Sports
IPL2020: ‘மாவீரன்’ ஸ்டாய்னிஸ் ‘வேங்கை மவன்’ அகர்வால் ‘ரகிட ரகிட’ ரபாடா.. சூப்பர் ஓவர் வெற்றி! DC vs KXIP
மூன்று பந்துகளில் ஒரு ரன் தேவை. கைவசம் நான்கு விக்கெட்டுகள் உள்ளன.
19.4 : டாட். 19.5 : விக்கெட். 19.6 : விக்கெட்.
ஆட்டம் டை ஆனது. “நீ வருவனு தெரியும். ஆனா, இவ்வளவு சீக்கிரம் வருவனு நினைக்கல!” என இந்த ஐ.பி.எல்-லின் முதல் சூப்பர் ஓவர் இரண்டாவது போட்டியிலேயே வந்தது.
“You are never out of the Game at any time in a T20”. இது டி20 போட்டிகளைப் பற்றி பொதுவாக சொல்லப்படும் கூற்று. நூறு சதவீதம் உண்மை என்பதை நேற்றைய டெல்லி Vs பஞ்சாப் மேட்ச் மீண்டும் நிரூபித்துக் காட்டியிருக்கிறது. ஒரு பக்காவான த்ரில்லர் படத்தில் கூட இந்த அளவுக்கு Twists & Turns இருக்குமா என்றால் சந்தேகம்தான். நேற்றைய போட்டியில் கொல்லிமலை ஹேர்பின் பெண்ட் போல மேட்ச் இரு அணி பக்கமும் வளைந்து நெளிந்து சென்று கொண்டிருந்தது. ஞாயிறு அன்று கறி சோறுக்கு பதிலாக உப்புமா சாப்பிடுவது போல் தொடங்கிய ஆட்டம் இறுதியில் ‘சூப்பர் ஓவர்’ வரை சென்று கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தே வைத்துவிட்டது.
டாஸ் வென்று பெளலிங் தேர்வு செய்தார் பஞ்சாப் அணியின் புதிய கேப்டன் கே.எல்.ராகுல். ஷமி தன்னுடைய முதல் ஸ்பெல்லை அசத்தலாக வீசினார். “இப்போதுள்ள பெளலர்களில் ஷமியை போல் சிறப்பாக ஷார்ட் பால் வீசும் பெளலர்கள் எவரும் இல்லை” என கமென்டரி பாக்ஸில் கவாஸ்கர் கூறினார். அதற்கேற்றார்போல், அவர் வீசிய 24 பந்துகளில் 55 சதவீதம் ஷார்ட் பால்கள். ஒரு பந்துகூட ஃபுல் லெந்த்திலோ குட் லெந்திலோ வீசவில்லை. லெந்த் பால், ஷார்ட் பால் இவை இரண்டையுமே ஆயுதமாக கொண்டு பிரித்வி ஷா, ஹெட்மேயர், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய மூன்று பேட்ஸ்மேன்களையும் பெவிலியனுக்கு அனுப்பி சிறப்பான தொடக்கத்தை பஞ்சாப் அணிக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.
டெல்லி அணி 17 ஓவர்களில் 100-6 என மிகவும் தடுமாறிக்கொண்டிருந்தது. அப்போது விஸ்வரூபம் எடுக்கத்தொடங்கினார் Marcus Stoinis. “RCB-ஐ விட்டு போனால் அவன் சிறப்பாக ஆடி பொழச்சிப்பான்பா” என்னும் கூற்றுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டாக ஸ்டாயினிஸ் விளங்கினார். இங்கிலாந்து அணி டெத் பெளலிங் ஸ்பெஷலிஸ்டாக உருவாகிக்கொண்டிருக்கும் கிறிஸ் ஜோர்டனை பொளந்து கட்டி டெல்லி அணிக்கு ஒரு நல்ல ஸ்கோரை எட்ட உதவினார். 21 பந்துகளில் 51 ரன்கள் விளாசி, கடைசி மூன்று ஓவர்களில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்தார். டெல்லி அணி கடைசி மூன்று ஓவர்களில் 57 ரன்கள் எடுத்தது. அதில் 51 ரன்கள் ஸ்டாயினிஸ் எடுத்தது. டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 157 ரன்கள் எடுத்தது.
