Sports
ஃபார்ம் அவுட்டில் இருக்கும் உத்தப்பாவை CSK வாங்கியிருப்பது ஏன்? - தோனியின் திட்டம் என்ன?
ராஜஸ்தானிடமிருந்து ராபின் உத்தப்பாவை ட்ரேடிங் மூலம் வாங்கியிருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். கடந்த சீசனில் வயதான சீனியர் வீரர்களை வைத்துக்கொண்டு ஒன்றும் செய்யமுடியாமல் தோனியே கடுமையாக திணறியிருந்தார். சென்னை அணியும் முதல் முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியிருந்தது. சீசன் கையை விட்டு செல்லும் வரை சீனியர் வீரர்களை மட்டுமே நம்பிக்கொண்டு 'இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை' என குறை கூறிக்கொண்டிருந்த தோனியே, கடைசி கட்டத்தில் ருத்ராஜ் கெய்க்வாட், ஜெகதீசன் என இளம் வீரர்களுக்கு வாய்ப்புக்கொடுத்தார்.
இது தோனியின் அணுகுமுறையில் வெளிப்பட்ட மிகப்பெரிய மாற்றமாக தெரிந்தது. இதன்மூலம் அடுத்தடுத்த சீசன்களில் இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பை தோனி வழங்குவார்; அதற்கு முதற்படியாக இந்த ஏலத்தைப் பயன்படுத்திக்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மீண்டும் பழைய கதையாக அனுபவத்தை மட்டுமே கருத்தில்கொண்டு, 35+ வயதில் ஃபார்ம் அவுட்டில் இருக்கும் உத்தப்பாவை டிக் அடித்திருக்கிறார் தோனி. எதை மனதில் வைத்து தோனி இந்த முடிவை எடுத்திருப்பார்? அவரின் இந்த முடிவு சரிதானா?
ஐ.பி.எல் 2014 சீசனில் 660 ரன்களை எடுத்து ஆரஞ்சு கேப்பை வென்றிருந்தார் உத்தப்பா. அந்த சீசனை தவிர்த்து மற்ற சீசன்களிலும் கூட தொடர்ச்சியாக 350+ ரன்களை எடுத்து டீசண்ட்டாகத்தான் ஆடியிருக்கிறார். ஆனால், அவரின் கடந்த இரண்டு ஆண்டு ரெக்கார்டுகள் அவ்வளவு சிறப்பாக இல்லை. 2019 சீசனில் 282 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். கடந்த துபாய் சீசனில் 196 ரன்களை மட்டுமே எடுத்திருக்கிறார். தொடர்ச்சியாக அவருடைய பெர்ஃபார்மென்ஸ் சரிவடைந்து கொண்டே இருக்கிறது.
தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் சையத் முஷ்டக் அலி ட்ராஃபியில் கேரள அணிக்காக 5 போட்டிகளில் ஆடியிருக்கும் உத்தப்பா 161 ரன்களை எடுத்திருக்கிறார். டெல்லிக்கு எதிராக 212 ரன்களை 19 ஓவர்களில் சேஸ் செய்தது கேரளா. அந்தப் போட்டியில் மட்டுமே 91 ரன்களை எடுத்தார். மற்ற போட்டிகளில் பெரிதாக சொல்லிக்கொள்ளும்படி எதுவும் இல்லை. குறிப்பாக, ஹரியானாவுக்கு எதிரான முக்கியமான போட்டியில் 8 ரன்களில் அவுட் ஆகி சொதப்பினார். அந்த போட்டியில் கேரளா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.
இவைதான் உத்தப்பாவின் சமீபத்திய ரெக்கார்டுகள். ட்ரேடிங் முறையில் வாங்கி அணியின் முக்கியமான பேட்ஸ்மேனாக எடுத்துக்கொள்ளுமளவுக்கு பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. பிறகு எதற்கு எடுத்தார்கள்?
