Sports
#IndvAus அனுபவமற்ற பவுலர்களைக் கொண்டு டாப் ஆர்டரை சாய்த்தது எப்படி - இந்தியாவின் கேம் பிளான்!
Australia vs India பிரிஸ்பேன் டெஸ்டின் முதல் நாள் ஆட்டம் முடிவடைந்திருக்கிறது. முதலில் பேட் செய்த Australia 274-5 என்ற நிலையில் முதல் நாளை முடித்திருக்கிறது. காபா மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் காயங்கள் காரணமாக இந்திய அணியில் ப்ளேயிங் லெவனில் பெரிய மாற்றங்கள் இருந்தது. தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரும் வேகப்பந்து வீச்சாளர் நடராஜனும் டெஸ்ட் போட்டிக்கு அறிமுகமாகினர்.
பெஞ்சில் இருந்த பெரும்பாலான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிட்ட நிலையில் குல்தீப் யாதவ்க்கு மட்டும் வாய்ப்புக் கொடுக்கப்படவே இல்லை. இதை இன்றைக்கு கமெண்ட்ரியில் பேசிய அனைவருமே விமர்சித்திருந்தனர். நடராஜனை தவிர மற்ற மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் ஒரே மாதிரியாக வீசுபவர்கள்தான் அவர்களில் ஒருவருக்கு பதிலாக குல்தீப்க்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். ‘வாஷிங்டன் சுந்தர் கொஞ்சம் டிஃபன்ஸிவான ஆப்ஷனாகத்தான் தெரிகிறார். குல்தீப் இருந்திருந்தால் ஆஸி பேட்ஸ்மேன்களை இன்னும் அக்ரஸிவ்வாக அட்டாக் செய்திருக்கலாம்’ என விமர்சிக்கப்பட்டது.
“அறிவிக்கப்பட்ட அணியில் இருக்கும் வீரருக்கு வாய்ப்புக் கொடுக்காமல் நெட்டில் வீச வந்த பௌலருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. இளம் வீரரான குல்தீபின் எதிர்காலம் என்னவாக போகிறது” என அழுத்தமான கேள்வியை ஹர்ஷா போக்ளே முன்வைத்தார். இந்த ஒரு விஷயத்தை தவிர ரஹானே தேர்ந்தெடுத்த பிளேயிங் லெவனில் பெரிதாக எந்த குறையும் இல்லை. சஹாவுக்கு பதில் மயங்க் அகர்வாலை தேர்ந்தெடுத்ததும் நல்ல முடிவுதான்.
இன்றைய போட்டியில் ஆடிய ஆஸியின் பௌலிங் டிபார்ட்மெண்ட் மொத்தமாக 1013 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறது. இந்திய அணியின் பௌலிங் டிபார்ட்மென்ட் இந்தப் போட்டிக்கு முன் மொத்தமே 11 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியிருக்கிறது. இரண்டு போட்டிகளில் ஆடியுள்ள சிராஜ் தான் இந்த போட்டியில் சீனியர் பௌலர். இப்படி ஒரு அனுபமற்ற இளம் பந்துவீச்சாளர் கூட்டணியை வைத்துக்கொண்டுதான் ஆஸியை எதிர்கொண்டது இந்திய அணி.
Australia ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்த்திருக்க, சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே அவுட் ஆகி வெளியேறினார் வார்னர். இரண்டு இன்ஸ்விங் டெலிவரிக்களுக்கு பிறகு வீசப்பட்ட வெளியே சென்ற பந்தை தொட்டு, 1 ரன்னில் ஸ்லிப்பில் நின்ற ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இன்னொரு எண்டில் முதல் டெஸ்ட்டில் ஆடும் நடராஜன் தனது ஸ்பெல்லை வீசிக்கொண்டிருந்தார். இடதுகை பந்து வீச்சாளர்களுக்கு எளிமையாக வரும் அவே டெலிவரிகளை மட்டுமே ஸ்மித்துக்கு வீசிக்கொண்டிருந்தார். பேட்ஸ்மேனை தடுமாற செய்யும் வகையில் லைன் & லெந்தை பிடிப்பதற்கு அவருக்கு கொஞ்சம் நேரம் பிடித்தது.
