Sports
இலங்கையை வீழ்த்திய இந்திய அணி - ரோகித், தோனி ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாள்!
2017ம் ஆண்டு நடந்த IPL தொடரை ரோகித் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி வென்றது. வெல்ல வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருந்த மும்பை அணி, இறுதியில் ஜான்சன் வீசிய துல்லியமான கடைசி ஓவர் காரணமாக, வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றியது. கேப்டன் ரோகித்தும் மூன்று IPL கோப்பைகளைக் கைப்பற்றிய கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார்.
வழக்கம் போல, பும்ரா, மலிங்கா போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் இருப்பதால்தான் ரோஹித் வெற்றி பெறுகிறார் என்ற பேச்சு எழத் தொடங்கியது. IPL அணியை வழி நடத்துவது வேறு, இந்திய அணியை வழி நடத்துவது வேறு என்றும், சிலர் ரோஹித்தை தாக்கினர். இதற்கெல்லாம் பதில் சொல்ல ரோஹித் காத்திருக்கையில், இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் அவரை கேப்டனாக அறிவித்தது BCCI. கூடவே சிராஜ், உனத்கட், வாஷிங்டன் சுந்தர் போன்ற அனுபவம் குறைந்த வீரர்களும் அணியில் சேர்க்கப்பட்டு பொறுப்பு ரோஹித்திடம் ஒப்படைக்கப்பட்டது.
2017ம் ஆண்டு IPL தொடரில் பெரிதும் கேள்விக்குள்ளானது ரோஹித்தின் பேட்டிங். IPL முடிந்த பிறகும் அது தொடர்ந்தது. IPL முடிந்த பின் ஆடிய 6 போட்டிகளில் ஒரு ஆட்டத்தில் மட்டும் 80 ரன்கள் எடுத்தார். மற்ற எல்லா போட்டிகளிலும் 20 ரன்களுக்கு குறைவான ஸ்கோர்தான். இலங்கை தொடரிலும் அந்த மோசமான ஃபார்ம் தொடர்ந்தது. முதல் போட்டியில் வெறும் 17 ரன்கள்தான் எடுத்தார் ரோஹித். ஆனால், சஹால் மூலமாக அந்தப் போட்டியை வென்றது இந்தியா. இரண்டாம் போட்டி நெருங்க, தொடரை வெல்ல வேண்டும், தனது பேட்டிங் ஃபார்மை நிரூபிக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்தார் ரோஹித்.
இரண்டாவது ஆட்டம் 2017–ம் ஆண்டு இதே நாளில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் பெரேராவோ, அதன் பின்வரும் ருத்ர தாண்டவத்தை அறியாமல் நாங்கள் ஃபீல்டிங் செய்யப் போகிறோம் என்று கூறிச் சென்றார். இந்திய கேப்டன் ரோஹித் பேசுகையில், "டாஸ் பெரிதும் முக்கியமில்லை. களத்தில் எப்படி ஆடுகிறோம் என்பது தான் முக்கியம். முதலில் பேட்டிங் செய்வது மகிழ்ச்சிதான்" என்று கூறிச் சென்று பேட்டுடன் களத்திற்கு வந்தார்.
மேத்யூஸ் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் பவுண்டரி அடித்து, தனது ஆட்டத்தை துவங்கினார் ரோஹித். ப்ரதீப் வீசிய முதல் ஓவர் முதல் பந்தில் தனது சிக்சர் கணக்கையும் திறந்தார். 11 பந்துகளில் 17 என ஓரளவு பொறுமையாக ஆடிய ரோஹித், தனஞ்சயா வீசிய ஆறாவது ஓவரில் 15 ரன்கள் எடுத்து அதிரடி மோடுக்கு மாறினார். அதன் பின்பு ஐந்து ஓவர்களுக்கு அவர் தொட்டதெல்லாம் பொன் ஆனது. பெரேரா, குணரத்னே என எல்லாரது பந்துவீச்சையும் பாரபட்சம் பார்க்காது பிரித்து மேய்ந்தார். குறிப்பாக குணரத்னே ஓவரில் இரண்டு பவுண்டரி இரண்டு சிக்சர்களுடன் 20 ரன்கள் மற்றும் பெரேரா ஓவரில் தொடர்ந்து நான்கு சிக்சர்களுடன் 24 ரன்கள் என வெளுத்து வாங்கி விட்டார்.
மேத்யூஸ் பந்தில் ஒரு பவுண்டரி அடித்து 35 பந்துகளிலேயே சதம் கடந்தார். இதன் மூலம், டேவிட் மில்லருடன் டி20 போட்டிகளில் அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையை பகிர்ந்து கொண்டார். மீண்டும் சமீரா ஓவரில் முதல் 3 பந்துகளிலேயே 16 ரன்கள் எடுக்க 'டி20 போட்டிகளில் இரட்டை சதம் அடிக்கப் போகிறார் ரோஹித்!' என பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அதே சமீரா வீசிய ஸ்லோயர் பந்தில் அவுட் ஆனார் ரோஹித். 43 பந்துகளில் 118 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இந்த ஆட்டத்தில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த இன்னொரு விஷயமும் உண்டு. தோனி மிகவும் பின் வரிசையில் களம் இறக்கப்படுகிறார். அதனால்தான் அவரால் சரிவர ஆட முடியவில்லை என்ற பேச்சு அப்போது இருந்தது. அதற்கு பதிலளிக்கும் வண்ணமாக தான் அவுட் ஆனதும் ட்ரெஸிங் ரூம் பக்கம் விக்கெட் கீப்பிங் செய்வது போல சைகை காட்டி, 'தோனியை இறங்கச் சொல்லுங்கள்' என்று கூறுவார் ரோஹித். அன்று ரோஹித் செய்த அந்த சமிக்ஞை பல்வேறு தோனி ரசிகர்களின் ஃபேஸ்புக் பக்கத்தை அலங்கரித்தது.
இலங்கை அணி ஆடும்போது தரங்காவும் குசல் பெரேராவும் எவ்வளவோ முயன்றும் பின் வரிசை வீரர்கள் சோபிக்காததால் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்திலும் சஹால் நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தினார். அடுத்த ஆட்டத்தில் சஹால், பும்ரா போன்றோரை எல்லாம் உட்கார வைத்து விட்டு சிராஜ், உனத்கட் போன்ற வீரர்களை வைத்து மூன்றாவது டி20 போட்டியையும் வென்று காட்டுவார் கேப்டன் ரோஹித்.
கேப்டன்சி, பேட்டிங் என இரண்டிலும் சிறந்து விளங்கி இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை ரோஹித் தலைமையில் இந்திய அணி கைப்பற்றிய தினம் இன்று.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!