Sports
32 ஆண்டுகளில் 64 கிராண்ட் மாஸ்டர்கள்... ஆனாலும், ஒரே உலக சாம்பியன்! #HBDViswanathanAnand
சில நாடுகளில், சில விளையாட்டுகள் எந்தப் புள்ளியில் பிரபலமானது என்று திறம்படக் கூறுவது சிரமமான காரியம். இந்தியாவில் கிரிக்கெட்டை உதாரணமாக எடுத்துக்கொண்டால், ஒருசிலர் 1983-ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்ற தருணம் என்று சொல்வார்கள், இன்னும் சிலர் சச்சினின் வருகை என்று சொல்வார்கள். இப்படி பலரும் பல காரணங்கள் கூறி ஒரு முடிவுக்கு வர முடியாமல் இருக்கும். ஆனால், இந்தியாவில் செஸ் புரட்சி தொடங்கிய புள்ளி எது என்று யாரைக் கேட்டாலும், எந்த ஒரு குழப்பமும் இன்றி அனைவரும் சொல்லும் ஒரே பெயர், விஸ்வநாதன் ஆனந்த்! செல்லமாக அழைத்தால் Vishi. மாஸாக அழைத்தால் ‘Tiger of Madras’. மெட்ராஸுக்கு மட்டுமல்ல செஸ் விளையாட்டின் இந்தியாவின் முகமாக இருக்கும் அந்த ஜாம்பவானின் பிறந்தநாள் இன்று.
இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர், ஐந்து முறை உலக சாம்பியன், ராஜிவ் காந்தி கேல் ரத்னா, பத்ம ஶ்ரீ, பத்ம விபூஷன் என பல சாதனைகளுக்கும், விருதுகளுக்கும் சொந்தக்காரராக இருக்கிறார். ஆனால், இதற்காக மட்டுமா ஆனந்தை கொண்டாட வேண்டும்? நிச்சயம் இல்லை. அந்த சாதனைகளை எல்லாம் தாண்டி அவரை கொண்டாட இரண்டு முக்கியமான காரணங்கள் இருக்கின்றன.
2013 உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி தனது சொந்த ஊரான சென்னையில் நடக்கிறது. 23 வயதேயான Margnus carlsen உடன் மோதுகிறார். அந்த தொடரில் 6.5 - 3.5 என தோல்வியடைகிறார். கார்ல்சனுடன் தோல்வியுற்ற போது, 'ஆனந்த் அவ்வளவுதான்' என அனைத்து பத்திரிகைகளும் எழுதத் தொடங்கின. எல்லா கட்டுரைகளிலும் ஆனந்தின் வயதை காரணம் காட்டி ஒரு வரியாவது இருக்கும். ஆம். ஒரு விளையாட்டு வீரர் 25 வயதில் செய்யும் தவறுகளை, 40 வயதில் செய்தால் இந்த உலகம் பெரும்பாலும் காரணம் காட்டுவது வயதைத்தான். அதன் உள் அர்த்தம் 'ஓய்வு பெற்றுவிடு' என்பதே. அந்தத் தோல்வியிலிருந்து வெளிவர ஆனந்துக்கு பல மாதங்களாயின.
அடுத்த ஆண்டு மீண்டும் உலக சாம்பியன் பட்டத்திற்காக அதே கார்ல்சனுடன் மோதுகிறார். மீண்டும் தோல்வி. மீண்டும் அதே விமர்சனம் – வயது! இப்போது ஆனந்தும் கூட, 'அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் போல' என எண்ணத் தொடங்கிவிட்டார். உலகத்தின் குரல்களுக்கு செவி சாய்க்காமல் கடக்க வேண்டும் என்ற கூற்று வாய் வார்த்தைகளில் எளிதாக இருக்கலாம். ஆனால் செயல்முறையில் மிகவும் கடினம். ஆனந்த் அதைத்தான் எதிர்கொண்டார்.
2013-16 சொல்லிக்கொள்ளும்படி எந்த வெற்றியும் பெறவில்லை. வயதும் 48 ஆனது. செஸ்சில் ராணியின் பலத்திலிருந்து ஒரு சிப்பாயின் பலத்திற்கு ஆனந்த் போனது போல் இருந்தது அந்த காலகட்டம். இருந்தால் என்ன? ஒரு சிப்பாய் மெல்ல நகர்ந்து, எதிர்த்து ஆடுபவரின் கட்டத்திற்கு சென்று எப்போது வேண்டுமானாலும் ராணியாக மாறலாம். ஆம்! ஆனந்துக்கும் அதுவே நடந்தது.
2017-ம் ஆண்டு World Rapid Blitz Championship தொடரை 48 வயதில் வென்று அனைவரையும் ஆச்சர்யத்துக்குள்ளாக்கினார், அவர் உட்பட! அந்த சிப்பாய் மெல்ல நகர்ந்து ராணியாக மாறியது. துவண்டு போயிருந்த ஆனந்துக்கு மீண்டும் தன் தீராக் காதலான செஸ் விளையாட்டை நோக்கி பயணப்பட வைத்தது. ஆனந்தை மட்டுமல்ல நாற்பது வயதை கடந்து தோல்விகளுக்கு காரணம் சொல்ல முடியாமல் , சொன்னாலும் ஏற்க மறுக்கும் சமூகத்தில் சிக்கித் தவிக்கும் பலருக்கும் ஆனந்த் அந்த வயதில் அடைந்த வெற்றி பூஸ்டாக இருந்திருக்கும்.
