Sports
சையத் முஷ்டக் அலி கோப்பை: தக்க சமயத்தில் அணியை காத்த சாய் கிஷோரை சிஎஸ்கே முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமா?
தமிழகத்திலிருந்து கிரிக்கெட் உலகில் அடுத்தக்கட்டத்துக்கு செல்லப்போகும் வீரர்களில் சாய் கிஷோர் முக்கியமானவர். 2018-19 ரஞ்சி சீசனில் தமிழக அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்து, TNPL தொடரில் அபாரமாக பெர்ஃபார்ம் செய்ததால், அவரை CSK தேர்வு செய்தது. தற்போது நடைபெற்று வரும் சையத் முஷ்டக் அலி ட்ராஃபியிலும், சாய் கிஷோர் அசத்தலான பெர்ஃபார்மென்ஸ்களை கொடுத்து வருவதால், சென்னை அணி இந்த முறை அவரை சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சையத் முஷ்டக் அலி ட்ராஃபியில் தமிழகம் மற்றும் ராஜஸ்தானுக்கு இடையே நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில் சாய் கிஷோரின் ஸ்பெல்தான் தமிழகத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்தியது. இந்த சீசனில் முதல் முறையாக சாய் கிஷோரை முதல் ஓவரை வீச அழைத்தார் தினேஷ் கார்த்திக். ராஜஸ்தானின் ஓப்பனரான பரத் ஷர்மா ஸ்ட்ரைக்கில் இருக்க, முதல் மூன்று பந்துகளையும் டாட் ஆக்கிய சாய் கிஷோர் 4–வது பந்தில் பரத் ஷர்மாவின் விக்கெட்டை வீழ்த்தினார்.
3 டாட்கள் ஆடிவிட்டதால், பேட்ஸ்மேன் எப்படியும் ஒரு பவுண்டரிக்கு முயற்சிக்கலாம் என்பதை உணர்ந்து, ரூம் கொடுத்து ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசினார் சாய் கிஷோர். எதிர்பார்த்தது போலவே பரத் ஷர்மா பவுண்டரிக்கு முயற்சிக்க, பாயின்ட்டில் இருந்த பாபா அபராஜித் அட்டகாசமாக பாய்ந்து கேட்ச் பிடித்தார். ராஜஸ்தான் அணியின் முதல் விக்கெட்டை முதல் ஓவரிலேயே வீழ்த்தி தமிழக அணிக்கு நல்ல தொடக்கம் கொடுத்தார் சாய் கிஷோர்.
ஆனால், இந்த முதல் ஓவருக்கு பிறகு தினேஷ் கார்த்திக் ரொம்ப நேரம் சாய் கிஷோரை பந்துவீச அழைக்கவே இல்லை. வர்ணனையில் இருந்தவர்கள்கூட, டிகே–வின் இந்த முடிவு பற்றி கேள்வி எழுப்பினர். இந்த இடைப்பட்ட நேரத்தில்தான், ராஜஸ்தானின் கேப்டனான அசோக் மெனேரியா தமிழக வீரர்களின் பௌலிங்கை அடித்து துவம்சம் செய்தார். எல்லா ஓவர்களிலும் பவுண்டரியும் சிக்சரும் வந்து கொண்டே இருந்தது. இதன் விளைவாக 11வது ஓவரிலேயே ராஜஸ்தான் அணி 100 ரன்களை கடந்துவிட்டது.
அதன் பிறகுதான் சாய்கிஷோரை மீண்டும் அழைத்தார் தினேஷ் கார்த்திக். சாய் கிஷோர் வீசிய 12–வது ஓவரில் 5 ரன்களை மட்டுமே கொடுத்தார். 3–வது ஓவரிலிருந்து 11–வது ஓவர் வரை எல்லா ஓவரிலும் பவுண்டரி அடித்திருந்தது ராஜஸ்தான். சாய் கிஷோர் வீசிய அந்த 12–வது ஓவரில்தான் அவர்களால் பவுண்டரி அடிக்க முடியவில்லை. அடுத்து, 14–வது ஓவரையும் சாய் கிஷோர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே அதிரடியில் மிரட்டிக்கொண்டிருந்த அசோக் மெனேரியாவின் விக்கெட்டை வீழ்த்திவிட்டார் சாய் கிஷோர்.
இந்த விக்கெட்தான் நேற்று ஆட்டத்தையே மாற்றியது. மெனேரியா அவுட் ஆகும் போது அணியின் ஸ்கோர் 120. 13.1 ஓவர் மட்டுமே முடிந்திருந்தது. ஆனால், 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 154-9 என்ற ஸ்கோரையே எட்டியது. மெனேரியா ஆடிக்கொண்டிருக்கும்போது அணியின் ஸ்கோர் 200–ஐ தாண்டிவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. சாய் கிஷோர் சரியான நேரத்தில் அவரின் விக்கெட்டை எடுத்ததுதான் கேம் சேஞ்சிங் மொமன்ட்டாக அமைந்தது.
இந்த சீசனில் 7 போட்டியில் ஆடியிருக்கும் சாய் கிஷோர் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். இந்த 8 விக்கெட்டுகளுமே அணிக்கு தேவையான சமயத்தில் முக்கியமான வீரர்களை வீழ்த்தியதன் மூலம் கிடைத்தவை. அஸ்ஸாமின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பவர்ப்ளே முடிந்த பிறகு சாய் கிஷோர் தொடர்ந்து வீசிய மூன்று ஓவர்கள்.. ஒடிஸா பேட்ஸ்மேன்கள் பவர்ப்ளேயில் அதிரடி காட்டி கொண்டிருக்கும் போது வந்து விக்கெட் வீழ்த்தியது என இந்த சீசனில் சாய்கிஷோர் பல முக்கியமான ஸ்பெல்களை, அதுவும் அணியின் மற்ற பௌலர்கள் விக்கெட் எடுக்க முடியாமல் திணறும்போது எடுத்திருக்கிறார்.
முக்கியமான விக்கெட்டுகளை எடுப்பது மட்டுமின்றி எக்கனாமிக்கலாகவும் வீசி எதிரணிக்கு ப்ரஷரை கூட்டுகிறார். நேற்றைய போட்டியில் கூட 4 ஓவர்களை வீசி 16 ரன்கள் மட்டுமே கொடுத்தார். ஓடிஸாவுக்கு எதிராக 4 ஓவர்கள் வீசி 12 ரன்கள், அஸ்ஸாமுக்கு எதிராக 17 ரன்கள் என எக்கானமி ரேட்டை பெரும்பாலும் 4-5 க்குள்ளேயே வைத்திருக்கிறார். ஒன்றிரண்டு போட்டிகளில் மட்டுமே 27-28 அந்த ரேஞ்சுக்கு ரன்களை கொடுத்திருக்கிறார். ஆனால், டி20 போட்டிகளில் இதுவுமே டீசன்ட்டான பௌலிங்தான்.
சாய் கிஷோரோல் பவர்ப்ளேயில் வீச முடியும், விக்கெட் தேவைப்பட்ட நேரத்தில் விக்கெட்டை எடுத்துக்கொடுக்க முடியும், எக்கனாமிக்கலாக வீசி ப்ரஷர் போட முடியும் என்பதை மீண்டும் இந்த சையத் முஷ்டக் அலி ட்ராஃபி மூலம் நிரூபித்துள்ளார். இந்த முறையாவது சாய் கிஷோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முழுவதுமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்