Sports
கேப்டனாக அசத்திய ரஹானே... ஆஸியை 195 ரன்னில் சுருட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்! #IndvAus
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவடைந்திருக்கிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியிருக்கும் நிலையில், முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா 36-1 என்ற நிலையில் இருக்கும்போது முதல் நாள் முடிவடைந்திருக்கிறது.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இது கொஞ்சம் ஆச்சர்யமான முடிவுதான். பிட்ச், 2018 சீரிஸ் போல ஃப்ளாட்டாக பேட்டிங்குக்கு உதவும் வகையில் இல்லாமல், பௌலிங்குக்கு சாதகமாக இருக்கும் என ஆஸியினர் போட்டிக்கு முன்பே பேட்டி கொடுத்திருந்தனர். ஆனால், டாஸை வென்றவுடன் பேட்டிங்கை தேர்வு செய்துவிட்டனர். 'Good toss to lose' என கமெண்ட்ரி பாக்ஸிலும் குரல்கள் ஒலித்தன.
இது கொஞ்ச நேரத்திலேயே நிரூபணமானது. இந்தியா சார்பில் முதல் ஸ்பெல்லை பும்ராவும் உமேஷ் யாதவும் வீசினர். பந்தில் நல்ல மூவ்மெண்ட் இருக்கவே செய்து. ஸ்விங்கும் ஆனது. அரைகுறை ஃபார்மில் இருந்த ஜோ பர்ன்ஸ், பும்ரா 5–வது ஓவரில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்துக்கு பேட்டை விட்டு எட்ஜ் ஆகி பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறியவுடன் லபுஷேன் நம்பர் 3–யில் வந்தார். ஏற்கனவே க்ரீஸில் இருந்த மேத்யூ வேட் இன்கம்மிங் டெலிவரிகளை சமாளிக்க முடியாமல் உடம்பில் வாங்கிக்கொண்டே இருந்தார். கடந்த போட்டியிலும் இதே மாதிரிதான் தடுமாறினார். எனவே, அதே லைன் & லென்த்தை பிடித்துக்கொண்டு பும்ராவும் உமேஷ் யாதவும் வீசிக்கொண்டிருந்தனர்.
இந்தப் போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகும் சிராஜ், ஒரு ரெட் பால் ஸ்பெஷலிஸ்ட். ஆனால், ரஹானே அவரை முதல் 10 ஓவர்களில் பயன்படுத்தவே இல்லை. அடுத்த ஸ்பெல்லில் பயன்படுத்துவார் என நினைக்கையில் சர்ப்ரைஸாக 11–வது ஓவரிலேயே அஸ்வினை அறிமுகப்படுத்தினார் ரஹானே. இந்த சர்ப்ரைஸ் மூவ் ஒரு விக்கெட்டையும் பெற்றுக் கொடுத்தது. 13 வது ஓவரில் ஒரு பவுண்ட்ரி அடித்த பிறகு அடுத்த பந்தை மேத்யூ வேட் தூக்கியடிக்க முயற்சிக்க, ஜடேஜா அட்டகாசமாக கேட்ச் பிடித்து வேடை வெளியேற்றியிருப்பார். அடுத்து ஸ்மித் உள்ளே வந்தார்.
இந்த சீரிஸில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கூட்டணி இவர்களுடையதுதான். முதல் போட்டியில் பெரிதாக இவர்கள் சோபிக்காததால் இந்த போட்டியில் இவர்கள் மேல் எதிர்பார்ப்பு கூடியிருந்ததது. ஸ்மித் மெல்பர்னில் மட்டும் 113 ஆவரேஜ் வைத்திருக்கிறார். ஆனால், அஸ்வினிடன் இதெல்லாம் செல்லுபடியாகவில்லை. 15–வது ஓவரில், மிடில் ஸ்டம்ப் லைனில் பிட்ச் ஆகி நன்றாக திரும்பி சென்ற ஆஃப் ப்ரேக்கரை தொட்டு லெக் ஸ்லிப்பில் நின்ற புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் ஸ்மித். ஆஸியின் முதுகெலும்பாக பார்க்கப்பட்ட ஸ்மித் டக் அவுட். இந்த சீரிஸில் இதுவரை அஸ்வின் வீசிய 4 பந்துகளை எதிர்கொண்டுள்ள ஸ்மித் ஒரு ரன் கூட அடிக்காமல் இரண்டு முறை அவுட் ஆகியுள்ளார்.
