Sports

IND vs AUS: “இந்த முறை டெஸ்ட் தொடரை வெல்வது அவ்வளவு எளிதல்ல” - ஆருடம் கூறும் புஜாரா

ஆரோன் ஃபின்ச் வயிற்றை பந்து பதம் பார்த்ததும், கே.எல்.ராகுல் நலம் விசாரித்துவிட்டு, அவர் வயிற்றில் பஞ்ச் வைக்கிறார். ஃபின்ச்சும் சிரித்துக்கொண்டே ராகுலுக்கு பதில் சொல்கிறார். இப்படி இந்திய வீரர்களும், ஆஸி வீரர்களும் கொஞ்சிக் குலாவும் காட்சிகள், லிமிட்டெட் ஓவர் தொடர்களில் ரொம்பவே பார்க்க முடிந்தது. எல்லாம் ஐ.பி.எல் உபயம் என சிலாகித்தார்கள்.

ஒரு சிலர், டெஸ்ட்லதான் அவங்க உக்கிரமா இருப்பாங்க என்றனர். உண்மைதான், லிமிட்டெட் ஓவர் போட்டிகளை விட டெஸ்ட் போட்டிகளில்தான், ஆஸி வீரர்கள் ஸ்லெட்ஜிங் மூலம் சீண்டிப் பார்ப்பர். கடந்த 2018– 19 சுற்றுப் பயணத்தின்போது, விராட் கோலியையே சீண்டிப் பார்த்தார் ஹேசில்வுட். 'விராட் கோலியின் விக்கெட்டை விட புஜாராவின் விக்கெட்தான் எங்களுக்கு முக்கியம்' என்றார் ஹேசில்வுட்.

இதன்மூலம் புஜாராவைப் புகழ்கிறார் என்று அர்த்தம் இல்லை, கோலியை வெறுப்பேற்றுவதே அவரது நோக்கம். களத்தில் கோலியிடம் ஸ்லெட்ஜிங் செய்தால், அங்கேயே அவர் பதிலடி கொடுத்துவிடுவார் என்பது வேறு விஷயம். ஆனால், இந்த ஸ்லெட்ஜிங் எல்லாம் புஜாராவை கடுகளவும் தொந்தரவு செய்யாது. 'இன்னும் உனக்கு பேட்டிங் செய்வது போர் அடிக்கலையா' என கடந்தமுறை நாதன் லயன், புஜாராவை சீண்டினார். புஜாரா 202 ரன்கள் அடித்த 2017 ராஞ்சி டெஸ்ட் போட்டியின்போது, ஒரு ஆஸ்திரேலியா வீரர், 'நீ இப்ப அவுட்டாகிட்டு போகலைன்னா, வீல்சேர்ஸ் கொண்டு வரச் சொல்லுவோம்' என்றார்.

மற்ற வீரர்களாக இருந்தால், பதிலுக்கு எதாவது சொல்லியிருப்பார்கள். ஆனால், புஜாரா ஜென் துறவி போல நடந்து கொண்டார். பந்தை எதிர்கொண்டதும் நேரடியாக, ஸ்கொயர் லெக் பக்கம் நடந்துவிட்டு, யார் கண்ணையும் பார்க்காமல் சிறிது நேரம் இருந்து விட்டு, மீண்டும் அடுத்த பந்தை எதிர்கொள்ள வந்துவிடுவார். அதனால்தான், அவரால், 1,135 பந்துகளை சந்தித்து 521 ரன்கள் அடிக்க முடிந்தது. இந்தியாவும் 2–1 என டெஸ்ட் தொடரை முதன்முறையாக வென்றது. முதல் டெஸ்ட் முடிந்ததும் விராட் கோலி நாடு திரும்பிவிடும் பட்சத்தில், இந்திய அணியின் முக்கிய வீரராக இருக்கப்போவது புஜாராதான்.

