Sports

ஸ்ரீநாத் பந்தில் விக்கெட் விழக்கூடாதென வேண்டிக்கொண்ட இந்திய ரசிகர்கள்... வரலாற்று சாதனை படைத்த கும்ப்ளே!

இந்திய அணி ஒன்பது விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றியின் விளிம்பில் இருந்தது. பாகிஸ்தான் அணியின் கடைசி பேட்ஸ்மேன் களத்திற்குள் வந்துவிட்டார். வெற்றி வெகு விரைவில் இந்திய அணியின் கைகளுக்கு வர இருந்தது. அடுத்த ஓவரை வீச வந்தார் ஜவகல் ஸ்ரீநாத். தேவையான நேரத்தில் எல்லாம் விக்கெட் எடுத்து இந்திய அணியை மீண்டும் ஆட்டத்திற்குள் அழைத்து வருபவர் ஸ்ரீநாத். ஆனால், இந்தமுறை இந்திய ரசிகர்களே ஸ்ரீநாத் பந்தில் எந்த ஒரு விக்கெட்டும் விழுந்து விடக் கூடாது என்று வேண்டிக் கொண்டிருந்தனர். ரசிகர்களின் வேண்டுதல்களை இறைவன் கேட்டாரோ, இல்லையோ... ஸ்ரீநாத் நன்றாகவே கேட்டு விட்டார். அந்த ஓவர் முழுவதும் பேட்ஸ்மேன் அவுட் ஆகாமல் தடுக்க வைட் பந்துகளாக வீசி, அந்த ஓவரைக் கடத்தினார். கூட்டம் ஆர்ப்பரிக்க அடுத்த ஓவரை வீச வந்தார் அன்றைய கதாநாயகன்.

ஏற்கனவே அரசியல் காரணங்களால் பல சிக்கல்களை சந்தித்து வந்தது 1999–ம் ஆண்டு நடந்த இந்தியா - பாகிஸ்தான் தொடர். பாகிஸ்தான் அணி இந்த மண்ணில் ஆடினால் மைதானத்திற்குள் பாம்புகளை நுழைய விடுவோம் என்றெல்லாம் மிரட்டினர் சிவசேனா கட்சியினர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது போன்ற அநாகரிக செயல்களை அப்போதே செய்யக் காத்திருந்தது சிவசேனா. '

எரிகிற நெருப்பினில் எண்ணெய் ஊற்றுவது போல, நமது நாட்டில் வைத்தே இந்திய அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் சாய்த்துக் காட்டியது பாகிஸ்தான் அணி. கார்கில் போர், பாகிஸ்தான் வெறுப்பு போன்ற அத்தனை மோசமான நிகழ்வுகளையும் மறக்க வைக்க இந்திய அணிக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க, காலத்தால் அழியாத வெற்றி தேவைப்பட்டது. அதற்கு தயாரானது இந்திய அணியின் தலைநகரான டெல்லி.

முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு சடகோபன் ரமேஷ் மற்றும் லஷ்மண் இணைந்து துவக்கம் தந்தனர். நல்ல துவக்கம் நல்ல முடிவைத் தரும் என்ற வாதம் இந்த இன்னிங்ஸில் வேலை செய்யவில்லை. முதல் விக்கெட்டுக்கு 88 ரன்கள் சேர்த்த போதிலும், அதன் பிறகு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா. பாகிஸ்தான் சார்பாக சக்லைன் முஷ்டாக் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணியை, பிரதான ஸ்பின்னர்களான ஹர்பஜனும் கும்ப்ளேவும் பார்த்துக் கொண்டனர். இருவரும் கூட்டணி அமைத்து பாகிஸ்தானின் பேட்டிங் வியூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்த, அந்த அணி 172 ரன்களுக்கே சுருண்டு போனது. ஹர்பஜன் மற்றும் கும்ப்ளே இருவரும் இணைந்து 7 பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களை காலி செய்தனர்.

இரண்டாவது இன்னிங்ஸில் 80 ரன்கள் முன்னிலை என்ற நல்ல நிலையில் ஆட்டத்தை ஆரம்பித்தது இந்திய அணி. கடந்த இன்னிங்ஸில் அரை சதம் கடந்த தமிழக வீரர் சடகோபன் ரமேஷ் இந்த முறையும் பொறுப்பாக ஆடி 88 ரன்கள் சேர்த்தார். அவருடன் இணைந்து கங்குலியும் 66 ரன்கள் சேர்க்க வலுவான முன்னிலையை அடைந்தது இந்திய அணி. இன்னிங்ஸின் பிற்பகுதியில் ஸ்ரீநாத்துடன் இணைந்து கங்குலி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க, இந்திய அணி 339 ரன்கள் எடுத்து, 420 என்ற இமாலய இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது.

நான்காம் நாள் ஆட்டம் ஆரம்பிக்க, பாகிஸ்தான் அணி மெல்ல மெல்ல இலக்கை நோக்கி நகர ஆரம்பித்தது. சயீத் அன்வரும், ஷாகித் அப்ரிடியும் இணைந்து கொண்டு இந்திய பந்து வீச்சாளர்களை பதம் பார்த்தனர். அன்வர் ஒரு பக்கம் மெதுவாக ஆட, அப்ரிடியோ தனது வழக்கமான ஆட்டத்தை காட்டத் தொடங்கினார். 24 ஓவர்கள் இந்திய அணியை இவர்கள் படாத பாடுபடுத்திவிட்டனர்.

