Sports
நிறவெறியும், இட ஒதுக்கீடும் : தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணியில் தொடரும் பாகுபாடு!
சில நாட்களுக்கு முன்பு நாடு முழுக்க 'black lives matter' என்ற கருப்பின மக்களுக்கான ஆதரவு குரல் ஒலிக்கத் துவங்கியது. பல முன்னணி நட்சத்திரங்கள் இனம் மற்றும் நிறம் ரீதியாக தாங்கள் எதிர்கொண்ட ஒடுக்குமுறைகளை வெளிப்படுத்தினர். விளையாட்டு துறையிலும் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மைக்கேல் ஹோல்டிங் போன்றோர் தங்கள் ஆதரவை வழங்கி வந்த நேரத்தில், தற்போதைய தென் ஆப்ரிக்க பெளலர் லுங்கி எங்கிடி black lives matter இயக்கத்திற்காக ஆதரவாக குரல் எழுப்பினார். ஆனால் அதை சக தென் ஆப்ரிக்க வீரர்களான பேட் சைக்மாக்ஸ், டிப்பெனார் போன்றவர்கள் எதிர்த்தனர்.
உலகம் முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துணை நிற்கும்போது சைக்மாக்ஸ் மற்றும் டிப்பெனார் அதற்கு அரசியல் சாயம் பூசினர். நம் ஊர் அரசியல்வாதிகள் போலவே, 'இது எதிர்க்கட்சிகளின் சதி' என்றனர். காரணம் என்ன? குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும் என்ற பழமொழி ஒன்று உண்டு. தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வரலாறே இதுபோன்ற குற்றக் குப்பைகள் நிறைந்த வரலாறுதான். அபார்தெய்ட் கொள்கை காலத்தில் தான் இந்த இனவெறி தலைவிரித்து ஆடுகிறது என்றால் இந்த நவீன யுகத்திலும் இனவெறியை பிடித்துக் கொண்டு நிற்கிறது தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்ட். பொத்தாம் பொதுவாக, அணியில் இருக்கும் இட ஒதுக்கீடு கொள்கைகள்தான் சகோ, அந்த அணியின் ஒருமைப்பாட்டை குறைக்கிறது என்று நீங்கள் நினைத்தால் உங்களுக்கான கட்டுரைதான் இது.
தென் ஆப்ரிக்கா அணியில் சில காலமாக அந்த நாட்டின் பூர்வகுடிகளான கருப்பின மக்களுக்கு இட ஒதுக்கீடு உண்டு. அணியில் குறைந்தது இரண்டு கருப்பின வீரர்கள் இடம்பெற வேண்டும் என்ற விதி உண்டு. அதுவும் இல்லாது அதிகபட்சமாக ஐந்து வெள்ளைத் தோல் கொண்ட வீரர்கள்தான் அணியில் இடம் பெற முடியும் என்ற விதியும் உண்டு. இவ்வளவு உரிமைகளை கொடுத்துமா தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் இனவெறி தலை விரித்து ஆடுகிறது என்று கேட்டால் ஆம் என்பதுதான் கசப்பான பதில்.
அணியில் தற்போது இருக்கும் இட ஒதுக்கீடு என்பது, காலம்காலமாக புறக்கணிக்கப்பட்ட கருப்பின மக்களிடத்தில் இந்த சமூகம் கேட்கும் பாவ மன்னிப்பு என்று சொல்வதில் எந்த தவறுமில்லை. தென் ஆப்ரிக்க நாட்டில் வெறும் 13 சதவீத மக்கள்தான் வெள்ளை இனத்தவர்கள். ஆனால், இதுவரை தென் ஆப்ரிக்க அணிக்காக கிரிக்கெட் ஆடிய 335 வீரர்களில் 225 வீரர்கள் வெள்ளை நிறத்தவர்கள்தான். ஆனால், அந்த நாட்டில் 75 சதவீதத்திற்கும் மேலாக குடியிருக்கும் கருப்பின மக்களில் இதுவரை வெறும் 38 வீரர்கள்தான் கிரிக்கெட் ஆடியுள்ளார்கள். எந்த ஒரு கறுப்பின வீரரும் இதுவரை தென் ஆப்ரிக்கா அணியை வழிநடத்தியது இல்லை. இதுவரை அவர்கள் ஆடிய 439 டெஸ்ட் போட்டிகளில் வெறும் 16 ஆட்டங்களில்தான் வெள்ளைத் தோல் இல்லாத வீரர்கள் தென் ஆப்ரிக்க அணியை வழி நடத்தியுள்ளார்கள்.
