Sports
IND vs ENG முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி சறுக்கியது எங்கே?
சேப்பாக்கம் டெஸ்ட்டின் முதல் நாள் முடிவடைந்திருக்கிறது. இங்கிலாந்து அணி பெரிதாக தடுமாறும் என எதிர்பார்த்த நிலையில் எதிர்பாராத வகையில் அருமையாக முதல் நாளை ஆடி முடித்திருக்கிறது இங்கிலாந்து. ஜோ ரூட்டும் சிப்லேவும் இரண்டு செஷன்கள் முழுவதையும் இங்கிலாந்து வசம் வைத்துக்கொண்டதன் விளைவாக முதல் நாள் முடிவில் 263/3 என வலுவான நிலையில் இருக்கிறது இங்கிலாந்து. இந்திய அணி எங்கே சறுக்கியது?
பிட்ச்சின் தன்மை:
இங்கிலிஸ் தன்மையோடு இந்த பிட்ச் இருக்கும் என க்யுரேட்டர் பேட்டி கொடுத்திருந்தார். ஆனால், அப்படி எந்த இங்கிலீஸ் தன்மயையும் இந்த பிட்சில் பார்க்க முடியவில்லை. ஆங்காங்கே திட்டு திட்டாக புற்கள் இருந்தாலும் அவை வேகப்பந்து வீச்சுக்கு எந்தவிதத்திலும் ஒத்துழைக்கவில்லை. முதல் சில ஓவர்களிலே பிட்ச்சில் எந்த மூவ்மென்ட்டுக்கும் வாய்ப்பில்லை என்பது தெரிந்துவிட்டது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
ப்ளேயிங் லெவன்:
இங்கிலாந்து அணியின் இலங்கை சுற்றுப்பயணத்தில் எம்புல்டனியா என்ற இடக்கை சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக வீசியிருந்தார். ஒரு இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளையெல்லாம் வீழ்த்தியிருந்தார். எனவே, இந்திய அணியிலும் ஒரு இடக்கை சுழற்பந்து வீச்சாளர் இருப்பார்; அது அக்ஷர் படேலாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவருக்கு திடீரென காயம் ஏற்பட ஸ்குவாடிலேயே இல்லாத ஷபாஸ் நதீம் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். குல்தீப் யாதவ் அணியில் இருக்கும்போது அவருக்கு வாய்ப்பை கொடுத்திருக்கலாம். அவர் நதீமை விட தேசிய அணியில் அதிக அனுபவம் மிக்கவர். மேலும் அவரின் மிஸ்டரியும் வேரியேஷனும் ஒன்றுமே இல்லாத பிட்ச்சில் கொஞ்சம் எதையாவது முயன்று பார்க்கவாவது உதவியிருக்கும். ஆனால், ஷபாஸ் நதீமின் தேர்வு எதற்கும் உதவவில்லை. ரூட்டும் சிப்லேவும் இவரை குறிவைத்து அடித்தனர்.
ப்ளான்?
ஆஸி சீரிஸுக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே ஸ்மித்துக்கும் லபுஷேனுக்கும் லெக் சைடு ப்ளானை உருவாக்கியிருந்தது ரவிசாஸ்திரி & கோ. அது ரிசல்ட்டையும் கொடுத்தது. ஆனால், இன்று இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அப்படி எதுவும் ப்ளான்கள் வைத்திருந்தது போல தெரியவில்லை. சிப்லே மிடில் & லெக் ஸ்டம்ப் லைனில்தான் அதிக முறை அதுவும் lbw முறையிலேயே அதிகம் அவுட் ஆகியிருக்கிறார். ஆனால், சிப்லேவுக்கு அதிகமாக அவுட் சைடு தி ஆஃப் ஸ்டம்ப் டெலிவரிகளையே வீசிக்கொண்டிருந்தனர். அஸ்வின் சிப்லேக்கு வீசும்போது கூட 22–வது ஓவரில் லெக் ஸ்லிப் லெக் கல்லி இல்லாமல் வீசிக்கொண்டிருந்தார். இந்த பக்கத்தில் சிப்லே ஒரு ஷாட்டும் ஆடினார். ஃபீல்டர் இருந்திருந்தால் கேட்ச் ஆகியிருக்கும்.
