Sports
“Never Ever Give up” : அதுவரையிலான கடும் விமர்சனங்களுக்கு ஒரே ஓவரில் பதில் சொன்ன ராகுல் தெவேதியா!
‘இந்த உலகமே உன்ன எதிர்த்தாலும்… நீ தோத்துட்ட தோத்துட்டனு உன் முன்ன நின்னு அலறுனாலும்… நீயா ஒத்துக்குற வரைக்கும் உன்ன யாராலயும் ஜெயிக்க முடியாது… Never Ever Give up!!’ இப்படியொரு மாஸ் காட்சியைத்தான் நேற்றிரவு நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் Rahul Tewatia.
ஐ.பி.எல் வரலாற்றில் மிகப்பெரிய சேஸிங்கை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளது ராஜஸ்தான். சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித் இருவரும் அதிரடியாக அரைசதம் அடித்தனர். பஞ்சாபின் இன்னிங்ஸில் மயங்க் அகர்வாலும்-ராகுலும் ஒரு வெறித்தனமான பார்ட்னர்ஷிப்பை அமைத்திருந்தனர். ஆனால், இவர்களையெல்லாம் தாண்டி நேற்றிரவு ஒட்டு மொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் Rahul Tewatia.
ஆரம்ப காலகட்டத்தில் சொதப்பிய பல வீரர்கள் தங்கள் கரியரின் பிற்பகுதியில் கம்பேக் கொடுத்திருக்கிறார்கள். டெஸ்ட் போட்டியில் கூட முதல் இன்னிங்ஸில் சொதப்பி இரண்டாவது இன்னிங்ஸில் அட்டகாசமான கம்பேக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், ஒரே டி20 போட்டியின் ஒரே இன்னிங்ஸில், சில நிமிட இடைவெளியில் இப்படியொரு கம்பேக்கை யாரும் இதுவரை கொடுத்திருக்கமாட்டார்கள்.
10 வது ஓவரில் ஸ்மித் அவுட் ஆகி வெளியேறிவுடன் Rahul Tewatia உள்ளே வந்தார். பேட்டிங் ஆர்டரில் அவரை மேலே இறக்கியதுமே ராபின் உத்தப்பா இருக்கும்போது இவரை ஏன் நம்பர் 4-ல் இறக்க வேண்டும் என கேள்வி எழுந்தது. முருகன் அஷ்வின் – ரவி பிஷ்னோய் என இரண்டு லெக் ஸ்பின்னர்கள் மிடில் ஓவர்களில் வீசி கொண்டிருந்ததால் Tewatia முன்னே அனுப்பப்பட்டிருக்கலாம்.
எந்த காரணத்திற்காக அவர் முன்னே அனுப்பப்பட்டாரோ அதை அவரால் சிறப்பாகச் செயல்படுத்த முடியவில்லை. ரவி பிஷ்னோய் வீசிய 9 பந்துகளை சந்தித்த ராகுல் 6 பந்துகளை டாட் ஆக்கினார். டாட் கூட பரவாயில்லை, ஆனால் அவரால் எந்த பந்தையும் தொடக்கூட முடியவில்லை. ஒருகட்டத்தில் இவர் டாட் ஆடுவதை பார்த்துக் கடுப்பான சஞ்சு சாம்சன், தோனி ஸ்டைலில் சிங்கிள் எடுக்காமல் தவிர்த்து ஸ்ட்ரைக்கை தக்க வைத்துக்கொண்டார்.
இந்த நேரத்தில் சமூகவலைதளங்களில் தெவேதியா மீது அப்படியொரு வசைபாடல். ரசிகர்கள், விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் என எல்லாருமே அவரை வறுத்தெடுத்தனர். உச்சகட்டமாக ‘ரிட்டையரிங் அவுட் என ஒரு ஆப்ஷன் வைத்து, தடுமாறும் பேட்ஸ்மேன்களை வெளியே அழைத்துவிட்டு வேறு வீரரை உள்ளே அனுப்பும் முறை கிரிக்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்’ என ட்வீட்டியிருந்தார் ஆகாஷ் சோப்ரா. ராஜஸ்தான் தோல்வியடைந்தால் ஒட்டுமொத்த பழியையும் தூக்கி தெவேதியாவின் தலைமீது கட்டுவதற்குத் தயாராக இருந்தது கிரிக்கெட் உலகம். இல்லை இல்லை கட்டியே விட்டது.
