Sports
பிளானிங்கில் சொதப்பிய ஆஸ்திரேலியா... மூன்று ரோல்களில் வெளுத்தெடுத்த ரஹானே! #IndvAus
இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான Boxing Day Test போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் நடந்து முடிந்திருக்கிறது. நேற்று 11 ஓவர்களை சந்தித்து 36-1 என்ற நிலையில் இருந்த இந்திய அணி இன்று தொடர்ந்து ஆடியது. இன்றைய நாள் முடிவில் இந்திய அணி 277-5 என்ற நிலையில் இருக்கிறது. கேப்டன் ரஹானே பொறுப்பாக ஆடி சதத்தை பதிவு செய்தார்.
இன்றைய நாள் ஆட்டத்தை தொடங்குவதற்காக சுப்மன் கில்லும் புஜாராவும் க்ரீஸுக்குள் வந்தனர். ஆஸி சார்பில் முதல் ஸ்பெல்லை கம்மின்ஸும் ஹேசல்வுட்டும் வீசினர். நேற்று எல்லா பௌலர்களையும் பவுண்டரி அடித்து மிரட்டிய சுப்மன் கில் இன்றும் அதே அட்டாக்கிங் மூடில்தான் இருந்தார். ஒன்றிரண்டு பவுண்டரிகள் கிடைத்தாலும், இன்றைக்கு 2 இன்சைட் எட்ஜுகளும் கொடுத்திருந்தார் சுப்மன் கில். ஒன்று கேட்ச் ட்ராப் ஆகிவிட்டது. இன்னொன்று கீப்பரை தாண்டி பவுண்டரி ஆகி விட்டது. புஜாராவுக்குமே காலையிலேயே ஒரு கேட்ச் ட்ராப் ஆகியிருந்தது.
சுப்மன் கில்லை பொருத்தவரை ஹேசல்வுட்டோ, கம்மின்ஸோ அவரை இன்சைட் எட்ஜ் ஆக்கினாலோ அல்லது ஒரு மிரட்டலான டெலிவரி மூலம் தடுமாற செய்தாலோ, அடுத்த பந்தே ரிஸ்க் எடுத்து தைரியமாக பேட்டை விட்டு ஒரு ஷாட் ஆடி பவுண்டரிக்கு முயற்சிக்கிறார். இது கொஞ்சம் பாசிட்டிவ்வான அப்ரோச் போல தெரிந்தது. பௌலரை ஒரு லைன் & லென்த்தை பிடித்து ஆதிக்கம் செலுத்தவிடாமல் அட்டாக் செய்வது சிறப்பாக இருந்தது. ஆனால், 10 தடவை அப்படி பேட்டை விட்டு 10 தடவையும் ஷாட்டை முழுமையாக ஆடி விட முடியாது இல்லையா? எப்போதாவது ஒரு முறை தவறு நிகழத்தானே செய்யும். அது சுப்மன் கில்லுக்கும் நடந்தது. 22 வது ஓவரில் கம்மின்ஸ் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தில் பேட்டை விட, பந்து எட்ஜ்ஜாகி கீப்பர் பெய்னிடம் கேட்ச் ஆனது. தனது அறிமுக போட்டியில் 65 பந்துகளில் 45 ரன்களை சேர்த்து சுப்மன் கில் ஆட்டமிழந்தார். அரைசதம் கூட எடுக்காவிடிலும் இது நினைவில் வைக்கக்கூடிய அளவுக்கு நல்ல இன்னிங்ஸ்தான். ரொம்பவே பாசிட்டிவ்வாக ஆடியிருந்தார்.