அடுத்து நதீம் வீசிய ஓவரில் ஷார்ட் லெக் கூட இல்லாமல் ஃபீல்ட் செட் செய்திருந்தார் கோலி. இங்கேயும் ஃபீல்டர் இருந்திருந்தால் ஒரு கேட்ச் முதல் செஷனிலேயே கிடைத்திருக்கும். ஷார்ட் எக்ஸ்ட்ரா கவரில் இரண்டு ஃபீல்டரை நிறுத்தி மிட் ஆஃபில் பும்ராவையும் கொஞ்சம் ஷார்ட்டாக நிறுத்திவிட்டு ஃபுல் லெந்த்தாக பௌலர்களை வீச வைத்திருப்பார் கோலி. சிப்லே ஷாட்டுக்கு ஆசைப்பட்டு பேட்டை விட்டால் கேட்ச் கிடைக்கும் என்பதற்காக இந்த செட்டப். ஆனால், இந்த திட்டம் அப்பட்டமாக சிப்லேக்கே தெரியும் அளவுக்கு, ஃபீல்ட் செட்டப் செய்தது பின்னடைவாக அமைந்துவிட்டது. சிப்லே சுதாரித்துக்கொண்டு ஷாட்டே ஆடவில்லை. இப்படி தொடர்ந்து திட்டமிடலில் சில தவறுகளை இந்திய அணி செய்துகொண்டே இருந்தது.
பௌலர்களின் லென்த்:
ஸ்விங் எதுவும் இல்லாததால் தொடக்கத்தில் பும்ராவும் இஷாந்தும் கூட தாக்கம் ஏற்படுத்தும் வகையில் சரியான லைன் & லென்த்தை வீச முடியாமல் தடுமாறினர். அஸ்வினுக்கும் பெரிதாக ஸ்பின் ஒத்துழைக்கவில்லை. ஆனாலும், பர்ன்ஸின் விக்கெட்டை ஒரு ஸ்ட்ரைட்டான டெலிவரியில் வீழ்த்தினார் அஸ்வின். தேவையே இல்லாமல் பர்ன்ஸ் ரிவர்ஸ் ஸ்வீப் ஆட முயன்றதே இதற்கு முக்கிய காரணமாக இருந்தது.
வாஷிங்டன் சுந்தர், ரூட்டை சேலஞ்ச் செய்வது போல ஃபுல் லெந்தில் வீசி சொதப்பினார். அவரின் ஐடியலான குட் லெந்தில் வீசியிருந்தாலே கொஞ்சம் தாக்கம் ஏற்படுத்தியிருக்க முடியும். ஷபாஸ் நதீம் ஸ்வீப்பை தடுக்கிறேன் என்கிற பெயரில் ஷார்ட் பிட்ச்சாக வீசி சொதப்பினார். யாருமே சீராக ஒரு லெந்தை பிடித்து வீச முயற்சிக்கவே இல்லை. பிட்ச்சில் ஒன்றுமே இல்லாத போது பௌலர்கள்தான் எதாவது தனிப்பட்ட முறையில் முயன்று விக்கெட் எடுக்க வேண்டும். பும்ரா ஒரு யார்க்கரில் சிப்லேவின் விக்கெட்டை எடுத்தது இதற்கு ஒரு உதாரணம். ஆனால், இதே மாதிரியான விஷயங்களை மற்ற பௌலர்கள் செய்யவே இல்லை.
சேதமான பந்து:
பிட்ச்சில் ஒன்றுமே இல்லாத போது பந்தையும் கந்தலாக்கி வைத்திருந்தனர் இந்திய பௌலர்கள். சலைவாவை பயன்படுத்தக்கூடாது என்பதால் இந்திய வீரர்கள் பந்தை வியர்வை கொண்டு துடைத்துக் கொண்டிருந்தனர். சென்னை வெயிலுக்கு வியர்வை கொட்டித் தீர்த்திருக்கும். அந்த வியர்வை மழையில் பந்தை துடைத்து எடுத்ததால் சீக்கிரமே தண்ணீரில் ஊற வைத்தது போல மாறிப்போனது பந்து. தையலெல்லாம் கிழிந்து ஒரு மாதிரியாக சேதமடைந்து போனது. அதை வைத்து ஒரு செஷன் முழுவதும் வீச வேண்டியிருந்தது. இதுவும் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!