Sports
“எதிரணியினரை வெடவெடக்கச் செய்யும் அந்த அதிரடிக்குப் பெயர்தான் அஃப்ரிடி” - பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை!
ஆட்ட நுணுக்கங்களை அதுசார்ந்த வழிமுறைகளை முறையாக பாலபாடமாக கற்று திறமையை வளர்த்துக்கொண்டு கிரிக்கெட்டில் ஜொலித்த வீரர்கள் அதிகம் பேர் இருக்கிறார். இன்னொரு புறம், பெரிதாக எந்த ஆட்ட நுணுக்கங்களையும் அழகியல் தன்மைகளையும் கற்றுத்தேற வேண்டிய அவசியம் இல்லாமல் இயற்கையாக தங்களுக்குள் திறன்களை பொதிந்து வைத்துள்ள வீரர்களும் இருக்கவே செய்கின்றனர். உதாரணம், கரீபிய பேட்ஸ்மேன்கள்.
காலனி ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டு ஒடுக்கப்பட்ட மரபை கொண்ட கரீபியர்களின் உடல் வலிமையையும் கிரிக்கெட்டில் அவர்களின் ‘ஹார்ட் ஹிட்டிங்’ திறமையையும் வெவ்வேறாக பார்க்க முடியாது. வெஸ்ட் இண்டீஸை தவிர்த்து ஒரு அணியாக முழுவதுமே இயற்கையாகவே வலுவாக பேட்டை சுழற்றும் திறனை கொண்ட வீரர்கள் அதிகம் இருக்கும் அணி என்று எந்த நாட்டையும் குறிப்பிட்டுக் கூறிவிட முடியாது. ஒவ்வொரு நாட்டிலும் சில குறிப்பிட்ட வீரர்கள் மட்டுமே அவ்வாறு இயற்கையாகவே அமையப்பெற்ற வலுவோடு கிரிக்கெட் ஆடி வருகின்றனர். பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ஷாகித் அஃப்ரிடி அதில் முதன்மையானவர்.
1996-ல் பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, கென்யா நாடுகள் ஆடிய தொடரில்தான் அஃப்ரிடி அறிமுகமானார். பாகிஸ்தானின் மூத்த லெக் ஸ்பின்னர் முஷ்தாக் அஹமது காயம் அடைந்தததன் காரணமாகவே பாகிஸ்தான் A அணிக்காக ஆடிக்கொண்டிருந்த அஃப்ரிடி பாகிஸ்தான் அணிக்கு அழைக்கப்பட்டார். முஷ்தாக் அஹமதுக்கு ரீப்ளேஸ்மெண்ட் என்பதால் பாகிஸ்தான் அணியுமேகூட இவரை ஒரு லெக் ஸ்பின்னர் ஆல்ரவுண்டராகத்தான் பார்த்திருக்கிறது. ஆனால், அந்தப் பார்வையை உடைத்தெறிவதற்கு அஃப்ரிடிக்கு இரண்டு ஆட்டங்களே போதுமானதாக இருந்தன.
அறிமுகமான கென்யாவுக்கு எதிரான போட்டியில் அவருக்கு பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டாவது போட்டியில் இலங்கைக்கு எதிராகத்தான் அஃப்ரிடிக்கு பேட்டிங் ஆட வாய்ப்புக் கிடைத்தது. இதற்கு பின்னால் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இருக்கிறது. இலங்கை அணியில் ஜெயசூர்யாவும் கலுவிதராணாவும் அதிரடியில் வெளுத்து வாங்கக்கூடியவர்கள். அவர்களை ஒத்த அதிரடியாக ஆடும் ஒரு பேட்ஸ்மேன் நமக்கும் டாப் ஆர்டரில் வேண்டும் என பாகிஸ்தான் அணி நினைத்திருக்கிறது. அப்போதுதான் இலங்கைக்கு எதிரான போட்டிக்கு முன்பாக வலைப்பயிற்சியில் இளம் வீரரான அஃப்ரிடி ஸ்பின்னர்களை அடித்து துவம்சம் செய்திருக்கிறார். இதைப் பார்த்த கேப்டன் சயீத் அன்வர் அஃப்ரிடியை டாப் ஆர்டரில் இறக்க முடிவெடுத்திருக்கிறார்.
நம்பர் 3 இல் இறங்கி இலங்கைக்கு எதிராக அஃப்ரிடி அடித்த அடி பாகிஸ்தான் அணியை மட்டுமல்ல ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்தையுமே மிரட்சியில் ஆழ்த்தியது. 37 பந்துகளில் சதமடித்து அஃப்ரிடி செய்த சாதனையை முறியடிப்பற்கு 20 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 20 ஆண்டுகளும் அஃப்ரிடி எனும் மாயாஜாலன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் கோலோச்சிக் கொண்டேதான் இருந்தார்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக தேசிய அணியில் ஆடும் அளவுக்கு அஃப்ரிடி திறமையானவரா என்று கேட்டால், முழு மனதோடு ஆம் என்று நம்மால் பதில் கூறிவிட முடியாது. ஆனால், 1996-ல் இலங்கைக்கு எதிராக அவர் ஆடியபோது ஏற்படுத்திய மிரட்சியை இன்றைக்கும் அவர் க்ரீஸுக்குள் வந்து நின்றால் உணரமுடியும் என்பதே உண்மை. 2011 உலகக்கோப்பை அரையிறுதியில் ஏறக்குறைய இந்தியாவின் வெற்றி உறுதியான பிறகும் கூட நம்மால் பெருமூச்சு விட முடியவில்லை. காரணம், அஃப்ரிடி க்ரீஸில் நின்றார். அஃப்ரிடி ஏற்படுத்திய இந்த பயம்தான் அவருடைய நீண்ட நெடிய கரியரின் மூலதனம். புலி வருது…புலி வருது…கதையாக பல போட்டிகளில் சொதப்பியிருந்தாலும் புலி வந்துவிட்டால்…பாய்ந்துவிட்டால்…என்ன செய்வது! அவ்வளவுதான். அந்த பயத்தை அனைவருக்கும் ஏற்படுத்தி வைத்திருந்தார். குறிப்பாக, இந்திய அணிக்கும் இந்திய ரசிகர்களுக்கும்.