ஆக தென் ஆப்ரிக்க நாட்டைச் சேர்ந்த கருப்பின மக்கள் தேசிய அணியில் இடம் பிடிப்பதே ஏதோ நிலவை எட்டிப் பிடிப்பது போல இருக்கும் காலகட்டத்தில், இட ஒதுக்கீடு என்பது மிகவும் முக்கியம். ஆனால் இட ஒதுக்கீடு மட்டும் போதுமா என்றால் அதற்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இட ஒதுக்கீடு இருந்தும் என்ன பிரச்னைகள் அங்கு நிலவுகிறது என்றால் அந்நாட்டின் கருப்பின மக்கள் புறக்கணிப்புக்குக்கு உள்ளாகிறார்கள்.
தென் ஆப்ரிக்க நாட்டுக்கு கிரிக்கெட் ஆடிய முதல் கறுப்பின வீரரரான மக்காயா நிட்னி இப்படி கூறுகிறார். "நான் தனியாகவே இருப்பேன்... என் கதவை தட்டி வா சாப்பிட போகலாம் என்று கூறுவதற்கு யாரும் இருக்கமாட்டார்கள். என் கண் முன்னே அடுத்த நாளுக்கான திட்டங்களை வகுத்தாலும் எதிலும் என்னை சேர்த்துக்கொள்ள மாட்டார்கள். உணவருந்தும் போது என்னருகில் வந்து யாரும் அமர மாட்டார்கள். ஒரே நாட்டுக்கு ஆடி, ஒரு தேசிய கீதத்தை பாடினாலும் நான் மட்டும் தனியாகவே இருந்துள்ளேன். இவர்களுடன் சேர்ந்து பேருந்தில் செல்வதற்கு பதிலாக நடந்து செல்வதே மேல் என்று பலமுறை ஓடியே தங்குமிடத்திற்கு வந்துள்ளேன்" என தன்னுடைய கடந்த கால வேதனைகளை பட்டியலிடுகிறார் நிட்னி.
நிட்னி மட்டுமல்ல கலப்பினத்தவரான அஷ்வெல் ப்ரின்ஸ் கூட சில மாதங்கள் முன்பு ட்விட்டரில் "ஒரே அணியாக இருந்தாலும் எங்களுக்குள் எந்தவித ஒற்றுமையும் இருந்தது இல்லை" என்று பகிரங்கமாக அறிவித்தார். கிரிக்கெட் போர்டும் இதை எல்லாம் கண்டுகொள்வதாக இல்லை. ஆனால், முன்னாள் வீரர் ஜான்ட்டி ரோட்ஸ் சற்றும் தயங்காது "நான் போதுமான ஆட்டங்களில் சரியாக ஆடாவிட்டாலும் தென் ஆப்ரிக்க அணி என்னை தேர்வு செய்தது. காரணம் நான் வெறும் 13 சதவீதம் இருக்கும் வெள்ளை இனத்தவர்களிடம் மட்டும்தான் போட்டியிட்டேன். ஒருவேளை மொத்த தென் ஆப்ரிக்க வீரர்களிடமும் போட்டியிட்டிருந்தால் கண்டிப்பாக நான் களத்திற்குள் தாவித்தாவி ஃபீல்டிங் செய்து கொண்டிருந்திருக்க மாட்டேன்" என்றார்.