மார்கஸ் ஹாரிஸும் ஸ்மித்தும் கூட்டணி போட்டு மெதுவாக செட்டில் ஆகிக்கொண்டிருக்க 9-வது ஓவரில் ஷர்துல் தாகூரை அறிமுகப்படுத்தினார் ரஹானே. 2018 டெஸ்டில் விண்டீஸுக்கு எதிராக 10 டெலிவரிக்களை மட்டுமே வீசியிருக்கும் ஷர்துல் தாகூருக்கும் இது ஏறக்குறைய அறிமுகப்போட்டி என்றே எடுத்துக்கொள்ளலாம். ஷர்துல் வீசிய முதல் பந்திலேயே மார்கஸ் ஹாரிஸ் அவுட் ஆனார். இன்ஸ்விங்கை சரியாக கணிக்காமல் ஃபிளிக் ஆடி வாஷிங்டன் சுந்தரிடம் கேட்ச் கொடுத்து 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அனுபவமில்லாத இந்திய அணியின் பௌலிங் அட்டாக ஆஸியின் ஓப்பனர்கள் இருவரையும் 8.1 ஓவருக்குள் வெளியேற்றி அசத்தியது. ஓப்பனிங் கூட்டணி சீக்கிரம் வெளியேறியிருந்தாலும் ஆஸியின் அபாயமான கூட்டணியான ஸ்மித்தும் லபுஷேனும் இணைந்து பார்ட்னர்ஷிப்பை தொடங்கினர்.
இந்த கூட்டணிக்கு இந்திய அணி ஒரு லெக் சைடு ப்ளானை வைத்துதான் கடந்த 3 போட்டியிலும் விக்கெட்டை வீழ்த்தியது. ஆனால், கடந்த போட்டியில் இருவருமே அந்த ப்ளானுக்கு இரையாகாமல் ரன்களை குவித்திருந்தனர். எனவே இந்த போட்டியில் அந்த ப்ளானை இந்திய அணி கைவிட்டுவிட்டது. லெக் சைடில் இரண்டு ஃபீல்டர்களை மட்டும் வைத்துக்கொண்டு ஆஃப் சைடில் கவனம் செலுத்தும் பொருட்டு ஃபீல்ட் செட் அப் செய்திருந்தனர். ட்ரைவ் ஆடும் லெந்தில் ஸ்டம்புக்கு வெளியே வீசி பேட்ஸ்மேனை எட்ஜ் எடுக்க வேண்டும் என்பதே இந்த புதிய திட்டமாக இருந்தது.
ஆனால், ஸ்மித் இந்த திட்டத்துக்கு எதிராக கவுன்ட்டர் அட்டாக் கொடுக்க ஆரம்பித்தார். ஷர்துல் தாகூரின் ஓவர்களில் இந்திய அணியின் திட்டத்துக்கு சவால் அளிக்கும் வகையில் ரிஸ்க் எடுத்து ட்ரைவ்களை கச்சிதமாக ஆடி அசத்தினார். லெக் சைடிலிருந்து ஆஃப் சைடுக்கு அதிகமாக நகர்வதுதான் இந்திய அணியின் லெக் சைடு ப்ளானுக்கு ஸ்மித் அதிகமாக தடுமாறியதற்கு மிக முக்கிய காரணம். இதை மூன்றாவது டெஸ்ட்டில் திருத்திக்கொண்டு லெக் ஸ்டம்பை பௌலருக்குக் காட்டாமல் நின்றுதான் இந்தியாவின் லெக் சைட் ப்ளானை ஸ்மித் முறியடித்தார். ஆனால், இன்று மீண்டும் ரிஸ்க் எடுத்து நன்றாக நகர்ந்து வந்து இந்தியாவின் திட்டத்திற்கு கவுண்டர் அட்டாக் கொடுத்தார்.
இதுதான் திட்டம், இதுதான் நாம் வீச வேண்டிய லென்த் என இந்திய பௌலர்கள் பிடித்து செட்டில் ஆவதற்குள் ஸ்மித் அட்டாக் செய்ய, சீராக ஒரே லைனில் வீசமுடியாமல் இந்திய அணியின் லைன் & லென்த் குலைந்தது. லாபுஷேன் ஒருபக்கம் மெதுவாக ஆடிக்கொண்டிருக்க ஸ்மித் விரைவாக ரன்களை சேர்த்தார்.