Life starts at 40 என்று சொல்வார்கள். ஆனால், விளையாட்டை பொறுத்தவரை அது உங்கள் கரியர் முடிவுக்கு வரும் தருணம். இங்கேதான் ஆனந்தின் அந்த வெற்றி முக்கியம் வாய்ந்ததாக மாறுகிறது.
“உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை 80 வயதில் Robert Scrivener வென்றிருக்கிறாரே, இவரை விட அதிகமான வயதில் பலர் வென்றிருக்கிறார்களே?” என நீங்கள் கேட்கலாம். அந்த வயதில் வென்றதால் மட்டும் ஆனந்தை கொண்டாடவில்லை. சச்சினை ஜாம்பவான் என கூறுவதற்கும் விஷியை அப்படி கூறுவதற்கும் அவர்கள் அந்த விளையாட்டில் செய்த சாதனைகளை விட முக்கியமாக பார்க்கப்பட வேண்டியது கால மாற்றத்திற்கு அவர்களை தயார்படுத்திக்கொண்ட விதம்தான்.
“செஸ்சில் இரண்டு பேர் எதிர் எதிரே விளையாடுவது மட்டும்தான் இங்கே மாறாமல் இருக்கிறது. மற்ற அனைத்தும் மாறிவிட்டது” என செஸ் விளையாட்டின் பரிணாம வளர்ச்சி பற்றி ஒரு முறை கூறினார் ஆனந்த். எல்லா விளையாட்டுகளைப் போலவும் சதுரங்கமும் பல மாற்றங்களைக் கடந்து வந்துள்ளது. முக்கியமாக கணினி ஏற்படுத்திய மாற்றம்.
காலப்போக்கில் வரும் மாற்றங்களை புதிய சவால்களாக எதிர்கொள்பவர்களுக்கும், அந்த புதிய மாற்றத்துடனே வளரும் தலைமுறையினருக்கும் வித்தியாசம் இருக்குமல்லவா? அந்த வித்தியாசம்தான் ஆனந்துக்கும் இருந்தது. ஒரு வழிகாட்டி இல்லாமல் செஸ் புத்தகங்களையே வழிகாட்டியாகக் கொண்டு. மனிதர்களோடு விளையாடியே தனது கேமை வளர்த்த அவர், இந்த கணினி புரட்சிக்கும் சீராக தயார்படுத்திக்கொண்டார். தொழில்நுட்பம் ஏற்படுத்தும் மாற்றங்களை ஆரத் தழுவி, அதற்கேற்ப தாமும் சிறந்து விளங்குவது என்பது ஒரு சிலருக்கே சாத்தியப்படும். அந்த ஒரு சிலரில் ஆனந்தும் ஒருவர் என்பதுதான் அவரை கொண்டாட காரணம்.
1988-ல் இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டரானார் ஆனந்த். 32 வருடங்கள் ஓடி 2020-க்கு வந்துவிட்டோம். அந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் 64 புதிய கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகிவிட்டார்கள். ஆனால், விஸ்வநாதன் ஆனந்த் மட்டுமே இந்தியாவைச் சேர்ந்த ஒரே உலக சாம்பியன். ரேங்கிங்கில் அவர்தான் இப்போதும் முன்னோடி. இந்த Stat-களே சொல்லிவிடும் இந்த கணினி புரட்சியின் மாற்றத்திற்கு அவர் தயார் ஆன விதத்தை!
இன்று இந்தியாவைச் சேர்ந்த பல சுட்டிகள் ‘குறைந்த வயதில் கிராண்ட் மாஸ்டர்’ போன்ற சாதனைகளை நிகழ்த்தி வருகின்றனர். பொழுதுபோக்கிற்காக விளையாடிய கேமை இன்று கரியராக எடுக்க பெற்றோர்களே ஊக்கப்படுத்துகின்றனர். இன்றைய இளம் வீரர்கள் அனைவருக்குள்ளும் ஏதோ ஒரு வகையில் ஒரு சிறு துளி ‘ஸ்பார்க்கை’ கொண்டு வந்த பெருமை ஆனந்துக்கே உரிதானது. செஸ் பிரபலமான நாள் தொடங்கி இன்று வரை அதன் அடையாளமாக இருக்கிறார். 35 வருடங்கள் 64 சதுரத்துக்குள் வாழ்க்கையை கடத்தியிருக்கிறார்.
2013 உலகச் சாம்பியன்ஷிப் தோல்வியடைந்தபோது அவரது மனைவி அருணா, “நீங்கள் தோல்வியுற்றாலும் இந்த கோப்பைகள் நான், அகில் (அவரின் குழந்தை), எதுவும் மாறிவிடப்போவதில்லை” என ஆறுதல் கூறினார். அருணா சொன்னதைப்போல் நிச்சயம் எத்தனை காலம் ஆனாலும் நீங்கள் இந்த விளையாட்டிற்கு ஆற்றிய பங்கு மாறவே மாறாது Vishi.
பிறந்தநாள் வாழ்த்துகள் விஸ்வநாதன் ஆனந்த்!
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!