Sports
IND vs AUS: 3.45 மணி நேரம்; 43 ஓவர்கள்; அஸ்வின்-விஹாரி கூட்டணி டிஃபண்ட் செய்தது எப்படி?! #SydneyTest
தோல்வி உறுதி என்ற நிலையிலிருந்து அசாத்தியமாக சிட்னி போட்டியை ட்ரா செய்திருக்கிறது இந்திய அணி. பண்ட் விரைவாக அடித்த 98 ரன்களும் புஜாரா நிலைத்து நின்று அடித்த 77 ரன்களும் மிக முக்கியமானவை. இந்த புஜாரா-பண்ட் பார்ட்னர்ஷிப்தான் ஆட்டத்தின் போக்கையே மாற்றியது. ஆனால், அதேநேரத்தில் அஸ்வின்-ஹனுமா விஹாரி இவர்களின் பார்ட்னர்ஷிப்பும் புஜாரா-பண்ட் பார்ட்னர்ஷிப்புக்கு எந்தவிதத்திலும் குறைந்தது கிடையாது. அதிக சவால்மிக்க கடைசி செஷனில் வந்த அந்த பார்ட்னர்ஷிப்பும் இந்த ட்ராவுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.
ஹனுமா விஹாரி கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் ரொம்பவே மோசமாகத்தான் ஆடியிருந்தார். போதாக்குறைக்கு ஃபீல்டிங்கின்போது சுலபமான கேட்ச்சுகளையும் ட்ராப் செய்திருந்தார். அஸ்வினை பொருத்தவரைக்கும் அவர் ஓரளவுக்கு பேட்டிங் செய்வார் என்றாலும், சமீபமாக அவர் நீண்ட நேரம் க்ரீஸில் நிற்கவே இல்லை.
அதனால் பண்ட், புஜாரா இருவரும் வெளியேறியதுமே ஆட்டம் முடிந்தது என நினைக்கத் தோன்றியது. ஆனால், இந்த கூட்டணி எதிர்பார்க்காத வகையில் பல அதிசயங்களை நிகழ்த்தியது. ஃபார்மிலேயே இல்லாத விஹாரி 3.45 மணி நேரம் பேட்டிங் ஆடியிருக்கிறார். அஸ்வின் 3.15 மணி நேரம் பேட்டிங் ஆடியிருக்கிறார். இருவரும் சேர்ந்து 42.4 ஓவர்களை எதிர்கொண்டிருக்கின்றனர். நிச்சயமாக இது அதிசயம்தான். இவர்களில் ஒருவர் அவுட் ஆகியிருந்தாலும் சடசடவென டெயில் எண்டர்கள் வீழ்ந்திருக்கக்கூடும்.
ஹனுமா விஹாரிக்கு பேட்டிங் ஆடும்போது தசைப்பிடிப்பு பிரச்சனை ஏற்பட்டு ரன் ஓட முடியாமல் சிரமப்பட்டார். 'அஸ்வின் இன்று காலை குனிந்து தன் ஷூ லேசைக் கூட கட்ட முடியாத நிலையில் இருந்தார்' என அவரது மனைவி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். இப்படியான சூழ்நிலையில்தான் ஆஸியின் ஒட்டுமொத்த பௌலிங் அட்டாக்கையும் வெற்றிகரமாக டிஃபண்ட் செய்திருக்கிறது இந்தக் கூட்டணி.
விஹாரி-அஸ்வின் கூட்டணி சேர்ந்து கொஞ்ச நேரத்திற்கு ஆஸியினர் வழக்கம் போலத்தான் பந்துவீசிக்கொண்டிருந்தனர். டீ ப்ரேக் முடிந்த பிறகு ஆஸியின் பௌலிங்கில் ஒரு ஆவேசம் தெரிந்தது. 'இவர்களுக்கெல்லாம் இவ்வளவு நேரம் எடுப்பது வீண். பத்து நிமிடத்தில் மொத்தமாக முடித்துவிடுவோம்' என்கிற வகையில்தான் ஆஸியின் பௌலிங் இருந்தது. வீசியது அத்தனையும் ஷார்ட் பால்களும் பவுன்சர்களும்தான்... அதுவும் உடம்பைக் குறிபார்த்து. அதிலும், கம்மின்ஸ் அஸ்வினை ஒரு காட்டு காட்டிவிட்டார்.
கம்மின்ஸ் பந்தில் முரட்டுத்தனமாக அடி வாங்கி பிசியோவெல்லாம் வந்து பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால், வலியைப் பொருட்படுத்தாமல் அஸ்வின் தொடர்ந்து ஆடினார். டீ ப்ரேக் முடிந்த பிறகு அஸ்வினை ஸ்ட்ரைக்கில் வைத்தே ஆஸி பவுன்சராக வீசிக்கொண்டிருந்தது. அஸ்வின் சமாளித்தாலும் வெகுவாக தடுமாறினார் என்பதே உண்மை. இன்னும் கொஞ்ச நேரம் நின்றிருந்தால் விக்கெட் கூட விழுந்திருக்கும். இந்த மாதிரியான சமயங்களில்தான் பார்ட்னர்ஷிப் என்பது முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இந்த போட்டியிலும் உணர முடிந்தது.