உணவு இடைவெளியின் போது சோர்ந்து போயிருந்த இந்திய ஸ்பின்னர்களிடம் வந்த பயிற்சியாளர் கெய்க்வாட், 'நாம் சற்று மோசமான நிலையில் தான் இருக்கிறோம்... அணியைத் தூக்கி நிறுத்த வேண்டும்' என்று பேசினார். இந்தக் கட்டளையை வேதவாக்காக நினைத்துக் கொண்டு களம் கண்டார் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர் கும்ப்ளே.

இன்னிங்ஸின் 25–வது ஓவரை வீச வந்தார் கும்ப்ளே. பாகிஸ்தான் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் அஃப்ரிடி முலம் தனது விக்கெட் வேட்டைக்கு பிள்ளையார் சுழி போட்டார். அஃப்ரிடி பந்தை சரியாக ஆடாமல் விட, அது நேராக அவர் பேட்டில் பட்டு விக்கெட் கீப்பர் மோங்கியாவிடம் சென்றது. இந்திய அணிக்கு ஒரு விக்கெட் கிடைத்தால் போதும், அதன்பிறகு ஆட்டத்திற்குள் வந்து விடலாம் என்பது நன்றாக தெரியும்.

அதற்கு ஏற்றார்போல அஃப்ரிடியை அவுட் ஆக்கி விட்டாயிற்று. அவர் போன சில மணித்துளிகளிலேயே இஜாஷ் அஹமத், இன்சமாம், முகமது யூசுஃப் என மூன்று பெரிய தலைக்கட்டுகளை வெளியேற்றி விட்டார் கும்ப்ளே. இருந்தாலும் அங்கிருந்த அத்தனை பேருக்கும் தெரியும் அன்வரை அவுட் ஆக்காமல் ஆட்டம் முடியாது என்று. தனி ஆளாக ஆட்டத்தின் போக்கையே மாற்றக் கூடியவர் அன்வர். கும்ப்ளே மீண்டும் மீண்டும் பிட்ச்சில் இருக்கும் ரஃப் பேட்ச்சுகளை பயன்படுத்தி விக்கெட் எடுக்க முயன்றார். ஆனால் அது பலன் கொடுக்காமல் போக, கடைசியில் எப்படியோ ஒரு லெக் ஸ்பின்னில் அன்வரை அவுட் ஆக்கினார் கும்ப்ளே. மொயின் கானும் வந்த வேகத்தில் செல்ல, இந்திய அணி உற்சாகமாக டீ பிரேக் சென்றது.

கும்ப்ளே ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். ஆனால், மிகவும் சோர்வுற்ற நிலையில் இருந்தார். இரண்டாவது செஷன் முழுவதும் அவர் பந்து வீசியிருந்தார். அது போக ஏழாவது விக்கெட்டுக்கு மாலிக்கும், வாசிம் அக்ரமும் அமைத்த பார்ட்னர்ஷிப் அவரை மேலும் களைப்பாக்கியது. ஆனாலும், அவருக்கு தெரியும் மாலிக் காயத்துடன் ஆடிக் கொண்டிருக்கிறார். அவரை எளிதில் ஆட்டமிழக்கச் செய்ய முடியுமென்று.

தேநீர் இடைவேளைக்கு பின்பு அதை செய்தும் காட்டினார் கும்ப்ளே. பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகளை இழந்து விட்டது. ஏழு விக்கெட்டுகளையும் எடுத்தது கும்ப்ளே. அப்போதுதான் மற்ற வீரர்களுக்கு ஒரு நம்பிக்கை பிறந்தது. கும்ப்ளேவினால் ஒரு உலக சாதனையை நிகழ்த்த முடியும் என்று அனைவரும், அவரிடம் சொல்லத் தொடங்கினர். 'இன்னமும் மூன்று விக்கெட்டுகளை எடுத்தால் உலக சாதனை நமது' என்றார் கேப்டன் அசார்.

கும்ப்ளேயும் அதற்கேற்ப முதலில் முஷ்டாக் அகமதை வெளியேற்றினார். அதற்கு அடுத்த பந்தே சக்லைன் முஷ்டாக்கையும் வெளியேற்றி தனது ஒன்பதாவது விக்கெட்டை வீழ்த்தினார். அப்போது அவருடன் இணைந்து பந்து வீசிக் கொண்டிருந்தது ஸ்ரீநாத்.

கும்ப்ளே ஸ்ரீநாத்திடம் சென்று, 'அடுத்த விக்கெட்டை எடுக்காதே' என்று சொல்வது எல்லாம் தேவையற்றதாக இருந்தது. ஸ்ரீநாத்தும் அதற்கேற்ப ஒரு ஓவர் முழுவதும் வைடாக வீசினார்.

அப்படியும் ஒரு பந்தை வாசிம் மேல் நோக்கி அடிக்க அதைப் பிடிக்க ஓடுவார் சடகோபன் ரமேஷ். பல ரசிகர்களுக்கு பகீரென்று இருந்திருக்கும். நல்ல வேளையாக அவர் அந்த கேட்ச்சை பிடிக்க முடியாமல் போக, வாசிம் அக்ரமையும் கும்ப்ளேவே அவுட் ஆக்கி பத்தாவது விக்கெட்டையும் கைப்பற்றி சாதனை படைப்பார்.

ஆட்டம் முடிந்ததும் பயிற்சியாளர் கெய்க்வாடுக்கு பிரதமர் வாஜ்பாய் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். பாகிஸ்தான் அணியை தனி ஆளாக ஒட்டு மொத்தமாக வாரி சுருட்டி இந்திய அணிக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை அனில் கும்ப்ளே வழங்கிய தினம் இன்று.