Sports
சென்னை வெயிலால் அவதியுற்ற டீன் ஜோன்ஸ்: 1986 IND-AUS டெஸ்ட் போட்டியின் நினைவுகளைப் பகிரும் அஸ்வின்!
சேப்பாக்கம் மைதான நினைவுகளைத் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசியிருக்கிறார் அஸ்வின். அதில், 1986–ல் அஸ்வினின் தந்தையோடு அவர் சென்று பார்த்த ஒரு டெஸ்ட் போட்டி குறித்து வெகுவாக சிலாகித்து பேசியிருப்பார். தன்னால் மறக்கவே முடியாத போட்டி அதுதான் என்று பேசியிருந்தார். இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சென்னை சேப்பாக்கத்தில் மோதிய அந்த டெஸ்ட் போட்டியில் அப்படி என்னதான் நடந்தது?
சென்னை சேப்பாக்கம் மைதானம் எப்போதுமே ஒரு ஸ்பெஷலான மைதானமாகவே இருக்கிறது. இங்கே நடைபெறும் ஒவ்வொரு போட்டியும் காலம் காலமாக மனதில் நிற்குமளவுக்கு எதோ ஒரு சம்பவத்தை உள்ளடக்கியதாகவே இருக்கிறது. அப்படித்தான் அந்த 1986 இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியிலும் ஒரு தரமான சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
டெஸ்ட் போட்டிகளில் டை என்பதெல்லாம் 99.9 % சாத்தியமே இல்லாத ஒன்று. ஆனால், இந்த டெஸ்ட் போட்டி மீதமிருக்கும் 0.1% ல் வருகிறது. ஆம், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் மோதிய இந்த டெஸ்ட் போட்டி டையில் முடிந்திருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே இரண்டு போட்டிகள்தான் டையில் முடிந்திதிருக்கிறது. ஒன்று, 1960–ல் ப்ரிஸ்பேனில் வெஸ்ட் இண்டீஸ் - ஆஸ்திரேலியாவுக்கு இடையே நடைபெற்ற போட்டி. இன்னொன்று 1986–ல் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற அஸ்வின் குறிப்பிட்ட போட்டி.
1986–ல் மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு வந்திருந்தது. இதில், முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆலன் பார்டர் பேட்டிங்கை தேர்வு செய்தார். சிறப்பாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாளின் முதல் செஷன் வரை பேட்டிங் செய்தது. டேவிட் பூன், கேப்டன் ஆலன் பார்டர் இருவரும் சதமடிக்க டீன் ஜோன்ஸ் இரட்டை சதம் அடித்திருப்பார்.
டீன் ஜோன்ஸின் இந்த இரட்டை சதம்தான் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் அவர் பிரபலமடைவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. இது அவர் ஆடிய மூன்றாவது போட்டிதான். இந்த இன்னிங்ஸை ஆடும்போது சென்னை வெயிலை தாங்க முடியாமல் அவதிப்பட்டிருக்கிறார் ஜோன்ஸ். 170 ரன்கள் அடித்திருந்த போது வெளியேற போவதாக கூறிய இவரை ஆலன் பார்டர்தான் ஊக்கம் கொடுத்து ஆட வைத்திருக்கிறார். இந்த இன்னிங்ஸை ஆடிய பிறகு டீன் ஜோன்ஸ்க்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ட்ரிப்ஸ் ஏற்றப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸை 574 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 397 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஸ்ரீகாந்த், அசாரூதின், ரவி சாஸ்திரி ஆகியோர் அரைசதம் அடித்திருந்தனர். கேப்டன் கபில்தேவ் டெய்ல் எண்டர்களோடு கூட்டணி போட்டு அதிரடியாக சதம் அடித்து ஃபாலோ ஆனை தவிர்த்திருப்பார்.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 170/5 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது. கடைசி ஒரு நாளில் இந்திய அணிக்கு 348 ரன்களை டார்கெட்டாக நிர்ணயித்தது ஆஸி. 348 என்பது இன்றைய சூழ்நிலையிலேயே பெரிய ஸ்கோர்தான். அப்போதே இந்திய அணி இந்த போட்டியை டிராவுக்காக ஆடாமல் வெற்றிக்காக ஆடியிருக்கிறது. ஓப்பனிங்கில் ஸ்ரீகாந்த் வழக்கம்போல அதிரடி காட்டி வேகமாக ரன்களை சேர்த்தார்.
கவாஸ்கர், அமர்நாத், அசாரூதின் ஆகியோர் சிறப்பாக ஆட, ஆட்டம் இந்தியா பக்கம் திரும்ப தொடங்கியது. கடைசியில் டெய்ல் எண்டர்களுடன் நின்று ஆட்டத்தை முடித்துக்கொடுக்க வேண்டிய பொறுப்பு ரவி சாஸ்திரிக்கு வந்தது. 4 ஓவர்களில் 18 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 3 விக்கெட் இருந்தது. ஆனால், ரே ப்ரைட் வீசிய அடுத்த ஓவரிலேயே இரண்டு விக்கெட்டுகள் விழுந்தது.
கடைசி ஓவரில் 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. ஆனால், ஒரு விக்கெட் மட்டுமே இருந்தது. ஸ்ட்ரைக்கில் இருந்த ரவிசாஸ்திரி ஒரு டபுளும் ஒரு சிங்கிளும் தட்டி ஸ்கோரை லெவலாக்கிவிட்டு நான் ஸ்ட்ரைக்கர் எண்ட்டுக்கு சென்றுவிட்டார். 3 பந்துகளில் ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் நம்பர் 11 பேட்ஸ்மேனான மணீந்தர் சிங் ஸ்ட்ரைக் எடுத்தார். க்ரேக் மேத்யூஸ் வீசிய ஒரு பந்தை சமாளித்த அவர், கடைசிக்கு முந்தைய பந்தில் lbw ஆகிவிடுவார். ஆட்டமும் டையில் முடிந்துவிடும்.
டை ஆன இரண்டு போட்டிகளிலுமே பங்கேற்றவர் என்கிற பெருமையை பாப் சிம்சன் பெற்றார். 1960–ல் ஆஸ்திரேலிய அணியில் வீரராக ஆடிய இவர் 1986–ல் ஆஸிக்கு கோச்சாக இருந்தார். இந்தியாவின் முதல் டெஸ்ட் வெற்றி, 1999 பாகிஸ்தான் டெஸ்ட், சேவாக் 300 வரிசையில் இந்த சேப்பாக் போட்டியும் என்றைக்கும் ஒரு வரலாறாக நிற்கும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!