Sports
“இவர் வேற ரகம்” - கேம் சேஞ்சிங் இன்னிங்ஸை ஆடியிருக்கும் ரிஷப் பன்ட்! #INDvENG
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அடிலெய்டிலும் ப்ரிஸ்பேனிலும் ஆடியதை போல ஒரு கேம் சேஞ்சிங் இன்னிங்ஸை இன்று மீண்டும் ஆடியிருக்கிறார் ரிஷப் பன்ட். ஒட்டுமொத்தமாக ஆட்டத்தில் இங்கிலாந்தின் கை ஓங்கியிருக்கும்போது உள்ளே வந்து சதம் அடித்து ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பியிருக்கிறார். இந்தத் தொடரில் இதற்கு முன்னர் ரூட் அடித்த இரட்டை சதத்தை விடவும் ரோஹித் அடித்த பெரிய சதத்தை விடவும் இவரது இந்த இன்னிங்ஸ் முக்கியத்துவம் வாய்ந்தது என உறுதியாகக் கூறலாம்.
பிட்ச் பெரிய அளவுக்கு ஸ்பின்னர்களுக்கு உதவாத போதும் இங்கிலாந்து வீரர்கள் முதல் இன்னிங்ஸை ரொம்ப மோசமாக ஆடியிருந்தனர். ஒன்றுமே இல்லாத பிட்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கடுமையாக திணறியதால் அவர்களுடைய டெக்னிக்கில்தான் எதோ பிரச்சனை இருக்கிறது என தோன்றியது. ஆனால், இந்திய வீரர்களுமே இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை போலவே திணறிக்கொண்டிருந்தனர். அப்போதுதான் டெக்னிக் பெரிய பிரச்சனை இல்லை. இரு அணி வீரர்களின் மனநிலையும் அணுகுமுறையும்தான் பிரச்சனை என்பது புரிந்தது.
இரண்டு அணி வீரர்களுமே கடந்த டெஸ்ட் போட்டியின் பாதிப்பிலிருந்து மனதளவில் மீண்டு வரவில்லை. பெரியளவில் ஒன்றுமே இல்லாத இந்த பிட்ச்சை கடந்த போட்டியின் ஸ்பின் ட்ராக்கோடு ஒப்பிட்டுக் கொண்டு அதீத ஜாக்கிரதையோடு ஆடிக்கொண்டிருந்தனர். யாராலும் அவர்களுடைய நேச்சுரல் கேமை ஆடவே முடியவில்லை.
ஹிட்மேன் ரோஹித் ஷர்மா ஸ்ட்ரைக் ரேட் 25-க்கும் கீழ் செல்லும் அளவுக்கெல்லாம் உருட்டினார். புஜாரா ஸ்பின்னர்களிடம் சரியான ஃப்ரன்ட் ஃபூட் மூவ்மென்ட் இல்லாமல் திணறினார். ஜேக் லீச் வீசிய 7 பந்துகளில் 2 ரன் மட்டுமே எடுத்து விக்கெட்டையும் பறிகொடுத்தார். ரன் கணக்கைத் தொடங்கவேண்டிய அவசரத்தில், ஸ்டோக்ஸ் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசும் ஒரு ஷார்ட் பாலில் பேட்டை விட்டு அவுட் ஆனார் கோலி.
முக்கியமான பேட்ஸ்மேன்கள் எல்லோருமே பிட்ச் அதிகமாக ஸ்பின்னுக்கு ஒத்துழைப்பது போலவும் பேட்டிங் ஆட சிரமமாக இருப்பது போலவும் மனதளவில் பாவித்துக்கொண்டனர். அதனால், ஒன்று ஸ்பின்னை தட்டுத்தடுமாறி ஆடினர் அல்லது ஸ்பின்னை தடுத்தாடிவிட்டு வேகப்பந்து வீச்சில் ரன்கள் சேர்ப்போம் என்ற நினைப்பில் பேட்டை விட்டு அவுட் ஆகியிருந்தனர். இந்த அதீத ஜாக்கிரதைத்தனமே வீரர்களை தங்களுடைய நேச்சுரல் கேமை ஆட விடாமல் செய்தது. இதுவே இந்தியாவுக்கு வில்லனாகவும் அமைந்தது. ஆனால், இதற்கெல்லாம் விதிவிலக்காக ரிஷப் பன்ட் மட்டுமே தன்னுடைய நேச்சுரல் கேமை எந்த மனத்தடையும் இன்றி அற்புதமாக ஆடினார்.
உணவு இடைவேளையின்போது இந்தியா 80-4 என்ற நிலையில் இருந்தது. அப்போதுதான் ரிஷப் பன்ட் உள்ளே வந்தார். இடைவேளையின்போது கவாஸ்கரும் கிரீம் ஸ்வானும் போட்டியை அலசிக் கொண்டிருந்தனர். அப்போது ஸ்வான், 'ஒரு 10-20 ரன்கள் முன்னிலை எடுப்பது கூட வெற்றியை தீர்மானிக்கக்கூடியதாக அமைந்துவிடும்' எனக் கூறியிருப்பார். இந்தியா அப்போது இருந்த நிலைக்கும் 10-20 இல்லை 50-60 ரன்களை இங்கிலாந்துக்கு லீடாக கொடுக்கும் நிலையில் இருந்தது. அப்படி நடந்திருந்தால் இந்தியா இந்த டெஸ்ட்டை வெற்றி பெறுவது என்பது அசாத்தியமாகியிருக்கும். டெஸ்ட் சாம்பியன்ஷிப்பும் கனவாகியிருக்கும். ஆனால், ரிஷப் எல்லாவற்றையும் மாற்றினார்.