சுப்மன் கில் வெளியேறியவுடன் நம்பர் 4–ல் கேப்டன் ரஹானே களமிறங்கினார். இன்னொரு எண்டில் தனது வழக்கமான ஆட்டத்தை ஆடிக்கொண்டிருந்த புஜாரா, இதே ஸ்பெல்லில் 24–வது ஓவரில் கம்மின்ஸ் வீசிய ஒரு பந்தில் எட்ஜ்ஜாகி கீப்பரிடம் கேட்ச் ஆனார். கம்மின்ஸின் மற்ற டெலிவரிகளின் ரிலீஸ் பாயின்ட்டை விட புஜாராவின் விக்கெட்டை எடுத்த இந்த டெலிவரியின் ரிலீஸ் பாயின்ட் கொஞ்சம் கீழே இறங்கி இருக்கும். காரணம், புஜாரா ஆஃப் சைடுக்கு வெளியே வீசப்படும் பந்துகளை தொடவேமாட்டார். அவருக்கு அப்படி வீசி ஒரு ப்ரயோஜனமும் இல்லை. அவரை ஆட வைக்க வேண்டுமெனில் உடம்புக்குள் ஸ்டம்ப் லைனுக்குள் போட வேண்டும். அதற்காகத்தான் வலக்கை பௌலரான கம்மின்ஸ் தனது மணிக்கட்டை இடது பக்கம் கொஞ்சம் சரித்து இன்கம்மிங் டெலிவரியாக புஜாராவுக்கு வீசியிருப்பார். அதில்தான் எட்ஜ்ஜாகி புஜாரா வெளியேறியிருப்பார். முதல் டெஸ்ட்டிலும் புஜாராவை இதே மணிக்கட்டு யுக்தியை பயன்படுத்திதான் கம்மின்ஸ் வீழ்த்தியிருப்பார். இங்கேயும் அப்படித்தான் வீழ்த்தினார்.
சீக்கிரமே இரண்டு முக்கிய விக்கெட்டுகளை இழந்து 67/3 என்ற நிலையில் இந்தியா தடுமாறியது. ஆனால், ஹனுமா விஹாரியும் ரஹானேவும் கொஞ்சம் பொறுப்பாக பார்ட்னர்ஷிப் போட்டு ரன்னை உயர்த்தினர்.
டெஸ்ட் போட்டிகளில் ரஹானேவை அதிக முறை வீழ்த்தியவர், நாதன் லயன். இதுவரை 9 தடவை ரஹானேவை வீழ்த்தியிருக்கிறார். மேலும், ரஹானே உள்ளூரை விட வெளிநாடுகளில்தான் அதிக ரன்கள் அடித்திருக்கிறார். காரணம், ரஹானே ஸ்பின்னை விட வேகப்பந்து வீச்சைதான் நன்றாகவே எதிர்கொள்வார். இதெல்லாம் இருந்தும் ரஹானே 22 வது ஓவரிலேயே க்ரீஸுக்குள் வந்த பிறகும்கூட, செஷன் முடிவதற்கு சில நிமிடங்களே இருக்கையில், 35 வது ஓவரில்தான் லயனுக்கு பந்தை கொடுத்தார் கேப்டன் பெய்ன். இது தவறான முடிவு.
இந்திய பேட்ஸ்மேன்களில் முதல் 30 பந்துகளில் கன்ட்ரோலே இல்லாமல் ஷாட் ஆடுபவர் ரஹானேதான். இன்றும் முதல் 14 பந்துகள் டாட் தான் ஆடியிருந்தார். இந்த நேரத்தில் லயனை இறக்கிவிட்டு ப்ரஷர் போட்டிருந்தால் ரஹானே விக்கெட்டுக்கு ஒரு வாய்ப்பிருந்திருக்கும். பெய்ன் இதை தவறவிட்டுவிட்டார்.
ஹனும விஹாரியும், ரஹானேவும் பொறுமையாக செட் ஆகிவிட்ட நிலையில் முதல் செஷன் முடிந்தது. இந்திய அணி 90/3 என்ற நிலையில் இருந்தது.
இரண்டாவது செஷன் தொடக்கத்திலிருந்தே லயனுக்கு அதிக ஓவர்களை கொடுத்தார் பெய்ன். எப்படி லயனை தாமதமாக அறிமுகப்படுத்தினாரோ, அதே போல ஃபீல்ட் செட்டப்பிலுமே கொஞ்சம் லேட்டாகத்தான் ரியாக்ட் செய்தார். ரஹானே, ஸ்மித்துக்கு வட்டம் போட்டு அட்டாக்கிங் ஃபீல்ட் செட்டப் வைத்திருப்பார். ஆனால், பெய்னோ, லயன் மிடிலிலிருந்து லெக் சைடுக்கு நன்றாக திருப்பிய ஆஃப் ப்ரேக்கர்களின் போது கூட, லெக் ஸ்லிப் வைக்காமல் ஏமாற்றியிருந்தார். ஒரு நான்கு ஓவர்கள் கழித்து சாவகாசமாக லெக் ஸ்லிப்பை கொண்டு வந்தார்.