இந்த கூட்டணி ஓரளவுக்கு செட்டில் ஆகி முன்னேறிக்கொண்டிருக்கும் போது வாஷிங்டன் சுந்தரின் ஓவரில் ஸ்மித் அவுட் ஆகி வெளியேறினார். ஸ்மித்துக்கு அஸ்வின் எப்படி லெக் ஸ்லிப் லெக் கல்லி ஷார்ட் லெக் என வைத்து அட்டாக் செய்தாரோ அதே மாதிரிதான் வாஷியும் அட்டாக் செய்தார். வாஷி வீசிய முதல் 3 ஓவர்களுமே மெய்டனாக அமைந்திருந்தது. நான்காவது ஓவரில் எதிர்பாராத நேரத்தில் இவர் வீசி ஃபுல் லெந்த் டெலிவரியில் ஷாட் ஆடி ஸ்மித் ரோஹித்திடம் கேட்ச் கொடுத்து 36 ரன்களில் வெளியேறினார். இன்றைய நாளில் வாஷி வீசிய ஒரே ஃபுல் லெந்த் டெலிவரி இதுதான்.
நம்பர் 5-ல் மேத்யூ வேட் களமிறங்கினார். லபுஷேன் மற்றும் மேத்யூ வேட் கூட்டணி கொஞ்சம் வேகமாக ரன்கள் சேர்க்க ஆரம்பித்தது. சைனி பந்துவீச்சில் லபுஷேனுக்கு கல்லியின் நின்ற கேப்டன் ரஹானே ஒரு கேட்ச்சை ட்ராப் செய்தார். இந்த வாய்ப்பை லபுஷேன் முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். இரண்டாவது செஷன் முடிவில் ஆஸி அணி 154-3 என்ற நிலையில் இருந்தது. சிராஜ் வீசிய 63 வது ஓவரில் லபுஷேன் பவுண்டரி அடித்து இந்த சீரிஸில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். நடராஜன் வீசிய 64 வது ஓவரொ ஒரு ஷாட் பாலை தூக்கியடித்து ஷர்துல் தாகூரிடம் கேட்ச் கொடுத்து 45 ரன்களில் வெளியேறினார் வேட். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை பதிவு செய்தார் நடராஜன்.
பிட்ச்சில் பெரிதாக ஒன்றுமில்லை என்பதால் எதற்கும் முயற்சிக்காமல் ஸ்டிரெய்ட் டெலிவரிக்களை மட்டுமே வீசினோம் என ஆஸி பௌலர்கள் கடந்த போட்டிகளுக்கு பிறகு பேசியிருந்தனர். இன்றைக்கு நடராஜனும் இதே பாணியைத்தான் கையாண்டார். பிட்ச்சில் மூவ்மெண்ட் இருந்தாலும் நடராஜனால் பெரிதாக ஸ்விங் செய்ய இயலவில்லை. எனவேதான், எதற்கும் முயற்சிக்காமல் வேகத்தை குறைத்து இயல்பான ஸ்டிரெய்ட் டெலிவரிகளை மட்டும் வீசினார். ஆனால், இதில்தான் ஆஸியினர் திணறினர். மேத்யூ வேட் மட்டுமில்லாமல் அடுத்த ஓவரிலேயே ,சதமடித்திருந்த லபுஷேனும் இதே மாதிரியான ஒரு டெலிவரியை தூக்கியடித்து பன்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 108 ரன்னில் ஆட்டமிழந்தார். நடராஜனின் பந்தில் பெரிதாக ஒன்றும் இல்லை என குறைத்து மதிப்பிட்டதுதான் இவர்கள் அட்டாக் செய்ய முயன்று அவுட் ஆனதற்கு காரணம்.
புதிய பந்து எடுக்கப்பட்டு சிராஜும் நடராஜனும் சில ஓவர்கள் வீசியிருந்த நிலையில் இன்றைய நாள் முடிவுக்கு வந்தது. ஆஸி அணி 274-5 என்ற நிலையில் இருந்தது. பெய்ன் 38 ரன்களோடும் கிரீன் 28 ரன்களோடும் களத்தில் இருந்தனர். அனுபவமற்ற ஒரு பௌலிங் அட்டாக்கை வைத்துக்கொண்டு ஆஸியின் முக்கிய பேட்ஸ்மேன்களை முதல் நாளிலேயே வெளியேற்றிவிட்டது சிறப்பு. ஆனால், கடந்த போட்டியில் க்ரீன் கடைசிக்கட்டத்தில் காட்டிய அதிரடிதான் இந்திய அணிக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இந்த போட்டியிலும் அப்படி நடக்கக்கூடாது என்றால் நாளை சீக்கிரமே நியுபாலில் பெய்ன் மற்றும் க்ரீனின் விக்கெட்டை வீழ்த்தியாக வேண்டும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!