Sports

“வரலாற்று வெற்றிக்கு சுப்மன் கில் போட்டுக்கொடுத்த பாதை” - பிரிஸ்பேன் டெஸ்டில் அதிரடி காட்டிய கில்!

பார்டர் கவாஸ்கர் ட்ராஃபி மாதிரியான சமபலம் வாய்ந்த இரண்டு அணிகள் மோதிக்கொள்ளும் தொடர்களில், ஓப்பனிங் பேட்ஸ்மேன்களின் பங்கு அதிகம் இருக்கவேண்டும். நியுபாலை பழசாக்குவது மட்டுமின்றி பிட்ச்சின் தன்மை எப்படி இருக்கிறது? ஆட்டத்தை எந்த வகையில் முன்நகர்த்தி செல்லலாம்? என்பவை பற்றியும் ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் அடுத்தடுத்த வீரர்களுக்கு தனது ப்ளேயிங் ஸ்டைல் மூலம் கடத்தியாக வேண்டும்.

ஓப்பனிங் பேட்ஸ்மேன் தனக்காக மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த ப்ளேயிங் லெவனுக்கும் ஒரு பாதை போட்டுக்கொடுக்கும் வகையில் ஆட வேண்டும். இந்தியா-ஆஸ்திரேலியா மிகப்பெரிய அணிகளாக இருந்தாலும், இரண்டு அணிகளுக்குமே இந்த சீரிஸில் ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் மேலே குறிப்பிட்ட வகையில், பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். ஒரே ஒரு விதிவிலக்காக இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் மட்டும், இந்த தொடரில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக தடம் பதித்திருக்கிறார்.

இந்த சீரிஸுக்கு முன்பு நடந்த இரண்டு பயிற்சி ஆட்டத்திலுமே சுப்மன் கில் ஆடியிருந்தார். முதல் பயிற்சி ஆட்டத்தில் ஓப்பனிங்காக இறங்கிய கில் ஒரு இன்னிங்ஸில் டக் அவுட் ஆகியிருந்தார். இன்னொரு இன்னிங்ஸில் சொல்லிக்கொள்ளும்படி பெரிதாக ஆடவில்லை. இதனால் அடுத்த போட்டியில் நம்பர்3–ல் இறக்கிவிடப்பட்டார். இந்த போட்டியில் நம்பர் 3–ல் இறங்கி அரைசதம் அடித்தார்.

அடிலெய்டில் முதல் போட்டிக்கு செல்லும் முன்பாக கோலிக்கு மயங்க் அகர்வால், கில், ராகுல், ப்ரித்திவி ஷா என ஓப்பனிங்குக்கு 4 ஆப்ஷன்கள் இருந்தன. ராகுல் பயிற்சி ஆட்டத்திலேயே இல்லை என்பதால் அவர் நிச்சயம் களமிறக்கப்படமாட்டார் என்று தெரிந்தது. கடந்த ஆஸி சீரிஸில் ஆடியிருப்பதாலும் பயிற்சி ஆட்டத்திலும் டீசன்ட்டாக ஆடியிருப்பதாலும் மயங்க் அகர்வாலின் பெயரை டிக் அடித்தார் கோலி. மயங்கின் பார்ட்னராக கில்லை கோலி டிக் அடிப்பார் என எதிர்பார்க்கையில்தான் ஃபார்ம் அவுட்டில் இருந்த ப்ரித்திவி ஷாவுக்கு இன்னொரு வாய்ப்பை கொடுத்தார் கோலி.

ப்ரித்திவி ஷா எதிர்பார்த்தது போலவே கடுமையாக சொதப்ப, இரண்டாவது போட்டிக்கு வேறு வழியின்றி சுப்மன் கில் தேர்ந்தெடுக்கப்பட்டார். மெல்பர்ன் டெஸ்ட்டில் அறிமுகமான கில் முதல் இன்னிங்ஸில் 45 ரன்களை மட்டுமே எடுத்தார். ஆனால், அவர் ஆடிய ஆட்டமும் சந்தித்த 65 பந்துகளில் அவர் வெளிப்படுத்திய குணாதிசயமும் வெகுவாக கவர்ந்தது.

சீனியரான மயங்க் அகர்வால் முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆகி வெளியேறிவிட, அறிமுக வீரரான கில் விக்கெட்டை பாதுகாக்கிறேன் என்ற பெயரில் டிஃபன்ஸிவ் ஆட்டம் ஆடாமல் தனது நேச்சுரல் கேமை ஆட ஆரம்பித்தார். ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ் என ஆஸியின் வேகங்களை கவுன்டர் அட்டாக் செய்து பவுண்டரிகளாக அடித்தார். இரண்டாவது இன்னிங்ஸிலும் 7 பவுண்டரிகளுடன் 36 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து இந்திய அணியை சீக்கிரமே வெற்றிக்கு அழைத்து சென்றார்.