இப்படி லெக் ஸ்லிப் வந்தவுடன், ரஹானே டவுண் தி க்ரவுண்ட் இறங்கி வந்து லயனை ஆடத்தொடங்கிவிட்டார். அதனால், இந்த ஸ்லிப்புக்கு பெரிய வேலை இல்லாமல் போய்விட்டது.
வேகப்பந்து வீச்சை பொருத்தவரை, இந்த இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு ஷாட் பால்களை ஒரு ஆயுதமாக பயன்படுத்த வேண்டும் என ஆஸியினர் ப்ளான் வைத்திருக்கின்றனர். ஆனால், கில் தொடங்கி ரஹானே-விஹாரி வரை ஷாட் பால்களை சிறப்பாகவே எதிர்கொண்டனர். ரஹானே ஃபைன் லெகில் சில பவுண்டரிக்களையும் அடித்தார். இந்த கூட்டணி கொஞ்சம் நின்று அரைசதத்தை கடந்த நிலையில், லயன் வீசிய 45 வது ஓவரில் விஹாரி ஒரு பவுண்டரி அடித்துவிட்டு அடுத்த பந்தையே முட்டி போட்டு பவுண்டரி அடிக்க முயற்சி செய்து எட்ஜ்ஜாகி ஸ்லிப்பிடம் கேட்ச் ஆனார்.
ஹனுமா விஹாரி 21 ரன்னில் வெளியேற, நம்பர் 6 ல் ரிஷப் பண்ட் களமிறங்கினார். முதலில் ஒரு சில பந்துகளை டாட் ஆடி பொறுமையாக ஆடிய பண்ட். கொஞ்ச நேரத்திலேயே, 'இதெல்லாம் நமக்கு செட் ஆகாதுப்பா!' என்கிற ரேஞ்சில் ஆஸியின் அட்டாக்குக்கு கவுன்ட்டர் அட்டாக் கொடுக்க ஆரம்பித்தார். எல்லா பந்துகளிலும் ரன் சேர்த்தார். ஒரு சில பவுண்டரிகளையும் அடித்தார். பண்டின் இந்த அப்ரோச்சால் ரன்னும் வேகமாக உயர்ந்தது. பண்ட் 40 பந்துகளில் 29 ரன் எடுத்து ஸ்டார்க்கின் பந்தில் எட்ஜ்ஜாகி கீப்பரிடம் கேட்ச் ஆனார். ஆனால், இந்த 29 ரன்களோடு ரஹானேவுடன் பார்ட்னர்ஷிப்பாக 57 ரன்கள் வேகமாக வந்தது இந்தியாவுக்கு ரொம்பவே வசதியாக அமைந்தது. அடுத்ததாக ஜடேஜா உள்ளே வந்தார். இரண்டாவது செஷன் முடிகிற நேரத்தில் சரியாக அரைசதம் கடந்தார் ரஹானே. இந்த செஷன் முடிவில் இந்திய அணி 189-5 என்ற நிலையில் இருந்தது.
கடைசி செஷன் முழுவதும் இந்தியாவின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. ரஹானே - ஜடேஜா இருவருமே கட்டுக்கோப்பாக ஆடினர். கேமரூன் க்ரீன் ஒரு ஓவரில் ஒரு ஷாட் பிட்ச் பாலை போட்டுவிட்டு அடுத்த பந்தே ஃபுல்லாக போட்டதை கமென்ட்ரியிலிருந்த ஷேன் வார்னே விமர்சித்திருந்தார். டெஸ்ட் போட்டியில் பௌலர்கள் ஒரே லைன் & லெந்த்தை பிடித்து வீசினால்தான் விக்கெட் விழும் என கூறியிருந்தார். இது உண்மைதான். 6 பந்துகளுக்கு 6 வேரியேஷன் போடுவதற்கு இது டி20 இல்லை. ஆனால், ஆஸி பௌலர்கள் இன்று அப்படித்தான் நினைத்து வீசியிருக்கின்றனர்.