கடந்த சீசனில் சென்னை அணியின் ஓப்பனர்களாக வாட்சனும், டூ ப்ளெஸ்சிஸும் ஆடினார்கள். பாதி தொடருக்கு பிறகு ருத்ராஜும் டூ ப்ளெஸ்சிஸும் ஓப்பனர்களாக இறங்கினர். சீசனின் கடைசி 3 லீக் போட்டிகளிலுமே அரைசதம் அடித்துவிட்டதால் ருத்ராஜ் ஓப்பனிங்கில் ஒரு ஸ்பாட்டை அவருக்கென உறுதியாக்கிவிட்டார். வாட்சன் ரிட்டையர் ஆகிவிட்டார். டூ ப்ளெஸ்சிஸும் ருத்ராஜும் தான் அணியின் ஓப்பனர்களாக இருக்க முடியும். அப்படியே இருக்கட்டும் என தோனி நினைத்திருந்தால் நிச்சயமாக உத்தப்பாவை வாங்கியிருக்கமாட்டார். உத்தப்பாவுக்கு என்ன ப்ளான் வைத்திருக்கிறார் தோனி?
டூ ப்ளெஸ்சிஸ்- ருத்ராஜ் ஓப்பனிங் என்றால் உத்தப்பா மிடில் ஆர்டரில் நம்பர் 4-5 இல் இறங்கியாக வேண்டும். ஆனால், மிடில் ஆர்டரில் உத்தப்பா செட்டே ஆக மாட்டார். கடந்த சீசனிலும் ராஜஸ்தான் அவரை மிடில் ஆர்டரில் பயன்படுத்திப்பார்த்து சரி வராததால் ஓப்பனராக்கிவிட்டது. ஓப்பனிங்கில் கொஞ்சம் டீசண்ட்டாகவும் ஆடினார். SMAT–லும் ஓப்பனராகத்தான் கேரள அணிக்காக களமிறங்கியிருக்கிறார். எனவே சென்னை அணியிலும் அவரை ஒரு ஓப்பனிங் ஆப்ஷனாகத்தான் எடுத்திருக்கிறார்கள்.
ஃபார்ம் அவுட் பேட்ஸ்மேனை எதற்கு ஓப்பனிங் இறக்க வேண்டும்?
சென்னை அணிக்கு வருவதற்கு முன்பாக வாட்சனும் தேசிய அணியிலிருந்து ரிட்டையர் ஆகி RCB–க்கு ரொம்பவே சுமாராக ஆடி ஃபார்ம் அவுட்டில்தான் இருந்தார். ஏலத்திலேயே அவரை யாரும் சீண்டுவார்களா என்கிற நிலைமைதான் இருந்தது. ஆனால், சென்னை அணி அவரை ஏலத்தில் எடுத்து ஓப்பனராக்கியது. ஆடிய 3 சீசன்களில் இரண்டு சீசன்களில் சிறப்பாகவே பெர்ஃபார்ம் செய்தார் வாட்சன். 2018–ல் கம்பேக் சீசனில் கோப்பையை வென்றதற்கு வாட்சனே மிக முக்கிய காரணம்.
ஃபார்ம் அவுட்டில், கெரியரின் கடைசிகட்டத்தில் இருந்த வாட்சனை, தோனி ஏன் எடுத்தார்?
தோனிக்கு ஃபார்ம் அவுட், இன் ஃபார்ம் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை. அவருக்கு அனுபவம் மட்டும் போதும். நல்ல அனுபவமிக்க பேட்ஸ்மேனை கூட்டி வந்து அவர்களுக்கு தொடர் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுத்தாலே போதும்; அணிக்கு தேவையானதை அவர்கள் கொடுத்துவிடுவார்கள் என்பதை தோனி வலுவாக நம்புகிறார். அதனால்தான் வாட்சனை எடுத்தார். அதனால்தான் இப்போது உத்தப்பாவை எடுத்திருக்கிறார். மேலும், ஓப்பனிங்கில் ஒரு அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் இருக்க வேண்டும் என தோனி எப்போதும் விரும்புவார். அதனால்தான் ருத்ராஜுடன் உத்தப்பாவை இறக்கலாம் என்கிற ப்ளானுக்கு தோனி வந்திருப்பார்.