இதெல்லாம் பழைய காலம் என்று சமாளிப்பவர்களுக்கு மற்றொன்றைக் கூற விரும்புகிறேன். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஸ்குவாடில் இடம் பெற்றிருந்தார் கருப்பினத்தவரான காயா ஜோண்டோ. டுமினி காயமுற்ற நிலையில் இந்தியாவுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் இவர்தான் ஆடுவார் என்று இருந்தபோது திடீரென்று டீன் எல்கர் வரவழைக்கப்பட்டு ஆட வைக்கப்பட்டார். பின்னாளில் ஜோண்டோ அணியில் இருந்தால் நான் அணியை வழிநடத்த மாட்டேன் என்று டி வில்லியர்ஸ் கூறியதாக சில செய்திகள் கசிந்தன.
இட ஒதுக்கீடு கொண்டு வந்தும் இவ்வளவு கடினமாக நடத்தப்படும் அந்நாட்டுக்கு சொந்தக்காரர்களான கருப்பின மக்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை என்றானால் அந்த மக்களுக்கு கிரிக்கெட் என்பது ஒரு கனவாகவே போய்விடும். இந்த இட ஒதுக்கீடு காரணமாகத்தான் திறமையான வெள்ளைத் தோல் வீரர்கள் எல்லாம் கவுண்ட்டி விளையாட இங்கிலாந்து சென்று விடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே என்று கேட்டால், தார்மீக அடிப்படையில் பார்க்கவேண்டிய குற்றச்சாட்டு இது.
ஒரு வெள்ளைத் தோல் கொண்ட வீரரால் தென் ஆப்ரிக்காவை விட்டு இங்கிலாந்து சென்று கிரிக்கெட் ஆட முடியும். கைல் அபாட்டும், மார்னே மார்க்கலும் சர்வசாதாரணமாக இங்கிலாந்தில் ஆடுவது போல ரபாடாவும் நிகிடியும் ஆடிவிட முடியாது. இங்கிலாந்தைச் சார்ந்த மில்லர் எனும் வேகப்பந்து வீச்சாளர் தன்னுடைய மகன் கிரிக்கெட்டில் ஆர்வம் இருந்தும் அதை வெளிக்காட்டாத காரணம், இங்கிலாந்தில் உள்ள இனவெறிதான் என்று குறிப்பிட்டுள்ளார். முன்னாள் இங்கிலாந்து தொடக்க வீரர் கார்பெரி கூட, 'கறுப்பினத்தவராக இங்கிலாந்தில் கிரிக்கெட் ஆடுவது சாதாரணமானது இல்லை' என்று கூறுகிறார். இப்படிப்பட்ட நிலையில் எப்படி தென் ஆப்ரிக்க நாட்டு கறுப்பினத்தவர்கள் அங்கு போய் ஆட முடியும்? அவ்வளவு பெரிய மைக்கேல் ஹோல்டிங் கவுண்ட்டி கிரிக்கெட் ஆடும்போதே 'அவரை குரங்கு' என குறிப்பிடுவதுபோல, "மரத்திற்கு திரும்பி போ" என்று சொல்வார்களாம். நிலமை இப்படியிருக்க தென் ஆப்ரிக்க வீரர்களுக்கு அங்கு நல்ல சூழல் நிலவும் என்பதற்கு என்ன நிச்சயம்?
இந்த இட ஒதுக்கீடு கொள்கையால்தான் அணி தோற்கிறது... தோற்றுதான் போகட்டுமே. வெற்றி, தோல்வி வரும், போகும். அது நிலையல்ல. ஆனால் இந்த இட ஒதுக்கீடு கொள்கை மூலமாக காலங்காலமாக அடக்குமுறைக்கு உள்ளானவர்கள் கிரிக்கெட் பேட்டை பிடிக்க போகிறார்கள். உள்ளே நடக்கும் இவ்வளவு விஷயங்களைப் பற்றி எதுவுமே அறியாமல் ரபாடாவும் டூப்ளெசிஸும் கட்டி அணைத்தவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து, அவர்கள் ஒற்றுமையாகத் தான் இருக்கிறார்கள் என்று சொல்பவர்களுக்கு இறுதியாக ஒன்று சொல்லிக் கொள்கிறேன். தமிழகத்தில் இருந்து நடராஜன் இந்திய அணிக்கு சென்று விட்டதால் தமிழக அணி தேர்வில் பாரபட்சம் இல்லை என்று சொல்லி விட முடியாது. இதே கதைதான் அங்கும்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!