இதன்பிறகு, பும்ரா இன்னொரு ஸ்பெல்லை வீச, ஜடேஜா அறிமுகமாகி ஒன்றிரண்டு ஓவர்களை வீச அப்படியே முடிந்தது முதல் செஷன். முதல் செஷன் முடிவில் ஆஸ்திரேலியா 27 ஓவர்களில் 65-3 என்ற நிலையில் இருந்தது. சந்தேகமே வேண்டாம், இந்த செஷன் முழுவதும் இந்தியாதான் ஆதிக்கம் செலுத்தியது.
முதல் செஷன் முழுவதும் சிராஜை அறிமுகப்படுத்தாமலே இருந்த ரஹானே, இரண்டாவது செஷனில் முதல் ஓவரையே சிராஜிடம் கொடுத்தார். பந்தை வாங்கியவுடனே பேட்ஸ்மேன்களை தடுமாறச் செய்யும் வகையில் அவரால் வீச முடியவில்லை. கொஞ்சம் நேரம் எடுத்துக்கொண்டார். இன்னொரு எண்டில் அஸ்வினை கட் செய்துவிட்டு, பும்ரா மற்றும் உமேஷ் யாதவை மாறி மாறி கொண்டு வந்து சிராஜுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கிக்கொண்டே இருந்தார். ஹெட் மற்றும் லபுஷேன் கூட்டணியும் கொஞ்சம் விடாப்பிடியாக விக்கெட் விடாமல் அதே நேரத்தில் ஒரு சில அருமையான பவுண்ட்ரிகளையும் அடித்து செட் ஆக தொடங்கியது.
இந்நிலையில்தான் 42–வது ஓவரில் ரவுண்ட் தி விக்கெட்டில் வந்து பும்ரா வீசிய ஒரு இன்கம்மிங் டெலிவரியில் எட்ஜ் ஆகி கல்லியில் நின்ற ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து 38 ரன்னில் வெளியேறிவிடுவார் டிராவிஸ் ஹெட். அடுத்ததாக உள்ளே வந்த கேமரூன் க்ரீன் விக்கெட்டை மட்டும் விட்டு விடவே கூடாது என்பதற்காக ரொம்ப பொறுமையாக ஆடினார். லபுஷேன் பொறுமையாகத்தான் ஆடுவார் ஆனால் திடீர் திடீரென பவுண்ட்ரிக்காக ரிஸ்க் எடுத்து ஷாட் ஆடுவார் என ப்ரிவியூவில் குறிப்பிட்டிருந்தோம். அதேமாதிரியே, 50 வது ஓவரில் கொஞ்சம் ஃபுல்லாக வீசப்பட்ட ஒரு பந்தை ஃபைன் லெக்கில் ஃபிளிக் ஆட முயன்று லெக் கல்லி ஃபீல்டரான கில்லிடம் கேட்ச்சை கொடுத்து நடையைக்கட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் சிராஜின் முதல் விக்கெட்டாக லபுஷேன் 48 ரன்னில் வெளியேறியவுடனே இந்தியாவின் கை முழுமையாக ஓங்க தொடங்கிவிட்டது. இரண்டாவது செஷன் முடிவில் ஆஸி அணி 136-5 என்ற நிலையில் இருந்தது.