டூ ப்ளெஸ்சிஸும் அனுபவமான நல்ல பேட்ஸ்மேன்தானே அவரே ஓப்பனராக தொடரலாமே? டூ ப்ளெஸ்சிஸ் ஓப்பனிங்கில் சிறப்பாக ஆடினாலும் அவரை முழுமையான ஓப்பனிங் பேட்ஸ்மேன் என முத்திரை குத்திவிட முடியாது. அவரால் எந்த ஆர்டரிலும் இறங்கி அணிக்கு தேவையானதை கொடுக்க முடியும். தோனி முன்புபோல ஃபார்மில் இல்லாததால் மிடில் ஆர்டரில் அவருக்கு துணையாக ஆட ஒரு பேட்ஸ்மேன் தேவை என்பதால் அந்த இடத்தில் டூ ப்ளெஸ்சிஸ் இறக்கப்படலாம்.
சுருக்கமாகச் சொன்னால், பத்ரிநாத்தை போல ஒரு crisis man ஆக டூ ப்ளெஸ்சிஸை பயன்படுத்தலாம். டூ ப்ளெஸ்சிஸ் ஓப்பனிங்கில் சிக்கிக்கொண்டதால் கடந்த சீசனில் அந்த crisis man ரோலை செய்வதற்கு ஆள் இல்லை. அது அணிக்கு பெரும் பிரச்சனையாக இருந்தது. அதை இந்தமுறை டூ ப்ளெஸ்சிஸ் தீர்க்கலாம். மேலும், அவர் ஒரு ஃபாரின் ப்ளேயர் என்பதால் இந்த மாதிரி ரோலில் ஆடும் போது எக்ஸ்ட்ரா பௌலர் தேவைப்பட்டால் ஹேசல்வுட், சான்ட்னர் மாதிரியானவர்களை உள்ளே கொண்டு வந்து, இவரை பெஞ்சிலும் வைக்கலாம். ஓப்பனிங்கில் டூ ப்ளெஸ்சிஸ் இருந்திருந்தால், இது சாத்தியப்படாது. அடிக்கடி ஓப்பனிங் கூட்டணியை மாற்றுவது தோனிக்கு பிடிக்காது.
சென்னை அணிக்கு ஒரு ஆஃப் ஸ்பின்னர் தேவை இருக்கிறது. அதற்கு, ஒருவேளை முஜிபூர் ரஹ்மானுக்கு சென்னை வலைவீசலாம். அதற்காக கூட இந்த ஏற்பாடு இருக்கலாம்.
மேலும், அடுத்த வருடம்தான் பெரிய ஏலம் இருக்கப்போகிறது என்பதால், இந்த ஒரு சீசனுக்கு உத்தப்பாவை வைத்து சமாளிப்போம்; அடுத்து பெரிய ஏலத்தில் பார்த்துக்கொள்ளலாம் என்பதும் திட்டமாக இருக்கும்.
இவையெல்லாம் தோனி என்ன நினைத்து உத்தப்பாவை டிக் செய்திருப்பார் என்பதற்கான கணிப்புகளே. ஆனால், உத்தப்பாவை எடுத்து ஓப்பனராக்குவது சரியா?
கடந்த சீசனில்தான் இளம் வீரர்கள் இல்லாமல் அணியின் திண்டாட்டத்தை கண்கூடாகப் பார்த்துவிட்டோம். அப்படியிருந்தும் மீண்டும் ஒரு வயதான அனுபவம் மிக்க வீரர் என்று சென்றிருப்பது சரியாக இல்லை. ஓப்பனிங் இறக்க அணிக்குள்ளேயே தோனிக்கு இன்னொரு ஆப்ஷனாக தமிழக வீரர் ஜெகதீசன் இருக்கிறார். சையத் அலி ட்ராஃபியில் அவர் ஓப்பனிங் இறங்கி தொடர்ந்து நான்கு போட்டிகளில் நான்கு அரைசதம் அடித்து மிரட்டலான ஃபார்மில் இருக்கிறார். சந்தேகமே இன்றி அவரை தோனி முதல் ஆப்ஷனாக கருதியிருக்கலாம். ஆனால், அப்படி தோனி நினைத்ததாக தெரியவில்லை. கடந்த சீசனில் தோல்வியை கொடுத்த அதே பழைய ஃபார்முலாவை தோனி கையிலெடுத்திருக்கிறார். இந்த முறை என்ன நடக்கப்போகிறதோ?!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!