Sports
அசத்தலாக ஆடிய ஜெகதீசன் - ஷாரூக் - அபராஜித் : விஜய் ஹசாரே தொடரில் தமிழ்நாடு அணி வெற்றி!
இந்தியாவின் 50 ஓவர் டொமஸ்டிக் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் முதல் போட்டியில் பஞ்சாப் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருக்கிறது தமிழ்நாடு. 289 என்ற பெரிய இலக்கை சேஸ் செய்த அணிக்கு, ஓப்பனர் ஜெகதீசன், துணைக் கேப்டன் அபராஜித் மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்க, இறுதி கட்டத்தில் ஷாரூக் கான் அதிரடி அரைசதம் அடிக்க, ஒரு ஓவர் மீதமிருக்கையில் வெற்றி பெற்றது தமிழ்நாடு.
டாஸ் வென்ற தமிழ்நாடு கேப்டன் தினேஷ் கார்த்திக் ஃபீல்டிங் தேர்வு செய்தார். நம் அணியைப் பொறுத்தவரை இளமையும் அனுபவமும் கலந்த வகையில் ஒரு கலவையாகவே அணித் தேர்வு இருந்தது. அதிரடி வீரர்களுக்கு மத்தியில் 'ஆங்கர் இன்னிங்ஸ்' ஆடக்கூடிய வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். ஹரி நிஷாந்துக்குப் பதில் பாபா இந்திரஜித் சேர்க்கப்பட்டதிலேயே அது புரிந்தது. பந்துவீச்சில், வழக்கம்போல் ஸ்பின்னர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. முருகன் அஷ்வின், சாய் கிஷோர், மணிமாறன் சித்தார்த் என 3 முழு நேர ஸ்பின்னர்கள், ஆல்ரவுண்டர் அபராஜித் என 4 சுழற்பந்து ஆப்ஷன்களோடு களமிறங்கினார் கேப்டன் டி.கே. மணிமாறன் சித்தார்த், சோனு யாதவ் இருவரும் தங்கள் முதல் லிஸ்ட் ஏ போட்டியில் களமிறங்கினர்.
சையது முஷ்தாக் அலி தொடரை வென்றிருந்ததால், தமிழக அணியின்மீது நெருக்கடி கூடியிருக்கும். அதேசமயம், தமிழக வீரர்கள் ஐ.பி.எல் அணிகளால் ஏலம் எடுக்கப்பட்டிருப்பது அவர்கள் மீதான நெருக்கடியை அதிகரித்திருக்கும். அந்த எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இருந்தது அணியின் ஆட்டம்.
ஆட்டத்தின் முதல் ஒரு மணி நேரம் தமிழக அணியின் கையே ஓங்கி இருந்தது. ஆறாவது ஓவரில் அபிஷேக் ஷர்மாவை முருகன் அஷ்வின் ரன் அவுட் செய்ய, 12-வது ஓவரில் சாய் கிஷோர் பந்துவீச்சில் வெளியேறினார் மந்தீப் சிங். 30 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், பஞ்சாப் அணியை மீட்கும் முயற்சியில் இறங்கியது பிரப்சிம்ரன் சிங் - குர்கீரத் சிங் ஜோடி. அடுத்த 20 ஓவர்கள் பஞ்சாப் ராஜ்ஜியம்தான். இந்த பார்ட்னர்ஷிப் சிறப்பாக தமிழக பௌலிங்கை எதிர்கொண்டது. ஸ்டிரைக் ரொடேஷன், பௌண்டரி என மிகச் சிறப்பாக ஆடிய இந்தக் கூட்டணியை பாபா அபராஜித் உடைத்தார். 84 பந்துகளில் 71 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
அடுத்து, குர்கீரத்தோடு சன்வீர் கூட்டணி சேரன், இருவரும் அடித்து ஆடினார்கள். சாய் கிஷோரின் ஸ்பெல் முன்னரே முடிந்துவிட்டது. அதனால், கடைசி கட்டத்தில் மற்ற பௌலர்களின் ஓவர்களிலெல்லாம் எளிதாக ஸ்கோர் செய்தனர். குர்கீரத் சதமடித்து அசத்த, சன்வீர் அரைசதம் கடந்தார். முகமது வீசிய இன்னிங்ஸின் கடைசி ஓவரில் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் சன்வீர். அட்டகாசமாக ஆடிய குர்கீரத் சிங் 139 ரன்களுடன் (121 பந்துகள், 14 பௌண்டரிகள், 7 சிக்ஸர்கள்) ஆட்டமிழக்காமல் இருந்தார்.
தமிழக அணி சார்பில் முகமது, சாய் கிஷோர், பாபா அபராஜித் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். மிகவும் சிக்கனமாகப் பந்துவீசிய ஷாய் கிஷோர், 10 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
289 ரன்களை சேஸ் செய்த தமிழ்நாடு, இரண்டாவது ஓவரிலேயே அருண் கார்த்திக் விக்கெட்டை இழந்தது. சித்தார்த் கௌல் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் அவர். களத்தில் இருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஜெகதீசனோடு இணைந்தார் முன்னாள் சூப்பர் கிங்ஸ் வீரர் பாபா அபரஜித். இருவரும் இணைந்து ஒரு மிகப்பெரிய பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார்கள். அபராஜித் வழக்கம்போல் தன் எண்டை ஹோல்ட் செய்து விக்கெட் விழாமல் தடுக்க, தன் நேச்சுரல் கேமை ஆடினார் ஜெகதீசன்.
கிட்டத்தட்ட 33 ஓவர்கள் களத்தில் இருந்த இந்தக் கூட்டணி 185 ரன்கள் எடுத்தது. மிகச் சிறப்பாக விளையாடிய ஜெகதீசன் சதமடித்து அசத்தினார். 103 பந்துகளில் 101 ரன்கள் குவித்திருந்த அவரையும் சித்தார்த் கௌலே வெளியேற்றினார். அடுத்து வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் கொஞ்சம் அதிரடி காடினாலும், விரைவில் வெளியேறினார். 13 பந்துகளில் அவர் 19 ரன்கள் எடுத்தார்.
அடுத்ததாகக் களமிறங்கினார் இந்த வார சென்சேஷன் ஷாரூக்கான். ஐ.பி.எல் ஏலத்தில் பஞ்சாப் அணியால் 5.25 கோடிக்கு வாங்கப்பட்டவர், இந்று பஞ்சாப் பந்துவீச்சை அடித்து விளாசினார். நிலைத்து நின்று ஆடிய அபராஜித் சதமடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், 88 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த வந்த அவருடைய சகோதரர் இந்திரஜித் நிதானமாக ஆட, அதிரடியாக ஆடி அணியை வெற்றி பெறவைத்தார் ஷாரூக். 36 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார் அவர்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!