ஆண்டர்சனை இங்கிலாந்துக்கு வெளியே விக்கெட் வீழ்த்தமாட்டார் என விமர்சிப்பார்கள். ஆனால், ஆஸ்திரேலியாவில் ஆண்டர்சன் வெறிகொண்டு விக்கெட் வீழ்த்தியிருக்கிறார். காரணம், ஆஸிக்கும் இங்கிலாந்துக்கும் பரமபகை. ஆஸியிடம் தோற்க ஆண்டர்சனின் ஈகோ எப்போதும் ஒப்புக்கொள்ளாது. அதன்விளைவுதான், அந்த விக்கெட் வேட்டைகள்.
ஆண்டர்சனை மாதிரிதான் அஃப்ரிடியும் அவருக்கு மற்ற அணிகளுக்கு எதிராக சொதப்புவதெல்லாம் பெரிய பிரச்சனையில்லை. ஆனால், இந்தியாவுக்கு எதிராக சொதப்பிவிடக்கூடாது. அது, மானப்பிரச்சனை.
1999 சென்னை டெஸ்ட்டில் அவர் அடித்த அடியாகட்டும், 2005-ல் தொடரின் முடிவை தீர்மானிக்கும் கான்பூர் போட்டியில் அணில் கும்ப்ளேவை அசால்ட்டாக அடித்து துவைத்து 45 பந்துகளில் சதமடித்ததாகட்டும், 2014 ஆசிய கோப்பையில் கடைசி ஓவரில் நின்று சிக்சர் அடித்து மேட்ச்சை வென்றுக் கொடுத்ததாகட்டும்… எப்போதுமே இந்தியாவுக்கு எதிராக என்றால் அவரின் ரத்தம் இன்னும் கொஞ்சம் கூடுதலாகவே கொதிக்கும். அஃப்ரிடி அதிவேகமாக சதமடித்த போட்டியில் அவர் பயன்படுத்தியது சச்சினுடைய பேட் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
20 வருடமாக தேசிய அணிக்கு கிரிக்கெட் ஆடி ஓய்வு பெற்றுவிட்டாலும், இன்னமும் அஃப்ரிடி முழுமையாக கிரிக்கெட் ஆடிக்கொண்டுதான் இருக்கிறார். டி10, PSL என டி20 போட்டிகளில் இன்னமும் அரைசதங்களையும் கூக்ளிக்களையும் வீசிக்கொண்டே இருக்கிறார். 20 வருடங்களுக்கு மேலாக கிரிக்கெட் ஆடும் அளவுக்கு அவருக்கு உடல்தகுதி எப்படி கிடைத்தது என்கிற கேள்வி எழலாம். இதற்கு அவருடைய சமூகப்பிண்ணனியை தெரிந்துக்கொள்வது முக்கியம்.
பாகிஸ்தானில் மிகக்குறைந்த எண்ணிக்கையில் வசிக்கும் ‘அஃப்ரிடி’ என அழைக்கப்படும் ஒரு பழங்குடியினத்தில் பிறந்தவர் ஷாஹித். இந்த அஃப்ரிடி இனம் போர் செய்வதற்கென்றே பிரிட்டிஷ்காரர்களால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த பிண்ணனியிலிருந்துதான் அஃப்ரிடிக்கு இயற்கையாகவே அமையப்பெற்ற வலுவான ஹார்ட் ஹிட்டிங் திறனையும் இன்றைக்கும் கிரிக்கெட் ஆடும் அளவுக்கு இருக்கும் அவரின் உடல்தகுதியையும் பார்க்க வேண்டும்.
அஃப்ரிடியின் வயது தொடங்கி அணிக்குள் அவரின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் கருத்துகள் ஆகியவற்றிற்காக பல முறை சர்ச்சைகளில் சிக்கி விமர்சிக்கப்பட்டாலும் ஒரு பழங்குடியினத்தவராக ஒரு தேசிய அணியில் இவ்வளவு பெரிய நீண்ட நெடிய கரியரை கொண்டிருத்ததர்காகவே அவருக்கு ஒரு சல்யூட் போடலாம். சில வீரர்களை எப்போதுமே புள்ளிவிவரங்களை கொண்டு மட்டுமே அளவிட்டு விட முடியாது. 398 ஒருநாள் போட்டிகளில் ஆடியிருக்கும் அஃப்ரிடியின் ஆவரேஜ் 23 தான். ஆனால், இன்றைக்கும் அவர் க்ரீஸுக்குள் நின்றால் எதிரணி பதற்றமடையும். எதிரணி ரசிகர்கள் நகங்களை கடித்துக் கொண்டு வெடவெடத்து அமர்ந்திருப்பார்கள். அந்த பயம்தான் அஃப்ரிடி! அதை எந்தப் புள்ளிவிவரங்களும் காட்டிவிடாது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!