குட் லென்த் என்றால் குட்லென்த் ஃபுல் என்றால் ஃபுல் என ஆணி அடித்தாற் போல் ஒரு லென்த்தை பிடித்து வீசி, பேட்ஸ்மேன்களை தடுமாற செய்வதுதான் ஆஸியின் ஸ்டைல். இதைத்தான் முதல் டெஸ்ட்டிலும் கூட பார்த்திருப்போம். கோலி ஆஸி. பௌலர்கள் பற்றி வியந்து கூறும்போதும் 'அவர்கள் எப்போதும் ஒரு ப்ளானை வைத்துக்கொண்டு அதற்கிணங்க சீராக வீசுவார்கள்' என்றுதான் கூறுவார். ஆனால், இன்று அப்படி எந்த ப்ளானும் ஆஸியிடம் இருந்ததாக தெரியவில்லை. பிட்ச் மேப்பை எடுத்து பார்த்தால் எல்லா பக்கமும் பந்துகளாகவே தெரிகிறது. ஒரு குறிப்பிட்ட லென்த்தை பிடித்து விக்கெட் விழும் வரை அவர்கள் வீசவே இல்லை. ஷாட் பாலை ஒரு ஆயுதமாக பயன்படுத்த முற்பட்டனர். ஆனால், அது பெரிதாக கைகொடுக்கவே இல்லை.
ஒரு எடுத்துக்காட்டுக்கு புதிய பந்தை எடுத்த பிறகு, பார்த்தோமானால் ஃபுல் லென்தில் 13 சதவீதம், குட் லென்த்தில் 37 சதவீதம், ஷாட்டாக, 48 டெலிவரிகளையும் வீசியிருந்தனர். இப்படி எல்லா பக்கமும் பந்தை தூக்கி போட்டதை நம்மால் முதல் டெஸ்ட்டில் பார்க்கவே முடிந்திருக்காது. இதுதான் ஆஸி பௌலர்கள் தடுமாறிய விஷயம். ஒருவேளை லெஃப்ட் ஹேண்ட் ரைட் ஹேண்ட் காம்பினேஷன் ஆஸியை தடுமாறச் செய்திருக்கலாம்.
ஆஸி பௌலர்களின் தடுமாற்றத்தினால் நியுபாலை சிறப்பாகவே எதிர்கொண்டார் ரஹானே. இரண்டு கேட்ச் ட்ராப்புகளும் ரஹானேவுக்கு அதிர்ஷ்டமாக அமைந்தது. கம்மின்ஸ் வீசிய 88–வது ஓவரில் பவுண்டரி அடித்து சதம் போட்டார் ரஹானே. கோலி இல்லாத நிலையில் கேப்டனாக பொறுப்பேற்று முக்கிய பேட்ஸ்மேன்கள் சொதப்பியபோது பொறுப்பாக ஆடி சதமடித்திருக்கிறார்.
புஜாரா, கோலி, ரஹானே என மூன்று ரோல்களில் ரஹானே ஆடியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். முதல் இரண்டு செஷனில் புஜாரா எவ்வளவு பொறுமையாக ஆடுவாரோ அதே பொறுமையுடன் ஆடி புஜாராவின் ரோலை சிறப்பாக செய்தவர். மூன்றாவது செஷனில் செட்டில் ஆன பிறகு வழக்கமாக ரஹானே ஆடும் இன்னிங்ஸை ஆடினார். நியுபாலை எடுத்த பிறகு கோலி மாதிரி கவுன்ட்ர் அட்டாக்கில் மிரட்ட தொடங்கினார். ரஹானே இன்று காட்டிய மூன்று முகமுமே இந்திய அணியை வலுவான நிலைக்கு கூட்டி சென்றது.
இன்றைய நாள் முடிவில் இந்திய அணி 277 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்திருக்கிறது. ரஹானே-ஜடேஜா கூட்டணி 100 ரன்களை கடந்தது. 82 ரன்கள் முன்னிலையில் இருக்கும் இந்திய அணி, நாளை இன்னும் ஒரு 100 ரன்களை கூடுதலாக எடுத்துவிட்டால் சிறப்பாக இருக்கும்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?