அதனால், அவர் மீது ரொம்பவே நெருக்கடி கொடுக்கப் பார்க்கும் ஆஸி. ஆனால், எந்த விதமான ஸ்லெட்ஜிங்கும் புஜாராவை ஒன்றும் செய்யாது. "என்னைப் பொருத்தவரை ஸ்லெட்ஜிங் என்பது ஓவர்ரேட்டட். பொருத்தமற்றதும் கூட. ஸ்லெட்ஜிங் செய்து பல போட்டிகளை வென்றதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. பல நேரங்களில் நான் களத்தில் இருக்கும்போது, அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றே தெரியாது." என்ற புஜாரா, இந்தத் துறவி மனநிலை எப்படி வந்தது என்பதையும் விளக்கினார். "தியானம், வழிபாடு, யோகா இதெல்லாம் என் வாழ்வின் அங்கம்.

என் ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக இதையெல்லாம் செய்யவில்லை. ஆனால், அது பயனுள்ளதாக இருக்கிறது. என்னை அமைதியாகவும் நேர்மறையாகவும் இருக்கத் தூண்டுகிறது. இளமையிலேயே இந்தப் பழக்கம் வந்தால்தான் உண்டு. வயதாகிவிட்டால் கஷ்டம்" என்றவர், இந்த டெஸ்ட் தொடருக்காக, ரொம்பவே மெனக்கிட்டு வருகிறார். மற்ற வீரர்கள் எல்லாம் ஐ.பி.எல் தொடரில் பங்கேற்ற அனுபவத்துடன் வந்திருக்க, டெஸ்ட் ஸ்பெலிஷ்டான புஜாரா மட்டும், மார்ச் மாதத்துக்குப் பின் 278 நாட்களாக சர்வதேச போட்டிகளில் விளையாடாத அனுபவத்துடன் இருக்கிறார்.

ஆனால், பயிற்சியில் எந்தக் குறையும் வைக்கவில்லை. 'பெளலர்களின் ரத்தத்தை உறிஞ்சி எடுத்துவிடுவார்' என முகமது ஷமி சொன்னதை வைத்தே அவர், இந்த சுற்றுப் பயணத்துக்கு எந்தளவு தயாராகி இருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். "கடந்தமுறையைப் போலவே இந்தமுறையும் என் பெர்ஃபார்மன்ஸை தொடர வேண்டும். ஆனால், நான் கடந்த கால சாதனைகளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவன் அல்ல. இது அற்புதமான தொடர். இதைப் புதிதாக தொடங்க வேண்டும். கடந்தமுறை ஜெயித்துவிட்டோம் என்பதற்காக இந்தமுறையும் எளிதில் வென்றுவிடலாம் என்று அர்த்தம் அல்ல.

அவர்கள் அதற்கு அனுமதிக்க மாட்டார்கள்." என்றவர், இந்தமுறை டெஸ்ட் தொடரை வெல்வது அவ்வளவு எளிதல்ல என்பதையும் புரிந்துவைத்துள்ளார். கடந்தமுறை தொடரை வென்றுவிட்டோம். நானும் ரன் குவித்தேன். அதனால் நெருக்கடி இருக்கும். அவர்கள் என் ஆட்டத்தை நன்கு ஆராய்ந்து வைத்திருப்பர். ஆனால், சர்வதேச கிரிக்கெட்டில் இதையெல்லாம் கடந்துதான் வர வேண்டும். என் பலம் எதுவோ அதில் மட்டும்தான் கவனம் செலுத்துவேன். பந்தை நன்கு கவனித்து, அதற்கு மதிப்பளித்து ஆடினாலே போதும். 300–350 ரன்கள் அடித்தால் கூட போதும், எதிரணியை ஆல் அவுட் செய்யும் அளவுக்கு நம்மிடம் பெளலிங் வலுவாக உள்ளது."

Also Read: IND vs AUS பயிற்சி ஆட்டம்: டெலிவரிகளில் தடுமாறிய நடராஜன்.. மோசமாக அவுட் ஆன மயங்க்.. கோலி கொடுத்த ஐடியா!