Sports
“IND VS AUS - அணித்தேர்வு.. ஃபீல்டிங் சொதப்பல்” : இந்திய அணி மோசமாக தோற்றதற்கான 4 காரணங்கள்!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்தியா கடுமையான போட்டியளிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பயங்கர சொதப்பலான செகண்ட் இன்னிங்ஸ் மூலம் இரண்டரை நாளிலேயே தோல்வியை தழுவியுள்ளது. வெறும் 36 ரன்களில் ஆட்டமிழந்து டெஸ்ட் வரலாற்றில் நான்காவது குறைவான ஸ்கோரைப் பதிவுசெய்துள்ளது. இந்திய அணி இவ்வளவு மோசமாக தோற்றதற்கான சில காரணங்கள் என்ன. அலசுவோம்.
அணித்தேர்வு
போட்டி தொடங்குவதற்கு ஒருநாள் முன்பாகவே இந்திய அணி ப்ளேயிங் லெவனை வெளியிட்டிருந்தது. அதில், ப்ரித்வி ஷா, ரித்திமான் சஹா இருவரும் இடம்பெற்றிருந்தது அப்போதே விவாதங்களைக் கிளப்பியது. இந்த தேர்வுதான் இந்திய அணிக்கு இந்த டெஸ்ட்டில் ஏற்பட்ட முதல் பின்னடைவு. ஓப்பனர்களை இறக்குவதற்கு கோலிக்கு நான்கு ஆப்சன்கள் இருந்தது. எல்லாரும் எதிர்பார்த்தது மயங்க் அகர்வால் - சுப்மன் கில் கூட்டணியைத்தான். ஆனால், கோலியும் ரவிசாஸ்திரியும் வித்தியாசமாக யோசித்து ப்ரித்வியை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.
அவர் கடைசியாக விளையாடிய நியுசிலாந்து சீரிஸில் சிறப்பாகச் செயல்படவில்லை...ஐ.பி.எல் தொடரிலும் ஃபார்மில் இல்லை.. பயிற்சி ஆட்டத்திலும் ஃபார்மில் இல்லை... வழக்கமாக இப்படிப்பட்ட ரெக்கார்ட் உடைய வீரர்களுக்கு கோலி வாய்ப்பே கொடுக்கமாட்டார். ஆனால், இந்த முறை என்னவானதோ ப்ரித்விக்கு வாய்ப்பைக் கொடுத்துத் தவறு செய்துவிட்டார். ஒரு 10 ரன் பார்ட்னர்ஷிப்பை கூட அவரால் அமைக்க முடியவில்லை. இரண்டு இன்னிங்ஸிலும் ஒரே மாதிரியாக ரொம்பவே சுலபமாக அவுட் ஆகினார். கோலி இவரிடம் எதிர்பார்த்து ஒரு வேகமான தொடக்கத்தை மட்டும்தான். ஆனால், அதை கூட அவரால் செய்து கொடுக்கமுடியவில்லை.
அதேபோல், விக்கெட் கீப்பராக சஹா மீது நமக்குப் பெரிய விமர்சனமில்லை. ஆனால், பன்ட் ஒரு வெறித்தன செஞ்சுரி போட்டு நல்ல ஃபார்மில் இருக்கும் போது அவருக்கு பதிலாக சஹா ஏன் என்பதுதான் கேள்வி. மேலும், அணியில் ஒரு இடக்கை பேட்ஸ்மேன் கூட இல்லை. பன்ட் இருந்திருந்தால் இந்தக் குறையும் தீர்ந்திருக்கும். ரீப்ளே காண்பித்தது போல ஒரே மாதிரியாக ஒரே லைன் & லென்த்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் அவுட் ஆவதையும் தவிர்த்திருக்கலாம். இந்த இரண்டு தவறான தேர்வுகளுமே இந்திய அணி தோல்வி பெற மிக முக்கிய காரணங்களாக அமைந்துவிட்டது.
ஃபீல்டிங்
லாக்டவுணுக்கு பிறகு இந்திய அணி வீரர்களுக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை. ஃபீல்டிங்கில் அவ்வளவு சொதப்பு சொதப்புகிறார்கள். ஒருநாள் மற்றும் டி20 தொடர்களிலேயே நிறைய கேட்ச்களை ட்ராப் செய்திருந்தார்கள். டிராப்களை விட மிஸ் ஃபீல்டுகளெல்லாம் படு கொடுமை. ஜெர்சி மட்டும் ரெட்ரோ இல்லை, ஃபீல்டிங்கும் ரெட்ரோ தான் என கலாய்த்தாலும் சீரியஸாகவே இந்த சொதப்பல்கள் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இந்த டெஸ்ட் போட்டியிலுமே கூட ஏகத்துக்கும் கேட்ச்களை விட்டிருந்தனர்.
லபுஷேனுக்கு மட்டுமே இரண்டு மூன்று கேட்ச் ட்ராப்கள். அவர் 47 ரன்கள்தான் முதல் இன்னிங்ஸில் அடித்திருந்தார். அவர்தான் பெரிய தாக்கம் ஏற்படுத்தவில்லையே என நினைக்கலாம். ஆனால், ஒரு அணி 36 ரன்னில் ஆல் அவுட் ஆகிறது என்றால், 47 என்பது நிஜமாகவே மிகப்பெரிய ரன் தான். லபுஷேனுக்கு மட்டுமில்லை இன்னும் நிறைய வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கிக்கொண்டிருந்தனர் நம் ஃபீல்டர்கள்.
இந்தியா பேட்டிங் பௌலிங்கிற்கு பயிற்சி எடுக்கும் அதே அளவுக்கு ஃபீல்டிங்கிலும் பயிற்சி எடுத்தே ஆக வேண்டும். அதேபோல், ரன் ஓடுவதிலும் இந்திய வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும். கோலியை அவுட் ஆக்க முடியாமல் ஆஸி அணியினர் திணறும் போது தேவையின்றி ஒரு ரன் அவுட்டால் விக்கெட் விழுந்திருக்கும். இந்த மாதிரியான சின்னச்சின்ன விஷயங்களில் கூட இந்திய வீரர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
பேட்டிங் சொதப்பல்
ஓப்பனர்களின் தவறான தேர்வால், ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் என்ற ஒன்றே இந்திய அணிக்கு இல்லாமல் போய்விட்டது. இருந்தாலும் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி கொஞ்சம் சமாளித்துவிட்டது. இவர்களிடமிருந்து ஒரு பெரிய இன்னிங்ஸ் வராமல் இருந்தது ஏமாற்றம்தான் என்றாலும் கொஞ்சம் டீசன்ட்டான ஸ்கோர் கிடைத்ததால் பரவாயில்லை. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஆடிய விதம் எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.
அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒரே மாதிரியாக அவுட் ஆகி கடுப்பேற்றினர். 1974-ல் லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிராக இந்திய அணி 42 ரன்களில் சுருண்டதுதான், இதற்கு முன் இந்தியாவின் மிகக்குறைந்த டெஸ்ட் ஸ்கோர். கிட்டத்தட்ட அரைநூற்றாண்டு சாதனையை முறியடிக்கும் வகையில் இந்திய அணி ஆடியிருக்கிறது. 36 ரன்களில் இன்னிங்ஸை முடித்திருக்கிறார்கள். 11 பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. இரண்டு நாளாகக் கையிலிருந்த ஆட்டத்தை ஒரே ஒரு மணி நேர சொதப்பலான ஆட்டத்தால் கோட்டைவிட்டிருக்கின்றனர்.
மனநிலை
முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்ஸ்மேன்களிடமிருந்த ஒரு பொறுமையான மனநிலை இரண்டாவது இன்னிங்ஸில் இருந்ததாகத் தெரியவில்லை. முதல் இன்னிங்ஸில் பௌலர்களைக் கணித்து அழகாக லீவ் செய்து அட்டகாசமாக பேட்டிங் செய்தனர். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அப்படியே நேர்மாறாக வந்த வேகத்திலேயே பந்துகளை டார்கெட் செய்து அவுட் ஆகி சென்றனர். கோலியின் ஒரு விக்கெட்டே இதற்கு ஒரு சிறந்த உதாரணம். முதல் இன்னிங்ஸில் 180 பந்துகளில் ஒரு கவர் ட்ரைவ் மட்டுமே ஆடியிருந்தார். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் அந்த லெந்தில் வீசப்பட்ட ஒரே பந்துக்கும் கவர் ட்ரைவ் ஆட முற்பட்டு அவுட் ஆகியிருப்பார்.
முதல் இன்னிங்ஸ் ரன் அவுட் போல இதுவும் கோலியே தூக்கி கொடுத்துவிட்டு போன விக்கெட்தான். அவர் அவசரப்படாமல் டெய்ல் எண்டர்களுடன் ஒரு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தால்கூட ஆஸிக்கு கொஞ்சம் தண்ணி காட்டியிருக்கலாம். முதல் இன்னிங்ஸில் கிடைத்த 53 ரன்கள் லீட்தான் இந்தியாவின் அவசர மனநிலைக்கு காரணம். 5 நாள் போட்டியை ஏன் மூன்றே நாளில் முடிக்க வேண்டும் என நினைக்கிறார்கள் என்று புரியவில்லை. கொஞ்சம் பொறுமை காத்திருந்தால் நாளை வரையாவது ஆட்டத்தை இழுத்திருக்க முடியும்.
இந்தியாவின் பௌலிங் மட்டுமே இந்த டெஸ்ட்டை பொறுத்தவரை ஒரே ஆறுதலாக இருந்தது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!