே காரணம் என கூறப்படுகிறது. முதல்தர போட்டிகளில் மொத்தம் 10 இரட்டை சதங்களை அடித்திருக்கும் ஹசாரே அதில் 6 இரட்டை சதங்களை உலகப்போர் சமயத்தில்தான் அடித்தார்.
டாப் ஆர்டர் சொதப்பும்போதெல்லாம் மிடில் ஆர்டரில் இறங்கி இந்திய அணியை தூக்கி நிறுத்திய விஜய் ஹசாரேவுக்கு 1951-ல் கேப்டன் பதவி தேடிவந்தது. கேப்டன்சியையும் சிறப்பாக செய்து இந்திய அணியை வரலாற்று சிறப்புமிக்க முதல் வெற்றியை பதிவு செய்ய வைத்தார்.
இயல்பிலேயே கூச்ச சுபாவம் கொண்டவரான அவர் அமைதியாக இருக்கக்கூடியவர் என்பதால் கேப்டன்சியை கையாள்வதில் சில சிரமங்கள் இருக்கவே செய்திருக்கிறது. கேப்டன்ஷிப் அழுத்தத்தால் பேட்டிங்கில் கவனம் செல்லுத்த முடியாததால் பதவியை விட்டு விலகினார். லாலா அமர்நாத் கேப்டன் பதவியை ஏற்க அவர் ஓய்வு பெற்ற பிறகு மீண்டும் விஜய் ஹசாரேவுக்கு கேப்டன் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. விஜய் ஹசாரே தலைமையில் வெஸ்ட் இண்டீஸுக்கு சென்ற இந்திய அணி மோசமாக தோற்றது. 10 இன்னிங்ஸில் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்தார் விஜய் ஹசாரே. இதனால் இந்த தொடருக்கு பிறகு கேப்டன் பதவியிலிருந்து விலகியதோடு மட்டுமின்றி இந்திய அணியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 30 போட்டிகளில் மட்டுமே ஆடிய நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் அமைந்தது விஜய் ஹசாரேவின் இந்த முடிவு.
238 முதல் தர போட்டிகளில் ஆடிய விஜய் ஹசாரே 18,000 ரன்களுக்கும் மேல் அடித்திருந்தார். இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் கூட பல ஆண்டுகள் ரஞ்சி போட்டியில் ஆடியிருக்கவே செய்தார். 'ஹசாரே ஒரு சிறந்த படைவீரர் ஆனால், அவர் ஒரு சிறந்த தளபதி இல்லை' என விஜய் மெர்சன்ட், ஹசாரே குறித்து குறிப்பிடுவார்.
அந்த கேப்டன் பதவி மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் விஜய் ஹசாரே காலத்துக்கும் நிலைத்து நிற்கும் வகையில் பல சாதனைகளை பேட்டிங்கில் செய்திருப்பார். இந்திய அணிக்காக முதல் வெற்றியை பெற்றுக்கொடுத்த கேப்டன், கேப்டன்ஷிப் அழுத்தத்தால் அணியை விட்டு விலகியது மிகப்பெரிய வினோதம்தான். முதலில் குறிப்பிட்டதை போன்றுதான் செப்பனிடப்பட்ட பாதையில் பயணிப்பது ரொம்பவே சுலபம். ஆனால், பாதையை உருவாக்குவது லேசுப்பட்ட காரியமில்லை. விஜய் ஹசாரே தன்னுடைய கரியரை தியாகம் செய்து இந்திய அணிக்கான வெற்றிப்பாதையை உருவாக்கிக் கொடுத்தார். அதற்காகவே அவரை வரலாறு போற்றும்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!