ஆஸி மண்ணில் மிகச்சிறந்த பௌலிங் அட்டாக்குக்கு எதிராக நமது முதல் தொடரை ஆடிக்கொண்டிருக்கிறோம் என்கிற பதற்றத்தை, கில் எந்த இடத்திலும் வெளிக்காட்டவே இல்லை. சிட்னி டெஸ்ட்டில் ஒரு பந்து கில்லின் பேட்டில் பட்டு ஸ்டம்பை நோக்கி செல்ல அதை செம கூலாக காலால் தட்டிவிட்டிருப்பார். இந்த மனநிலையைத்தான் இந்த தொடர் முழுவதும் வெளிப்படுத்தினார் கில். பௌலர்கள் தன் மேல் ஆதிக்கம் செலுத்திவிடக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். எல்லா பௌலர்களையும் அட்டாக் செய்தார்.

ஆஸி பௌலர்களின் ஷார்ட் பால்களை ரோஹித்தால் மட்டுமே சிக்சர் அடிக்க முடியும். அவர் இல்லாமல் இந்திய அணி திணறப்போகிறது என விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில், ஸ்டார்க்க்கின் பந்தில் புல் ஷாட் அடித்து ஆச்சர்யப்பட வைத்தார். நேற்று அவர் அடித்த 91 ரன்களில் பெரும்பாலும் ஷார்ட் பாலில் ஷாட் அடித்து வந்த ரன்கள்தான் அதிகம்.

எந்தத் திட்டமும் பலிக்காமல் போனால், ஆஸியினர் கடைசியாக எடுக்கும் அஸ்திரம், பாடி லைன் ஷார்ட் பால்கள். நேற்றும் கில்-புஜாரா கூட்டணி பேட்டிங் ஆடிக்கொண்டிருக்கும் போது அப்படித்தான் செய்தார்கள். சீனியர் பேட்ஸ்மேனான புஜாராவே ஷார்ட் பால்களை எதிர்கொள்ள முடியாமல் அடிவாங்கிக் கொண்டிருந்தார். ஆனால், கில் இதற்கும் கவுன்ட்டர் அட்டாக்தான்.

கில் இப்படி கவுன்ட்டர் அட்டாக் செய்ய நினைப்பார் அப்போது மிஸ் ஹிட்டில் விக்கெட்டை எடுத்துவிடலாம் என்று நினைத்தே, கில்லுக்கு பாடி லைனை தவிர்த்து கொஞ்சம் ரூம் கொடுத்து ஷார்ட் பால்களை போட்டனர். ஃபைன் லெக், ஸ்கொயர் லெக், லாங் லெக், லெக் கல்லி என கேட்ச்சுக்கு தயாராக ஃபீல்டர்களை வைத்திருந்தனர். ஆனால், இது எதற்குமே கில் வீழவில்லை. ஷார்ட் பால்களை அடித்து துவைத்தார். Front foot ஐ மட்டுமே பயன்படுத்தாமல் Back foot ஐயும் முழுமையாக பயன்படுத்தி ஆடுவதால், கில்லை திணறடிக்கும் லைன் & லென்த்தை பிடிப்பதில் ஆஸியினர் கடுமையாக திணறினர்.

ஒரு ஓப்பனிங் பேட்ஸ்மேன் ஒட்டுமொத்த ப்ளேயிங் லெவனுக்குமே பாதை போட்டுக்கொடுக்க வேண்டும் என மேலே குறிப்பிட்டிருந்தேன். நேற்று சுப்மன் கில் அதைத்தான் செய்தார். அவர் விரைவாக அடித்த அந்த 91 ரன்கள்தான் இந்தியாவை டிராவை பற்றி யோசிக்க வைக்காமல் வெற்றிக்காக ஆட வைத்தது. கில் போட்டுக்கொடுத்த பாதையில் பன்ட் வரலாற்று வெற்றியை பெற்றுக்கொடுத்தார். கில் இனி பல சதங்களை அடித்து மிரட்டுவார். ஆனால், மிகச்சிறந்த இன்னிங்ஸாக இந்த 91 அடித்த இன்னிங்ஸ் என்றைக்கும் இருக்கும்.

இந்தியாவுக்கு ஏதாவது பிரச்சனை, இந்திய மக்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால், குரல் எழுப்பவும், தேசத்திற்காக முன் வரிசையில் அமர்ந்து போராடவும் பஞ்சாபிகள் தவறியதில்லை. டெல்லி விவசாயிகள் போராட்டம் ஒரு சாட்சி. பிரிஸ்பேன் டெஸ்ட்டில் சுப்மன் கில் ஆடிய இன்னிங்ஸ் மற்றொரு சாட்சி!

Also Read: 32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை!