Sports
ஆஸி. மண்ணில் டி20 தொடரை வென்று கேப்டன்சியில் சத்தமே இல்லாமல் இன்னொரு சாதனை படைத்த விராட் கோலி!
ஹர்திக் பாண்டியா, டேனியல் சாம்ஸ் வீசிய கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர்கள் பறக்கவிட்டதும், இந்தியா இரண்டாவது டி20–யில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இதன் மூலம் 2–0 என டி20 தொடரை வென்றது. ஒருநாள் தொடரை இழந்ததற்கு டி20 தொடரை வென்று ஆறுதல் அடைந்தது இந்தியா என்று நினைத்துக்கொண்டிருக்க, கேப்டன்சியில் விராட் கோலி சத்தமில்லாமல் ஒரு சாதனை படைத்திருக்கிறார்.
அதாவது, ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட், ODI, டி20 என மூன்று ஃபார்மட்டிலான தொடர்களையும் வென்ற முதல் கேப்டன் என பெயர்பெற்றுள்ளார். இதற்கு முன், டு ப்ளெஸ்ஸி தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி 2016–17 சம்மரில், ஆஸிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, 2–1 என டெஸ்ட் தொடரை வென்றது. 2018–19 சீசனில் அவரது கேப்டன்சியில் 2–1 என ஒருநாள் தொடரையும் கைப்பற்றியது.
2018–ல் டி 20 போட்டியிலும் தென்னாப்பிரிக்க வெற்றி பெற்றிருக்கிறது. ஆனால், அது ஒரேயொரு டி20 மட்டுமே என்பதால், ஒன்றுக்கு மேற்பட்ட போட்டிகளைக் கொண்ட அனைத்து ஃபார்மட்டிலும் வென்ற முதல் கேப்டன் என பெயர் பெறுகிறார் விராட் கோலி.
அது தவிர, SENA என்று சொல்லக்கூடிய தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில், டி20 தொடரை வென்ற முதல் கேப்டன் என்ற பெருமையும் விராட் கோலியையே சாரும். இதற்கு முன், மகேந்திர சிங் தோனி, இந்த நாடுகளுக்கு இந்திய அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டு தலைமை தாங்கியிருந்தாலும், அவரது கேப்டன்சியில் இங்கிலாந்து மற்றும் நியூஸிலாந்தில் இந்திய அணி டி20 தொடரை வென்றதில்லை.
ஐ.பி.எல் முடிந்தபின், 13 சீசன்களில் ஒரு கோப்பை கூட வெல்லவில்லை. அதனால், தார்மீகப் பொறுப்பேற்று RCB கேப்டன்சியில் இருந்து கோலி விலக வேண்டும். மும்பைக்காக ஐந்து கோப்பைகளை வென்று தந்த ரோஹித் ஷர்மாவை, இந்தியாவை லிமிட்டெட் ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்க வேண்டும் என கெளதம் கம்பீர் உள்ளிட்டவர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
ஆனால், ஒரு மாத இடைவெளியில் தன்னை நிரூபித்து, கேப்டன்சி பகிர்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என சொல்லாமல் சொல்லிவிட்டார். அதுமட்டுமல்ல, இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாஹன் கூட, இந்தியா முதலிரண்டு ஒருநாள் போட்டிகளில் தோற்றதும், இந்தியா இந்தமுறை அனைத்து ஃபார்மட்டிலும் ஒயிட்வாஷ் அடையும் என ட்வீட் பதிவிட்டிருந்தார்.
இந்தியா டி20 தொடரை வென்றதும், இந்திய முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் அந்த ட்வீட்டை மேற்கோள் காட்டி, மைக்கேலை கிண்டல் செய்திருந்தார். ஒருநாள் தொடரை இழந்தாலும், டி 20 தொடரை வென்றது இந்திய வீரர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். ஆனால், முதல் டெஸ்ட் போட்டி முடிந்தபின் விராட் கோலி, மனைவியின் பிரசவத்தை முன்னிட்டு நாடு திரும்புவதால், எஞ்சியுள்ள டெஸ்ட் போட்டிகளில் இந்தியா, ஆஸியை எப்படி சமாளிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனெனில், கடந்த முறை 2–1 டெஸ்ட் தொடரை வென்று, ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி பெயரெடுத்தது மட்டுமல்லாது, பேட்ஸ்மேனாகவும் வேற லெவல் பெர்ஃபார்ம் காட்டியிருப்பார் கோலி. ஐ.பி.எல் போட்டியில் ஃபார்ம் மிஸ் ஆனாலும், ஆஸியில் காலடி எடுத்து வைத்தபின், லிமிட்டெட் ஓவர் போட்டிகளில் ஃபார்மை பிடித்து விட்டார். அதிலும், ஆண்ட்ர டை பந்தில் ஸ்வீப் ஷாட் மூலம் சிக்ஸர் அடித்து மிரட்டுகிறார். அதனால், முதல் டெஸ்ட் முடிந்தபின் கோலியை, இந்தியா ரொம்பவே மிஸ் செய்யும்.
Also Read
-
”இது உங்களின் வெற்றி” : வயநாடு மக்களுக்கு நன்றி சொன்ன பிரியங்கா காந்தி!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டை கைப்பற்றும் இந்தியா கூட்டணி !
-
பெண்களுக்காக Pink Auto திட்டம் : விண்ணப்பிக்க காலம் நீட்டிப்பு... விண்ணப்பிப்பது எப்படி ? - முழு விவரம் !
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!