எல்லாமே முடிந்தது என நினைக்கும்போது நடக்க தொடங்கியது அந்த மேஜிக். டி20 கிரிக்கெட்டில் ஒரு பந்து, ஒரு ஓவர் எல்லாவற்றையும் மாற்றிவிடும் என்பது நேற்று மீண்டும் நிரூபிக்கப்பட்டது. காதல் கொண்டேன் படத்தில் சாக்பீஸ் கரையோடு சென்று போர்டில் கணக்கு போட்ட தனுஷ் மாதிரி இவ்வளவு நேரமாக ட்ரோல் என்ற பெயரில் தனது மீது வாரியிறைக்கப்பட்ட அத்தனை சேற்றுக்கரையோடும் காட்ரெலின் அந்த ஓவரை எதிர்கொண்டார் Tewatia. 6,6,6,6,0,6 அவ்வளவுதான். தனுஷை எப்படி அந்த ப்ரொஃபசரும் மாணவர்களும் வாய் பிளந்து பார்த்தார்களோ அப்படித்தான் நேற்று தெவேதியாவையும் மொத்த கிரிக்கெட் உலகமும் மிரண்டு போய் பார்த்தது.
லெக் ஸ்பின்னரை பேட்டில் மீட் பண்ண முடியாமல் 19 பந்துகளில் 8 ரன் எடுத்த தெவேதியாதான், காட்ரெல் மாதிரியான ஒரு முரட்டு பௌலரை எங்கும் நகராமல் நின்ற இடத்தில் நின்று கிரவுண்டை சுற்றி சிக்சர் அடித்தார். கடைசி 5 ஓவர்களில் 84 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் காட்ரெல் ஓவரில் இவர் அடித்த 5 சிக்சர்கள்தான் ராஜஸ்தானுக்கு கேம் சேஞ்சிங் மொமண்டாக அமைந்தது. டி20 கிரிக்கெட்டிலேயே இப்படியொரு ரோலர் கோஸ்டர் பெர்ஃபார்மென்ஸை இதுவரை யாரும் பார்த்திருக்க முடியாது.
‘பெவிலியனிலிருந்து எல்லாரும் கோபமாக பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு தெரியும் என்னால் பெரிய ஷாட் ஆட முடியும் என்று. எனக்கு என் மீது நம்பிக்கையிருந்தது. It’s a matter of one six. அதன்பிறகு என்னால் எப்படியும் அடித்துவிட முடியும் என எனக்கு தெரியும்’ இவ்வளவு நம்பிக்கையாக பேசும் ஒரு வீரரைத்தான் நேற்று ஒரு அரை மணி நேரத்தில் மொத்த கிரிக்கெட் உலகமும் சேர்ந்து வில்லனாக்க முயற்சி செய்துக்கொண்டிருந்தது.
ஒரு படத்தை முழுமையாக பார்த்து முழுமையாக புரிந்து விமர்சிப்பதை விட்டு ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு ரிவ்யூ கொடுப்பது போல தெவேதியா சந்தித்த ஒவ்வொரு பந்துக்கும் ஒரு விமர்சனத்தைக் கூறி அவர் மீது வெறுப்பை அள்ளி வீசிக்கொண்டிருந்தனர். ஒரு பந்து எல்லாவற்றையும் மாற்றிவிடும் எனக்கூறும் விமர்சகர்கள் தெவேதியாவுக்கு மட்டும் கடைசி வரை அந்த ஒரு பந்து கிடைத்துவிடாது என எப்படி முடிவெடுத்தார்கள் எனத் தெரியவில்லை. அந்த ‘ரிட்டையரிங் அவுட்’ விமர்சனமெல்லாம் சகித்துக்கொள்ள முடியாதது.
என் மீது நம்பிக்கையிருக்கிறது… ‘it’s a matter of one six’ என்கிறார் Tewatia. ஒரு பேச்சுக்கு நேற்றைய போட்டியில் அவருக்கு அந்த காட்ரெல் ஓவர் சிக்காமல் அந்த சிக்சர்கள் கிடைக்காமல் போயிருந்தால் என்னவாயிருக்கும்? சமூகவலைதள விமர்சனங்களே அவரின் வாய்ப்புகளை மொத்தமாக முடக்கியிருக்கும். Potential உடைய தன்னால் முடியும் என நம்பிக்கை உடைய ஒரு இளம் வீரரின் கரியர் மொத்தமாக முடிந்துபோகக் கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
நேற்றையப் போட்டிக்கு பிறகு, “சத்தியமாக இனிமேல் என் வாழ்நாளில் நான் எந்த கிரிக்கெட் வீரரையும், அணியையும் குறைத்து மதிப்பிடமாட்டேன்” என கெவின் பீட்டர்சன் கூறியிருப்பார். பீட்டர்சனின் இந்த உணர்தல் என்பது சமூகவலைதளங்களில் வீரியமாக விமர்சனங்களை வீசிக்கொண்டிருக்கும் அனைவருக்குமே உண்டாக வேண்டும். Everything has it’s own limits. விமர்சனங்களுக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை தெவேதியாவின் நேற்றைய பெர்ஃபார்மென்ஸ் சாட்டையடியாக உணர்த்தியிருக்கிறது. வெல்டன் தெவேதியா!!!
Also Read
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?