'Partnership is all about complementing each other'. இதை இன்று மிகச்சரியாக செய்தது இந்தக் கூட்டணி. அஸ்வின் பவுன்சர்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார் என புரிந்து கொண்ட விஹாரி வேகப்பந்து வீச்சாளர்களின் ஓவர்களை அவரே பார்த்துக்கொள்வது என்கிற முடிவுக்கு வந்தார். இன்னொரு எண்டில் வீசும் லயன், லபுஷேன் போன்ற ஸ்பின்னர்களை மட்டும் அஸ்வினை எதிர்கொள்ள வைத்தார் விஹாரி. அவரால் ஓட முடியவில்லை, இருந்தும் வேகப்பந்து வீச்சாளர்களின் ஓவர்களில் அஸ்வினை சிங்கிளுக்கு அழைத்து அவர் அந்த அட்டாக்கை சமாளித்துக்கொண்டார். விஹாரி வேகப்பந்தையும் அஸ்வின் ஸ்பின்னையும் என பிரித்துக்கொண்டு அழகாக டிஃபண்ட் செய்தனர். சுற்றி 5 ஃபீல்டர்கள் இருக்கும் போதும் அஸ்வின் லயனின் பந்துகளை Front foot டிஃபண்ட் செய்தது அவ்வளவு பெர்ஃபெக்ட்டாக இருந்தது.
விஹாரிக்கும் தமிழ் புரியும் என்பதால் அஸ்வின் விஹாரியிடம் தமிழில் பேசியே உற்சாகமூட்டிக்கொண்டிருந்தார். 'பத்து பத்தா பாலா போனாலும்... நாற்பது பால்தான்' என அஸ்வின் விஹாரியிடம் சொன்னது இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதுதான் இந்தக் கூட்டணியின் அடிப்படை திட்டமாக இருந்திருக்கும். 43 ஓவர்களை டிஃபண்ட் செய்ய வேண்டும் என இமாலய இலக்கை நோக்கி இந்த கூட்டணி முதலிலேயே திட்டம் திட்டியிருந்தால் ஒரு வித திகைப்பிலையே சீக்கிரமே விக்கெட்டை விட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. அப்படி செய்யாமல் சின்ன சின்ன இலக்குகளாக தங்களுக்குள்ளேயே பிரித்துக்கொண்டு ஆடியது மிகச்சிறப்பு.
அஸ்வினை விட விஹாரிதான் சிறந்த பேட்ஸ்மேன். ஆனாலும், இந்த பார்ட்னர்ஷிப்பை லீட் செய்து முன்நகர்த்தி கொண்டு போனது என்னவோ அஸ்வின் தான். அஸ்வினின் யூடியூப் சேனலில் ஒரு முறை ஒரு ரசிகர் 'நீங்கள் யாருக்கு பந்து வீசும்போது பயப்படுவீர்கள்?' என கேட்டிருப்பார். அதற்கு, 'யாரை பார்த்தும் நான் பயப்பட்டது கிடையாது. தில்லுக்கு துட்டாக வீசி விட்டு வந்துவிடுவேன்' என கூறியிருப்பார் அஸ்வின். இந்த ஆட்டிடியூடும் இயல்பாகவே அவருக்குள் இருக்கும் தலைமைப் பண்பும் இன்று விஹாரியுடனான பார்ட்னர்ஷிப்பில் சிறப்பாகவே வெளிப்பட்டது.
உளவியல் ரீதியாக இடையூறு செய்ய முயன்ற ஆஸி கேப்டன் பெய்னுக்கு, 'நீங்க இந்தியாவுக்கு வந்தா, அதுதான் உன்னோட கடைசி சீரிஸா இருக்கும்' என பதிலடி கொடுத்ததாக இருக்கட்டும், அவுட் ஆஃப் ஃபார்மில் இருக்கும் விஹாரியை பேசி பேசியே பதற்ற நிலையில் இருந்து கம்ஃபர்ட் ஜோனுக்கு கொண்டுவந்ததாகட்டும், அஸ்வின் ஒரு உலகத்தரமான வீரர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
உச்சபட்ச மனவலிமையையும் உடல் வலிமையையும் ஒன்று திரட்டி இவர்கள் இருவரும் ஆடிய இந்த இன்னிங்ஸ் ஆட்டத்தை டிரா செய்திருந்தாலும், இதை ஒரு மேட்ச் வின்னிங் இன்னிங்ஸாகத்தான் கருத வேண்டும்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!