Sports
நேற்றைய இந்தியா - ஆஸி., T20 ஆட்டத்தை மாற்றியமைத்த இரண்டு தமிழர்கள் : கோலி போட்ட மாஸ்டர் ப்ளான்?!
இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான நேற்றைய போட்டி ரொம்பவே சுவாரஸ்யமாக அமைந்திருந்தது. டாஸ் போடப்படும்போது ஆட்டத்தில் இல்லாத சஹால் இறுதியில் ஆட்டநாயகன் விருதை வென்றிருந்தார். ஃபின்ச், ஸ்மித், மேத்யூ வேட் என இவர் வீழ்த்திய மூன்று விக்கெட்டுகளுமே ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
ஆனால், இதுமட்டுமே வெற்றிக்கு காரணமாக அமையவில்லை. தமிழக வீரர்களான நடராஜனும், வாஷிங்டன் சுந்தரும் கூட சஹால் அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர். ஆனால், இந்த இரண்டு தமிழர்களும் ஆட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தை விட கோலியின் மனதில் மிகபெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
முதலில் வருண் சக்ரவர்த்திதான் டி20 அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். நடராஜன் ரிசர்வ் ப்ளேயராக மட்டுமே அழைத்து செல்லப்பட்டிருந்தார். திடீரென வருண் காயமடைய டி20 அணிக்குள் நடராஜனுக்கு இடம் கிடைத்தது. சைனி கொஞ்சம் காயம் காரணமாக அவதிப்பட ஒருநாள் போட்டிகளுக்கான அணியிலும் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி தோற்க, கடைசி போட்டியில் பெஞ்ச்சில் இருந்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தார் கோலி. அந்த போட்டியில் ப்ளேயிங் லெவனில் இடம்பிடித்த நடராஜன் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை எடுத்தார்.
குறிப்பாக, லபுஷேனின் விக்கெட். இந்த தொடரில் இதுவரை பவர்ப்ளேயில் இந்தியா சார்பில் எடுக்கப்பட்ட ஒரே ஒரு விக்கெட் நடராஜன் எடுத்ததுதான். இதிலேயே கோலியை செமயாக இம்ப்ரஷ் செய்துவிட்டார் நடராஜன். இறுதி ஓவர்களில் ரன்கள் கொடுத்த போதும் நடராஜனுக்கு தொடர்ந்து ஊக்கமளித்துக்கொண்டே இருந்தார். கோலியின் மனதில் நடராஜன் தடம் பதித்துவிட்டார் என்பதை இதிலிருந்து உணர்ந்து கொள்ள முடிந்தது.
இதன் விளைவாக நேற்று நடைபெற்ற இந்த தொடரின் முதல் டி20 போட்டியிலேயே நடராஜனுக்கு வாய்ப்புக்கொடுத்தார் கோலி. பும்ரா போன்ற சீனியர் இருக்கும் போது, அவரை பெஞ்ச்சில் உட்கார வைத்துவிட்டு நடராஜனை கோலி டிக் அடித்ததிலிருந்து அவர் மீது கோலி எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம்.
சஹால், கோலியின் எவ்வளவு பெரிய விருப்பமான வீரர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், நேற்றைய போட்டியில் சஹாலா, வாஷியா? என வரும்போது வாஷிங்டன் சுந்தரைத்தான் டிக் அடித்தார் கோலி. கடந்த மாதம் நடந்து முடிந்த ஐ.பி.எல் சீசனில் வாஷிங்டன் சுந்தர் அவ்வளவு தூரம் கோலியை கவர்ந்துவிட்டார் என்பதுதான் உண்மை.
அதற்கு முன்பான சீசன்களில் வாஷியை எங்கே பயன்படுத்துவது என தெரியாமல் அவரை வீணடித்திருப்பார் கோலி. ஆனால், இந்த சீசனில் அவரை சரியாக பவர்ப்ளேயில் பயன்படுத்தி மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பார். பெங்களூரு அணி ப்ளே ஆஃப் வரை வந்ததற்கு வாஷியும் மிகமுக்கிய காரணமாக அமைந்தார். இதனால்தான், கோலி சஹாலை விட வாஷியை நம்பி அணியில் சேர்த்துக்கொண்டார்.
இந்த இரண்டு தமிழக வீரர்களின் மீதும் கோலி வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. நடராஜன் 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். வாஷிங்டன் சுந்தர் 4 ஓவர்கள் வீசி வெறும் 16 ரன்கள் மட்டுமே கொடுத்து மிரட்டிவிட்டார். ஓவருக்கு எட்டே ரன்கள் தேவைப்படும் டார்கெட்டை டிஃபண்ட் செய்யும் போது 4 ஓவர்கள் வீசி ஓவருக்கு 4 ரன்கள் மட்டுமே கொடுப்பது என்பது விக்கெட்டுகள் எடுப்பதை விட மேலான பங்களிப்பு.
