Sports
பிராட்மேனை அடக்க பாடி லைன் அட்டாக் : பதறிய ஆஸி - பிறந்தது புது விதி! #OnThisDay
இங்கிலாந்து பந்துவீச்சாளர் லார்வுட் சக வீரர் லெஸ் அமெஸ் என்பவரை அழைத்தார். அவர் ஓடி வந்து என்ன என்று கேட்டதற்கு, "ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் நான் மிடில் ஸடம்ப்பை எடுத்துக் கொள்கிறேன். நீ லெக் ஸ்டம்ப்பை எடுத்துக்கொள். அவர்கள் நம்மைத் தாக்க வந்தால் நீயும் தாக்குவதற்கு தயாராக இரு! என்றார் லார்வுட்.
அன்று அடிலெய்ட் மைதானத்தில் இருந்த ஒவ்வொரு இங்கிலாந்து ரசிகரும் உயிரை கையில் படித்துக் கொண்டுதான் அமர்ந்திருந்தனர். எந்த நேரமும் நாம் தாக்கப்படலாம் என்பது இங்கிலாந்து ரசிகர்கள் அனைவருக்கும் புரிந்தது. பலர் மைதானத்தை விட்டு வெளியேறத் தொடங்கினர். மைதானத்தில் நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளை எல்லாம் பார்த்ததும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கேலரியில் அமர்ந்து ஆட்டத்தை ரசித்தவர்களுக்கு மட்டும் இந்தநிலை கிடையாது. களத்தில் ஆடிக் கொண்டிருந்த பல இங்கிலாந்து வீரர்களுக்கும் உயிர் பயம் இருந்தது. அத்தனை ஆஸ்திரேலிய ரசிகர்களும் வெறி பிடித்தது போல இருந்தனர். கோபத்தின் உச்சத்துக்கு செல்லும் அளவு அன்று என்ன நடந்தது? காலச் சக்கரத்தை பின்னோக்கிச் சுற்றலாம்.
1930 - இங்கிலாந்து நாட்டின் MCC அமைப்பு கிரிக்கெட் உலகை ஆண்டு கொண்டிருந்த காலம். மிகவும் செல்வாக்கான நிலையில் இருந்தாலும் இங்கிலாந்து நாட்டின் பாரம்பரிய கிரிக்கெட் எதிரியான ஆஸ்திரேலிய நாட்டில் டான் பிராட்மன் என்னும் வீரர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். கிரிக்கெட் உலகிற்கே தன்னை ராஜாவாக நினைத்துக் கொண்டிருந்தது இங்கிலாந்து. ஆனால், அந்த இங்கிலாந்து நாட்டிற்கே வந்து 1930–ம் ஆண்டில் டான் பிராட்மேன் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 974 ரன்கள் குவித்தார். அந்த ஆஷஸ் தொடரையும் வென்றது ஆஸ்திரேலிய அணி. எப்படியாவது ஆஸ்திரேலிய அணியின் ஆதிக்கத்தை அழிக்க வேண்டும் என்பதில் முனைப்புடன் இருந்தது இங்கிலாந்து. அதற்கு அவர்கள் தெரிந்துகொண்ட வீரர் தான் டக்லஸ் ஜார்டைன். அவரிடமே கேப்டன் பொறுப்பையும் வழங்கி 1932–ம் ஆண்டு ஆஷஸ் தொடருக்காக ஆஸ்திரேலியா அனுப்பி வைத்தது MCC.
ஜார்டைன் ஏற்கனவே ஒரு திட்டத்துடன்தான் ஆஸ்திரேலியா சென்றார். தொடருக்கு முன்பு தனது அணியினருடன் பேசும்போது, "ஆஸ்திரேலிய வீரர்களிடம் பாவம் புண்ணியம் பார்க்காதிருங்கள். அவர்களை வெறுத்து ஒதுக்குங்கள்" என்றார் ஜார்டைன்.
முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு நடக்கும் சில பயிற்சி ஆட்டங்களில் ஜார்டைன் பங்கேற்கவில்லை. ஜார்டைனுக்கு பதிலாக கேப்டனாக இருந்த வீரர் ஜார்டைனிடம் வந்து, "பிராட்மன் ஒரு குறிப்பிட்ட விதமான பந்துவீச்சுக்கு எதிராக திணறுகிறார்... ஆனால்" என்று இழுத்தார். "ஆனால், எல்லாம் கிடையாது... முதல் ஆட்டத்திற்கு தயாராகுங்கள்" என்று கூறிச் சென்றார் ஜார்டைன்.
அவர்கள் நினைத்ததற்கு மாறாக முதல் ஆட்டத்திற்கு பிராட்மேன் வரவில்லை. அதனால் இங்கிலாந்து அணியின் திட்டம் சிறிது தடைபட்டது. பிராட்மேன் இல்லாத காரணத்தால் தனது திட்டத்தை ஜார்டைன் பெரிதாக அமல்படுத்தவில்லை. பிராட்மேனின் விடுப்பை பயன்படுத்தி இங்கிலாந்து அந்த ஆட்டத்தில் எளிதாக பத்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. முதல் ஆட்டத்திலேயே தாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்பதை சின்ன டிரெய்லர் போலக் காட்டினர் இங்கிலாந்து அணியினர். லெக் சைடு எல்லா பீல்டர்களையும் நிறுத்திவிட்டு, பந்தை பேட்ஸ்மேனின் லெக் சைடில் அதுவும் குறிப்பாக உடம்பில் படும்படியாக டார்கெட் செய்து வீசினர். அப்போதே பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.
இரண்டாம் ஆட்டத்திற்கு டான் பிராட்மேன் வந்துவிட்டார். என்ன செய்யப் போகிறார் எனக் காத்திருந்தபோது முதல் பந்திலேயே போல்டாகி அதிர்ச்சி அளித்தார் பிராட்மேன். இரண்டாவது இன்னிங்ஸில் அவர் சதம் கடக்க ஆஸ்திரேலிய அணி அந்த டெஸ்ட்டை வென்றது. அந்த டெஸ்ட்டிலும் இங்கிலாந்து அணி bodyline என்று சொல்லப்படும் லெக் தியரி முறையில்தான் பந்து வீசியது. பேட்ஸ்மேனின் உடலில் தங்களால் முடிந்த வரை தாக்கி, பேட்ஸ்மேன் சோர்வடைந்தவுடன் அவுட் செய்வதுதான் இங்கிலாந்தின் திட்டம். முதல் இரண்டு போட்டியில் இந்த திட்டத்தில் வெற்றியும் கண்டது இங்கிலாந்து.
பேட்ஸ்மேனை காயப்படுத்தி அவுட் செய்வது 'செத்த பாம்பை அடிப்பதற்கு சமானம்' என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் வெகுண்டெழுந்தனர். ஆஸ்திரேலிய கேப்டன் உட்ஃபுல்லுக்கும் நாமும் அவர்களைப் போலவே பந்து வீசுவோம் என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் உட்ஃபுல் மறுத்துவிட்டார். இந்த நிலையில் மூன்றாம் ஆட்டம் 1933-ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தொடங்கியது. இங்கிலாந்து அணி முதல் இரண்டு நாளில் பெரும்பான்மையான நேரத்தில் பேட்டிங் பிடிக்க இரண்டாம் நாள் கடைசியில் பேட்டிங் பிடிக்க வந்தது ஆஸ்திரேலியா. ஆஸ்திரேலிய அணியினர் பேட் உடன் உள்ளே வந்தததுமே அத்தனை வீரர்களையும் லெக் சைடில் நிறுத்தினார் ஜார்டைன். ஆஸ்திரேலிய ரசிகர்களுக்கு கடும் கோவம்.
இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் லார்வுட் வீசிய பந்து ஆஸ்திரேலிய கேப்டன் உட்ஃபுல்லின் இதயத்தை நேராக சென்று தாக்கியது. அவருக்கு என்ன ஆயிற்று என்று இங்கிலாந்து வீரர்கள் பார்க்க சென்ற போது கூட, ஜார்டைன் தன் வீரர்களை அழைத்து சத்தமாக, "Well bowled Larwood" என கூக்குரலிட்டு கத்தினார். ரசிகர்கள் யாரும் உள்ளே வராமல் தடுக்க போலிஸ் குவிக்கப்பட்டது. உட்ஃபுல் மிகவும் கஷ்டப்பட்டு மீண்டும் பேட் பிடிக்க வரம் போது மீண்டும் ஃபீல்டர்களை லெக் சைடில் நிறுத்தி மீண்டும் ஷார்ட் பால்தான் என எச்சரித்தார் ஜார்டைன். இதனால் ஆத்திரமடைந்த சில ஆஸி ரசிகர்கள், இங்கிலாந்து ரசிகர்களை தாக்கத் தொடங்கினர்.
ஆட்டம் நடக்குமா, நடக்காதா என்ற நிலையில் 16–ம் தேதி மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது. லார்வுட் வீசிய பந்து ஓல்ட்ஃபீல்ட் என்ற பேட்ஸ்மேன் தலையில் பட அவர் தலை சுற்றிக் கீழே விழுந்து விட்டார். அவரின் மண்டைக்குள் இருந்த பல எலும்புகள் உடைந்து விட்டன. இதை எல்லாம் பார்த்து, சகிக்க முடியாமல் ஆஸ்திரேலிய ரசிகர்கள் உள்ளே வந்து கலகம் செய்யக் காத்திருந்தனர். ஆஸ்திரேலிய அணி அந்த ஆட்டத்தோடு சேர்த்து தொடரையும் இழந்தது.
MCC அமைப்பின் மேனேஜர் வார்னர் என்பவர், உட்ஃபீல்டை சந்தித்து தனது ஆறுதலைச் சொல்லச் சென்றார். அதற்கு உட்ஃபீல்ட் சொன்ன வார்த்தைகள்தான் கிரிக்கெட் உலகைத் திருப்பி போட்டது. "நான் உங்களை சந்திக்க விரும்பவில்லை. இங்கு இரண்டு அணிகள் இருக்கிறது. ஒன்று கிரிக்கெட் விளையாட விரும்புகிறது. மற்றொன்று அதை விரும்பவில்லை" என்றார் ஆஸி கேப்டன் தீர்க்கமாக! இந்த செய்தி மறுநாள் பத்திரிகைகளில் வெளியாகி, இங்கிலாந்து கிரிக்கெட் மீதிருந்த மதிப்பை தவிடு பொடியாக்கியது.
நாங்கள் விதிப்படி தான் செய்கிறோம் என்றது இங்கிலாந்து தரப்பு. இப்படி பந்து வீசினால் ஆட முடியாது என்றது ஆஸ்திரேலிய தரப்பு. ஆனால் அந்தக் காலத்தில் இங்கிலாந்து நாட்டின் ஆதிக்கம் காரணமாக அந்த தொடர் முழுக்க நடந்தது. இந்தத் தொடருக்கு பிறகுதான் ஸ்கொயர் லெக் திசையில் இரண்டு பீல்டர்களுக்கு மேல் நிற்கக் கூடாது என்ற விதியைக் கொண்டு வந்தது MCC. இதன் நீட்சியாகத்தான் ஒரு ஓவருக்கு இத்தனை பவுன்சர் போன்ற விதிகள் எல்லாம் வந்தன.
இவ்வளவு கடினமான பந்துவீச்சு கொண்ட தொடரைக் கூட ஆஸ்திரேலிய ஜாம்பவான் 57 என்ற நல்ல சராசரியுடன் தான் முடித்தார். இதை விட பெரிய ஆச்சரியம் என்ன என்றால், எந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தொடர்ந்து லெக் தியரியில் பந்து வீசிறாரோ, அதே ஆஸ்திரேலியா நாட்டில் போய் செட்டில் ஆனார் லார்வுட். மேலும் எந்த ஓல்ட்ஃபீல்டின் மண்டை எலும்புகளை தன் பவுன்சரால் உடைத்தாரோ, அதே ஓல்ட்ஃபீல்டுடன் கடைசி காலத்தில் நல்ல நண்பர் ஆனார் லார்வுட். காலம் தான் எவ்வளவு விசித்திரமானதும் அழகானதும்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!