எந்த மனத்தடையும் இன்றி எப்போதும் தன் இன்னிங்ஸை எப்படி தொடங்கி கட்டமைப்பாரோ அப்படியே தொடங்கி சிறப்பாக ஆடினார். முதலில் மெதுவாக ஆரம்பித்து ஏதுவாக வரும் பந்துகளை பவுண்டரியாக்கி ஆடிக்கொண்டிருந்தார். ஜேக் லீச் மட்டும் பந்தை உடம்புக்குள் திருப்பி பண்ட்டுக்கு கொஞ்சம் தொந்தரவு செய்தார். ஆனால், அதுவும் பெரியளவில் இங்கிலாந்துக்கு கைக்கொடுக்கவில்லை. 82 பந்துகளில் அரைசதத்தை கடந்தார் பன்ட். இதன்பிறகுதான் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது.
அதன்பிறகு எல்லா பௌலர்களையும் அடித்துத் துவைத்தார். ரூட் பந்தில் அவருக்கே ஸ்வீப் ஷாட் அடித்துக் காட்டியதெல்லாம் அட்டகாசம். கொஞ்ச நேரத்தில் புதிய பந்து எடுக்கப்போகிறார்கள் என்பதால் இப்போது அதிரடியாக ஆடிவிட்டு நியுபாலில் டிஃபன்ஸிவ் மோடுக்கு செல்வார் என தோன்றியது. ஆனால், நியுபாலில் அவர் செய்ததுதான் தரமான சம்பவம்.
நியுபாலை கையில் எடுத்து ஆண்டர்சன் வீசிய முதல் பந்தையே இறங்கி வந்து மிட் ஆஃபின் தலைக்கு மேல் பவுண்டரியாக்கினார். நியுபாலின் முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரியாக்கிய பண்ட் ஆண்டர்சன் வீசிய அடுத்த ஓவரில் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி அனைவரையும் ஒரு நிமிடம் உறைய வைத்துவிட்டார். 17 வருட அனுபமிக்க ஒரு பௌலரை, 600 விக்கெட்டுக்கு மேல் எடுத்த வீரரை அதுவும் நியுபாலில் இப்படி ஓட ஓட விரட்டியவர் ரிஷப் பன்டாக மட்டுமே இருக்க முடியும். இதுதான் ரிஷப் பன்ட். இதுதான் அவரின் நேச்சுரல் கேம். இதை அவர் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்கவில்லை. இந்திய அணியின் மற்ற பேட்ஸ்மேன்களுக்கும் பன்ட்டுக்கும் இடையேயான வித்தியாசமும் கூட இதுதான்.
இப்போது அணிகள் அனைத்தும் லெக் சைடு ப்ளான் ஒன்றை வைத்துக்கொண்டு தொடர்ந்து பேட்ஸ்மேன்களை அட்டாக் செய்கின்றனர். ஆனால், இன்று ரூட் அப்படியில்லாமல் ஆஃப் சைடில் தான் முழுக்கவனத்தையும் செலுத்தி ஃபீல்ட் வைத்திருந்தார். ஆனால், பன்ட் ஆஃப் சைடில்தான் அதிக ரன்களை அடித்திருக்கிறார். இதுவும் அவரின் துணிச்சலுக்கு ஒரு உதாரணம்!
82 பந்துகளில் அரைசதத்தை கடந்த பண்ட் 116 பந்துகளிலேயே சதத்தை அடித்துவிட்டார். அடுத்த 34 பந்துகளில் இரண்டாவது ஐம்பது! இந்திய அணி இன்று 89 ரன்கள் முன்னிலை எடுத்து வலுவான நிலையில் இருக்கிறது என்றால் அதற்கு பன்ட் அதிரடி காட்டிய இந்த 34 பந்துகள்தான் மிக முக்கிய காரணம். இந்திய அணி இந்த போட்டியை வெல்வதற்கும் இந்த 34 பந்துகளே காரணமாக இருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
எத்தனையோ கேலி கிண்டல்களையும் ஒப்பீடுகளையும் இளம் வயதிலேயே கடந்துவிட்ட பன்ட், இப்போது இந்திய அணிக்கு செய்து கொண்டிருப்பதெல்லாம் ஆச்சர்யத்தின் உச்சங்களை தொடுகிறது. இனிமேலும், பன்ட்டை எந்த வீரரோடும் ஒப்பிட்டால் அதை விட பெரிய முட்டாள்தனம் வேறு எதுவும் இருக்காது. பன்ட் வேற ரகம்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!