Sports
'இதற்குப் பெயர் தலைமை அல்ல!’ - தோனியை சாடும் கம்பீர்
ராஜஸ்தான் நிர்ணயித்த 216 ரன்களை சேஸ் செய்த சி.எஸ்.கே, 200 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இமாலய இலக்கை சேஸ் செய்யும்போது, மேட்ச்சை ஃபினிஷ் செய்வதில் வல்லவரான தோனி, முன்கூட்டியே இறங்காமல், 7-வது பேட்ஸ்மேனாக இறங்கியது விமர்சிக்கப்படுகிறது. தோனி 14-வது ஓவரில் களமிறங்கியபோது சென்னையின் வெற்றிக்கு 38 பந்துகளில் 103 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது எதிர்முனையில் இருந்த ஃபாப் டுப்ளெஸ்ஸி 18 பந்துகளில் 17 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதன்பின் டு ப்ளெஸ்ஸி சிக்ஸர்கள் பறக்கவிட்டார் என்றாலும், அதுவே டூ லேட். தோனி வந்தபிறகுதான் டு ப்ளெஸ்ஸியே அடிக்க ஆரம்பித்தார் எனச் சொல்கிறார்கள். ஒருவேளை தோனி முன்கூட்டியே வந்திருந்தால் டு ப்ளெஸ்ஸியும் முன்கூட்டியே அடிக்க ஆரம்பித்திருப்பார் இல்லையா? என்ற கேள்வியும் எழுகிறது.
சென்னை கடைசி ஓவரில் 3 சிக்ஸர்கள் அடித்தார், ஸ்ட்ரைக் ரேட் 170-க்கு மேல் வைத்திருந்தார் என தோனிக்கு ஆதரவாக பேசினாலும், கெளதம் கம்பீர் வெளிப்படையாக தோனியின் முடிவை காட்டமாக விமர்சித்துள்ளார்.
"ஆச்சர்யமாக இருந்தது. தோனி 7-வது இடத்திலா? ருதுராஜ் கெய்க்வாட், சாம் கரனை தனக்கு முன்கூட்டியே இறக்கிவிட்டது, எந்த வகையிலும் சரியாகப்படவில்லை. ஒரு தலைவன் அணியை முன்னின்று நடத்த வேண்டும். ஆனால், 7-வது இறங்கியதை முன்னன்றி வழிநடத்துவதாக எடுத்துக்கொள்ள முடியாது. 217 ரன்களை சேஸ் செய்யும்போது, 7-வது இடத்தில் இறங்கி ஒரு பயனும் இல்லை. ஏற்கெனவே மேட்ச் முடிந்துவிட்டது. டு ப்ளெஸ்ஸிதான் தனி ஆளாக போராடினார்." என்ற கெளதம் கம்பீர், கடைசி ஓவரில் தோனி அடித்த அந்த 3 சிக்ஸர்கள் குறித்து பேசுகையில், "நீங்கள் அந்த சிக்ஸர்களைப் பற்றி பேசலாம். என்னைப் பொருத்தவரையில் அதனால் ஒரு பயனும் இல்லை. அது பெர்சனல் ரன்கள்’’ என்றார்.
தோனி லோயர் ஆர்டரில் இறங்கியது குறித்து, மேட்ச் முடிந்த பின் கேட்டபோது, "நான் நீண்ட நாட்களாக பேட் செய்யவில்லை. 14 நாட்கள் குவாரன்டைனில் இருந்ததும் சாதகமாக இல்லை. கொஞ்சம் கொஞ்சமாக செட்டாக நினைக்கிறேன். அதே நேரத்தில் சாம் கரன், ஜடேஜா போன்றவர்களை டாப் ஆர்டரில் இறக்கி வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ளவும் நினைத்தோம்" என்றார் தோனி.
சென்னை பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃபிளமிங்கும், தோனியின் கருத்தை அப்படியே பிரஸ் மீட்டில் எதிரொலித்தார். தோனி களமிறங்கியது குறித்த கேள்விக்கு, 'ஒவ்வொரு ஆண்டும் இந்தக் கேள்வி எழுகிறது. அவர் சரியான நேரத்தில் அதாவது 12-வது ஓவரிலேயே (ஆனால், 14-வது ஓவரில்தான்) இறங்கிவிட்டார். நீண்ட நாட்களாக கிரிக்கெட ஆடவில்லை என்பதால், தன் மீதான எதிர்பார்பார்ப்பை பூர்த்தி செய்ய கொஞ்சம் நேரம் ஆகும். ஆனால், கடைசி ஓவரில் சிறப்பாகவே பேட் செய்தார். டு ப்ளெஸ்ஸி பொறுப்பை எடுத்துக்கொண்டார். கிட்டத்தட்ட வெற்றியை நெருங்கிவிட்டோம். அதனால், பேட்டிங் பற்றி பெரிதாக கவலைப்படத் தேவையில்லை’’ என்றார்.
இதையும் காம்பீர் விமர்சித்துள்ளார். "வேறு யாராவது ஒரு கேப்டன் (அவர் பேட்ஸ்மேனாகவும் இருக்கும் பட்சத்தில்), இப்படி இறங்கியிருந்தால், அவரை காய்ச்சி எடுத்திருப்பார்கள். தோனி என்பதால் பேசாமல் இருக்கிறார்கள். சுரேஷ் ரெய்னா அணியில் இல்லை. அப்படிப்பட்ட சூழலில் சாம் கரன், கெய்க்வாட், டு ப்ளெஸ்ஸி, கேதர் ஜாதவ், முரளி விஜய் இவர்கள் எல்லாம் உங்களை (தோனி) விட சிறந்தவர்கள் என நம்பவைக்க நினைக்கிறீர்களா?
முன்கூட்டியே இறங்கி ஆட்டமிழந்திருந்தாலும் பரவாயில்லை. தலைவனாக முன்னின்றி வழி நடத்தியது, இளம் வீரர்களுக்கு உற்சாகம் அளித்திருக்கும். கடைசி ஓவரில் அடித்ததை, நான்காவது அல்லது ஐந்தாவது இறங்கி, டு ப்ளெஸ்ஸி உடன் சேர்ந்து அடித்திருந்தால், கேம் மாறி இருக்கும். ஆனால், அப்படியொரு மனநிலை இல்லாததால் ஆட்டம் கை நழுவிவிட்டது. முதல் ஆறு ஓவர் முடிந்தபோதே, சிஎஸ்கே மனம் தளர்ந்துவிட்டது. சேஸிங்கில் எந்த இடத்திலும் அவர்கள் ஆட்டத்தில் இல்லை. நீங்கள் டு ப்ளெஸ்ஸி ஆட்டத்தைப் பற்றி பேசலாம். அவரும் ஆரம்பத்தில் தடுமாறினார். ஒட்டுமொத்தத்தில் இது தவறான கணிப்பு; சிறந்த கேப்டன்சியும் அல்ல. தோனியிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கும் தலைமை இதுவல்ல!’’ என்றார் கம்பீர்.
நன்றி: Gully Sports
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?