அடுத்த செஷன் தொடங்கிய சில ஓவர்களிலேயே அஸ்வின் பந்துவீச்சில் டிம் பெய்னுக்கு ஒரு ரன் அவுட்டை தேர்ட்ய் அம்பயர் நாட் அவுட் என குறிப்பிட்டுவிடுவார். அம்பயருக்கு எந்த ஆங்கிளில் இருந்து பேட் க்ரீஸுக்குள் இருப்பது போல தெரிந்தது என்பது நமக்கு தெரியவில்லை. இது அவுட் கொடுக்கப்பட வேண்டிய ஒன்றுதான். ஆனாலும், இது ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. கொஞ்ச நேரத்திலேயே டிம் பெய்ன் அஸ்வினின் பந்திலேயே லெக் ஸ்லிப்பான புஜாராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறிவிட்டார். கேமரூன் க்ரீனும் சிராஜின் ஒரு இன்ஸ்விங்கரில் lbw ஆகி வெளியேறிவிட, அதற்கு பின் முழுவதும் டெய்ல் எண்டர்கள்தான். அவர்களும் பெரிய ஷாட்டுக்கு முயன்று சீக்கிரமே வெளியேறிவிட்டனர். இதிலும் பும்ரா இரண்டு விக்கெட்டையும் ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். ஆஸி 72.3 ஓவர்களில் 195 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகி முதல் இன்னிங்ஸை முடித்துக்கொண்டது. அதிகபட்சமாக, லபுஷேன் 48 ரன்களையும் ஹெட் 38 ரன்களையும் எடுத்திருந்தனர்.
இந்திய பௌலர்கள் சிறப்பாகத்தான் செயல்படுவார்கள் என்பது முன்பே தெரிந்தாலும், வழக்கமான கேப்டன் கோலி அவர்களை வழிநடத்த இல்லாததால் கொஞ்சம் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது. ஆனால், ரஹானே தனக்கு கொடுக்கப்பட்ட கேப்டன் பொறுப்பை மிகச்சிறந்த முறையில் செயல்படுத்திக்காட்டிவிட்டார். அவரின் சில முடிவுகள் நிஜமாகவே ஆஸியின் ட்ரெஸ்ஸிங் ரூமை சர்ப்ரைஸ் செய்து தடுமாற செய்தது.
முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் கோலி, அஸ்வினை முதல் செஷன் முழுவதும் பயன்படுத்தாமல் இரண்டாவது செஷனில்தான் பயன்படுத்தியிருப்பார். ஆனால், இன்றைக்கு ரஹானே, அஸ்வினை ரொம்ப சீக்கிரமாகவே முதல் செஷனின் 11 வது ஓவரிலேயே அறிமுகப்படுத்திவிட்டார். ஆஸியினர் இதை நிச்சயமாக எதிர்பார்க்கவில்லை. மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை ரஹானே பயன்படுத்திவிட்டு அஸ்வினை அடுத்த ஆப்ஷனாகத்தான் பயன்படுத்துவார் என்பது ஆஸியின் கணிப்பாக இருந்திருக்கும். அதை பொய்யாக்கி அஸ்வினை சீக்கிரமே கொண்டு வந்து பந்தில் சைனிங் இருக்கும்போதே வீச வைத்து அடுத்தடுத்த விக்கெட்டுகளையும் வீழ்த்திவிட்டார். அஸ்வினுக்கு பழசாகாத சைனிங் குறையாத பந்தில் பந்து நன்றாக திரும்பவும் செய்தது. எதிர்பார்த்ததை விட கொஞ்சம் எக்ஸ்ட்ரா பவுன்ஸும் கிடைத்தது. ஸ்டம்ப்ஸ்க்கு பின்னால் அஸ்வினின் பந்துகளை கொஞ்சம் துள்ளி துள்ளி பண்ட் பிடித்ததிலிருந்து இதை கணிக்க முடிந்தது.
இரண்டாவது செஷனில் சிராஜ் முதலில் தடுமாறினாலும் அவரை விட்டுவிடாமல், பும்ரா உமேஷ் யாதவ் கையில் பந்தை கொடுத்து பேட்ஸ்மேன்களுக்கு ப்ரஷர் ஏத்திவிட்டு, 9 ஓவர்களாக பவுண்டரி இல்லாத நிலையை ஏற்படுத்தி திடீரென சின்ன ப்ரேக்குக்கு பிறகு சிராஜை அறிமுகப்படுத்தி பேட்ஸ்மேனை பவுண்டரிக்கு ஷாட் ஆட வைத்து விக்கெட் எடுக்க வைத்திருந்தார்.
முதல் செஷனிலேயே அஸ்வினின் அறிமுகம், சிராஜின் ஸ்பெல்களை தள்ளிப்போட்டது, இரண்டாவது செஷனில் அஸ்வினுக்கு கொஞ்சம் குறைவாக ஓவர்கள் கொடுத்தது, பும்ரா-உமேஷ் யாதவை கச்சிதமாக தேவைப்பட்ட இடங்களில் பயன்படுத்தியது என ரஹானே இன்றைக்கு எடுத்த அத்தனை முடிவுகளுக்கும் பலன் கிடைத்திருக்கிறது. பந்துவீச்சு ப்ளானுக்கு ஏற்றவாறு ஃபீல்ட் செட்டப்பும் அற்புதமாக இருந்தது. அட்டாக்கிங் ஃபீல்ட் செட்டப்பில் மிரட்டினார்.
ஸ்மித்துக்கு சுற்றி முற்றி வட்டமடித்து ஃபீல்டை வைத்துவிட்டு அஸ்வினை அழைத்து, ஸ்டம்ப் லைனில் வீச வைத்து, ஸ்மித்தை கட்டாயப்படுத்தி ஆட வைத்து, லெக் ஸ்லிப்பில் கேட்ச் கொடுக்க வைத்தது மாஸ்டர் பிளான். லபுஷேனுக்கு வைக்கப்பட்ட லெக் கல்லி, ஹெட்டுக்கு செகண்ட் ஸ்லிப்பை தூக்கிவிட்டு வைக்கப்பட்ட கல்லி என இவற்றையெல்லாம் மிகத்துல்லியமாக ப்ளான் செய்து அரங்கேற்றியிருந்தார் ரஹானே.
ஆஸி முதல் இன்னிங்ஸை 195 ரன்னில் முடிக்க இந்திய அணி கடைசி சில ஓவர்களில் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. மயங்க் அகர்வாலும், சுப்மன் கில்லும் ஓப்பனர்களாக களமிறங்கினர். இந்தியாவின் ஓப்பனிங் தடுமாற்றம் இங்கேயும் தொடர்ந்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் கடைசிப் பந்திலேயே மயங்க் அகர்வால் lbw ஆகி வெளியேறினார். குட்லெந்தில் கொஞ்சம் இன்ஸ்விங் ஆகி வந்த இந்த பந்தை பேடில் வாங்கி டக் அவுட் ஆனார் மயங்க்.
மயங்கின் பேக் லிஃப்ட் ரொம்பவே உயரமாக இருக்கிறது. 90* அளவுக்கு செங்குத்தாக வானத்தை பார்த்தபடி நிற்கிறது பேட். இதுதான் மயங்க்குக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இதனால் அவரால் பந்துகளுக்கு சரியான டைமிங்கில் ரியாக்ட் செய்ய முடியவில்லை. அவுட் ஆன இந்த பந்தில் கூட காலில் பந்து பட்டவுடன் ரொம்பவே லேட் ஆகத்தான் அவருடைய பேட் கீழே வந்திருக்கும். முதல் போட்டியிலும் மயங்க் அகர்வாலுக்கு இதுதான் பிரச்னையாயிருந்தது என்பதை போன மேட்ச்சின் ரிவியூவிலும் குறிப்பிட்டிருந்தோம்.
இன்று ரிக்கி பாண்டிங்கும் கூட இந்த டெக்னிக் பிரச்னை குறித்து கமென்ட்ரியில் பேசியிருக்கிறார். மயங்க் அகர்வால் இதை சீக்கிரமே சரி செய்தாக வேண்டும். இன்னொரு எண்டில் அறிமுக வீரரான கில் அற்புதமாக ஸ்டார்க்கையும் கம்மின்ஸையும் எதிர்கொண்டார். தொடர்ந்து பவுண்டரிகளையும் அடித்தார். இன்றைய நாள் முடிவில் இந்திய அணி 36-1 என்ற நிலையில் இருக்கிறது. கில் 28 ரன்களிலும் புஜாரா 7 ரன்களிலும் நாட் அவுட்டாக உள்ளனர்.
நாளை முழுவதும் தாக்குப்பிடித்து ஒரு 300 ரன்களை சேர்த்துவிட்டால் இந்திய அணி இந்த டெஸ்டை தங்களுக்கு சாதகமாக்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?