Sports
32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியே கண்டிராத ஆஸிக்கு ‘தண்ணி’காட்டி நெருக்கடி நேரத்தில் நிரூபித்த இளம் படை!
ஆஸ்திரேலியாவில் 2007-08 ல் நடைபெற்ற காமன்வெல்த் பேங்க் சீரிஸில் ஆஸியை வீழ்த்தி கோப்பையை வென்ற பிறகு, 'இது 2007 டி20 உலகக்கோப்பை வெற்றியை விட மிகப்பெரியது' என கேப்டன் தோனி பேசியிருப்பார். அதேமாதிரியான எல்லாவற்றையும் விட மிகப்பெரிய வெற்றியைத்தான் மீண்டும் ஆஸ்திரேலியாவில் பெற்றுள்ளது இந்திய அணி. 32 ஆண்டுகளாக காபாவில் தோல்வியையே கண்டிராத ஆஸியை தோற்கடித்து பார்டர் கவாஸ்கர் ட்ராஃபியை தக்கவைத்துள்ளது.
கடந்த முறை இந்திய அணி முழுபலத்துடன் ஆஸிக்கு சென்று கோலி தலைமையில் பார்டர் கவாஸ்கர் ட்ராஃபியை வென்று வந்தது. ஆனால், யாருமே இதை முழுமையான வெற்றியாக ஏற்றுக்கொள்ளவே இல்லை. 'ஆஸி ஒரு அணியாக செட்டில் ஆகாத நிலைமையில் இருந்தது. ஸ்மித் இல்லை; வார்னர் இல்லை' என பல காரணங்கள் கூறி இந்தியாவின் வெற்றியை முழுமையாக அனுபவிக்கவிடவில்லை. ஆனால், இந்த முறை விஷயம் அப்படியே தலைகீழ்.
ஆஸி தனது முழுபலத்தோடு மீண்டும் எழுந்து நின்றது. வார்னர் இருந்தார்.... ஸ்மித் இருந்தார்... லபுஷேன், புக்கோவ்ஸ்கி என தரமான இளம் வீரர்களும் அணிக்குள் இருந்தனர். இந்திய அணியிலோ இஷாந்த் ஷர்மா தொடங்கி வரிசையாக ஒவ்வொரு சீனியர் வீரராக அணியிலிருந்து விலகிக்கொண்டே இருந்தனர். காயங்களும் கடுப்பேற்றியது. பேட்டிங்கில் கோலி இல்லையென்றால் பௌலிங்கில் ஒட்டுமொத்த பௌலர்களுமே காலியாகியிருந்தனர். கில், சிராஜ், சைனி, நடராஜன், வாஷிங்டன் என ஒரு அனுபவமற்ற இளம் வீரர்கள் கூட்டமே அறிமுகமாகியிருந்தது. கோலி இருக்கும்போதே 36 ரன்களில் ஆல் அவுட் ஆகும் அணி, கோலி இல்லாத நிலையில் என்னவாகுமோ? என சுற்றி முற்றி அவநம்பிக்கைகள் மட்டுமே சூழ்ந்திருந்தது. ஆனால், இறுதியில் வரலாறு நிகழ்ந்திருக்கிறது.
முழுபலத்தோடு இருக்கும் ஆஸியை, உலகின் சிறந்த பௌலிங் அட்டாக்கை கொண்டிருக்கும் ஆஸியை ஒரு நாட்டின் A அணி போல தோற்றமளிக்கும் ஒரு அணி எப்படி தோற்கடிக்க முடியும்? கனவிலும் கூட நினைத்துப்பார்க்க முடியாத இந்த அசாத்தியம் எப்படி நிஜமானது?
நெருக்கடியான சூழல்தான் ஒரு மனிதருக்குள் இருக்கும் அலாதியான ஆற்றலை வெளிக்கொண்டு வரும். நெருக்கடிகள் உண்டாக்கும் அட்ரினல் ரஷ்கள் எதையும் செய்து முடிக்கும் வல்லமை படைத்தவை. இந்திய அணியும் அப்படி ஒரு நெருக்கடியான சூழலில்தான் இருந்தது என்பதை விட, அணியில் இருந்த ஒவ்வொரு வீரருமே அப்படி ஒரு நெருக்கடியான நிலையில்தான் இருந்தனர். ஒவ்வொரு வீரருக்கும் தாங்கள் யார் என்பதை நிரூபித்துக் காட்ட வேண்டிய கட்டாயம் இருந்தது.