தீபக் சஹார் வீசிய முதல் ஓவரில் 14 ரன்கள் செல்ல அடுத்து வாஷி வீசிய 2 வது ஓவரில் வெறும் 2 ரன்கள்தான் சென்றது. சரியாக குட்லென்த்தை பிடித்துக்கொண்டு கட்டுக்கோப்பாக வீசினார். பவர்ப்ளேயில் வாஷி 2 ஓவர்களும் நடராஜன் 1 ஓவரையும் வீசியிருந்தனர். இந்த மூன்று ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே சென்றிருந்தது. மீதமுள்ள 3 ஓவர்களில் 36 ரன்கள் சென்றிருந்தது.
இனிமேல் நடராஜன் + வாஷி இருவரும் வீசப்போகும் 5 ஓவர்களில் பெரிதாக ரன் அடிக்க முடியாது. ரிஸ்க் எடுத்து விக்கெட்டும் விடக்கூடாது. எனவே மற்ற பௌலர்களை டார்கெட் செய்வோம் என்ற திட்டத்துக்கு ஃபின்ச்சும், ஆர்சி ஷாட்டும் பவர்ப்ளே முடிவிலேயே வந்துவிட்டனர். நடராஜனும் வாஷியும் உருவாக்கிய நெருக்கடியில்தான் 7–வது ஓவரை வீசிய தீபக் சஹார் ஓவரை மீண்டும் அட்டாக் செய்ய முயன்றனர். இந்த ஓவரில் இரண்டு கேட்ச் ட்ராப்கள் ஆனது. அடுத்த ஓவர் சஹால் உள்ளே வந்தார். சஹாலையும் அட்டாக் செய்ய முயல, இந்த முறை ஃபின்ச்சை லாங் ஆஃபில் அட்டகாசமாக கேட்ச் செய்தார் ஹர்திக் பாண்ட்யா. இதன் நீட்சியாக அடுத்த சஹால் ஓவரிலேயே ஸ்மித் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
முக்கிய விக்கெட்டுகள் எல்லாம் விழ செட்டில் ஆகி நின்ற ஆர்சி ஷார்ட் ஹென்றிக்ஸ், மேத்யூ வேட் ஆகியோர் கொஞ்சம் ரிஸ்க் எடுக்காமல் நின்று பார்ட்னர்ஷிப்பை உருவாக்க தொடங்கினர். ஆர்சி ஷார்ட்டை 15–வது ஓவரில் நடராஜன் வெளியேற்றிவிடுவார். இந்த ஓவரில் 9 ரன்களை மட்டுமே கொடுத்தார் நடராஜன். அதிலும் 5 ரன்கள் ஓவர் த்ரோவில் வந்தது. அடுத்து 16–வது ஓவரை வாஷி வீச அந்த ஓவரில் வெறும் 3 ரன்கள் மட்டுமே கிடைக்க, பவுண்ட்ரி ப்ரஷரில் அடுத்து சஹால் வீசிய 17–வது ஓவரில் ஸ்லாக் ஸ்வீப் ஆடி கேட்ச் கொடுத்து வெளியேறினார் மேத்யூ வேட்.
சஹால் எடுத்த ஒவ்வொரு விக்கெட்டிலுமே நடராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தரின் பங்கு பெரிதாகவே இருந்தது. நம்மை பொறுத்தவரை மூவருக்குமே மேன் ஆஃப் தி மேட்ச் விருது சென்றிருக்க வேண்டும். ஆனால், அதைவிட பெரிதாக, 'ஒயிட்பால் கிரிக்கெட்டில் நடராஜன் எங்களுக்கு கிடைத்திருக்கும் சொத்து' என கோலி கூறியிருக்கிறார்.
கோலி இந்த இரண்டு தமிழக வீரர்களையும் வெகுவாக நம்புகிறார். அவர்களும் கோலியின் நம்பிக்கைக்கு உரித்தானவர்களாகவே இருக்கின்றனர். நிச்சயமாக இவர்கள் இருவருக்கும் அடுத்த வருடம் நடக்கவுள்ள உலகக் கோப்பை டி20 அணியில் இடமிருக்கும். ப்ளேயிங் லெவனிலும் பெரும்பாலான போட்டிகளில் இருப்பார்கள் என்பதை இந்த தொடர் நிரூபித்திருக்கிறது. கோலி இதுவரை ஐ.சி.சி ட்ராஃபியை வென்றதே இல்லை. அடுத்த வருடம் கோலியின் தலைமையில் இந்திய அணி முதல்முதலாக உலகக்கோப்பையை கையிலேந்தும் பட்சத்தில் அதில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நடராஜனின் பங்கு அளப்பரியதாக இருக்கும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!