கேப்டன் ரஹானேவிலிருந்தே தொடங்குவோம். வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக ஆடும் இந்திய வீரர் என பெயரெடுத்தவர் ரஹானே. அந்நிய மண்ணில்தான் அவர் அதிகமான ரன்களை அடித்திருக்கிறார். ஆனால், அவரின் கடந்த இரண்டு ஆண்டு கால ரெக்கார்டுகளை எடுத்துப்பாருங்கள். ஆவரேஜில் பெரிய அடிவாங்கியிருப்பார். இரண்டு ஆண்டுகளில் இரண்டே சதங்களே அடித்திருந்தார். ஒயிட்பால் கிரிக்கெட்டில் ஏற்கனவே அணியிலிருந்து ஒதுக்கப்பட்டுவிட்ட நிலையில் இடையில் தென் ஆப்பிரிக்கா சீரிஸில் டெஸ்ட் அணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
லாக்டவுனுக்கு பிறகு ஐ.பி.எல்-லிலும் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. ஆஸி A அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்திலும் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஒட்டுமொத்தமாக அவரின் கெரியரே கேள்விக்குள்ளாகியிருக்கும் போதுதான் ஆஸி தொடருக்கு கேப்டனாக வாய்ப்பு கிடைக்கிறது. இதில் தன்னை நிரூபிக்காவிடில் கொஞ்சம் கொஞ்சமாக டெஸ்ட் அணியிலிருந்தும் துடைத்தெறிந்து விடுவார்கள். அந்த நெருக்கடிதான் ரஹானேவை மெல்பர்னில் பொறுப்பை உணர்ந்து சதமடிக்க வைத்தது. அந்த நெருக்கடிதான் ரஹானேவின் சிறப்பான கேப்டன்சிக்கு பின்னால் இருக்கும் உந்துதல்.
ரஹானே மாதிரிதான் அஸ்வினின் நிலையும். ஒயிட் பால் கிரிக்கெட்டிலிருந்து மொத்தமாக ஒதுக்கி டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என பட்டம் குத்திவிட்டார்கள். அப்படியிருந்தும் வெளிநாட்டு போட்டிகளில் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டு ஜுனியர் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 'இனியும் அஸ்வின் எங்களின் முதல் சாய்ஸாக இருக்கமாட்டார்' என கோச்சே சொல்லுமளவுக்கு அஸ்வினின் நிலை இருந்தது. இப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில்தான் ஆஸியில் காலடி எடுத்து வைத்து 3 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னை மீண்டும் நிரூபித்துக்காட்டியிருக்கிறார். சிட்னியில் அஸ்வினின் ஆடிய ஆட்டமும், இந்த தொடரை வெல்வதற்கு மிகமுக்கிய காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இஷாந்த், ஷமி, பும்ரா, உமேஷ், ஜடேஜா என சீனியர் வீரர்கள் இருந்திருந்தால் சிராஜ், சைனி, நடராஜன், வாஷிங்டன், ஷர்துல் தாகூர் போன்றவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்குமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. இதேமாதிரியான அதிர்ஷ்டவசமான வாய்ப்புகள் இனிமேல் எப்போது கிடைக்கும் என்பதை யாராலும் சொல்ல முடியாது. இப்போது ஆஸியில் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பை இவர்கள் எப்படி பயன்படுத்தப்போகிறார்கள் என்பதை பொறுத்துதான் அவர்களின் எதிர்காலம் இருந்தது. இந்த நெருக்கடிதான் இந்த இளம் வீரர்கள் பெர்ஃபார்ம் செய்ய வைத்தது.
எதிரணியின் 20 விக்கெட்டுகளை எடுப்பதுதான் டெஸ்ட் போட்டி என தோனி அடிக்கடி கூறுவார்.
முதல் டெஸ்ட்டில் 36 ரன்களில் ஆல் அவுட் ஆகி, இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து மொத்தமாக 20 விக்கெட்டுகளை இழந்தது இந்தியா. ஆனால், அதன்பிறகு 3 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி 20 விக்கெட்டுகளை ஆஸியிடம் இழக்கவேயில்லை. மாறாக, ஆஸி அணி இந்திய அணியிடம் இரண்டு முறை தங்களது 20 விக்கெட்டுகளையும் இழந்தது. 5 முறை இந்திய அணி 100 ஓவர்களுக்கும் மேல் பேட் செய்திருக்கிறது. 36 ரன்னில் ஆல் அவுட் ஆன ஒரு அணி எதிரணிக்கு இதை விட மிகப்பெரிய பதிலடியை கொடுத்துவிட முடியுமா?
ஒரு அணியாக முதல் டெஸ்ட்டில் தோற்ற பிறகு இந்தியா மீது பலத்த விமர்சனங்களும் நெருக்கடியும் உண்டானது. ஆனால், அதையும் தாண்டி ப்ளேயிங் லெவனில் இருந்த ஒவ்வொரு வீரருக்குமே மேலே குறிப்பிட்டதை போல தனிப்பட்ட முறையில் அவர்களின் கெரியரிலேயே சில நெருக்கடிகள் இருந்ததனால்தான் அவர்களின் வழக்கத்தை மீறிய அசாத்தியமான திறன்கள் வெளிப்பட்டிருக்கிறது. அந்த நெருக்கடிகள்தான் இந்திய அணி கோப்பையை வெல்லவும் காரணமாக அமைந்திருக்கிறது.
நெருக்கடிகள் எப்போதும் நம்மை முன்நகர்த்தியே செல்லும் என்பதற்கு இந்த பார்டர் கவாஸ்கர் ட்ராஃபியும் ஒரு உதாரணம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!