158 ரன்களை சேஸ் செய்ய களமிறங்கியது கிங்ஸ் லெவன். பொறுமையாக சேஸிங்கை தொடங்கியது ராகுல்- அகர்வால் ஜோடி. நன்றாக ஆடிக்கொண்டிருந்த ராகுலை அற்புதமான இன்ஸ்விங்கர் மூலம் போல்ட்டாக்கினார் மோஹித் ஷர்மா. அப்படியே அடுத்த ஓவரில் அஷ்வின் போட வந்தார். தன்னுடைய முதல் பந்திலேயே கருண் நாயரின் விக்கெட்டை எடுத்தார். 5-வது பந்தில் சூப்பரான கேரம் பால் மூலம் நிக்கோலஸ் பூரண் போல்ட் என மாஸ் காட்டினார் அஷ்வின். நன்றாக பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது பட்டை வந்து அதன் சுவையையே நாசம் செய்வது போல, தன்னுடைய சிறப்பான கம்பேக்கை உலகுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கும்போது எதிர்ப்பாராதவிதமாக தோள் பட்டையில் காயம் ஏற்பட்டு ஆட்டத்தை விட்டு வெளியேறினார்.
பிறகு சர்ஃப்ராஸ் கானும் அவுட்டாக பஞ்சாப் திணறியது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிட்டல்ஸின் ஆட்டமும், இரண்டாவதாக பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் ஆட்டமும் ‘ஆறு வித்தியாசங்களை கண்டுபிடி’ போட்டியை போல ஒரே மாதிரியான டெம்ப்ளேட் கொண்டிருந்தது. டெல்லி அணியின் முதல் இன்னிங்ஸை அப்படியே, ஜெர்சியை மாற்றிக்கொண்டு ரீப்ளே செய்வது போல இருந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாபின் செகண்ட் இன்னிங்ஸ். Stoinis டெல்லிக்கு மாவீரன் என்றால் இங்கே மயாங்க் அகர்வால் போராளி. அங்கே பன்ட் – ஷ்ரேயஸ் 50 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள், இங்கே அகர்வால்- கிருஷ்ணப்பா கெளதம் பஞ்சாப்பை சரிவிலிருந்து மீட்டனர்.
குறிப்பாக அகர்வால் ‘வேங்கை மவன்’ போல ஒத்தையில போராடிக்கொண்டிருந்தார். பெரிய ஸ்க்ரீனில் அகர்வாலின் ஆட்டத்தை ‘Agar “WALL’’ என்று வர்ணித்திருந்தார்கள். அத்தனை பொறுத்தம். எல்லாம் சரியாக கையாண்ட Agarwal கடைசி கட்டத்தில் ஒரு சிறிய தவறு செய்தார். 2 பந்திற்கு ஒரு ரன் இருக்கும்போது பெரும்பாலான வீரர்கள் அந்த உணர்வுகளில் செய்யும் தவறை அகர்வாலும் செய்தார். ஒரு ரன் ஓடி எடுப்பதற்கு பதில் ஸ்லாக் ஷாட் ஆட முற்பட்டு கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதுவும் ஃபுல் டாஸ் பந்தில்! ஒரு நிமிடம் நிதானம் காண்பித்து அந்த ஃபுல்டாஸ் பாலை கிரவுண்ட் ஷாட் மூலமாக அடித்திருந்தால் சிங்கிள் எடுத்திருக்கலாம். பஞ்சாப் அணிக்கு தனி ஆளாய் வெற்றியையும் தேடித்தந்திருக்கலாம். எல்லாம் தவறிவிட்டது.
இப்போது சூப்பர் ஓவர். கடந்த ஆண்டு கொல்கத்தா அணியின் பயில்வான் ரஸ்ஸலை அற்புதமான யார்க்கர் மூலம் மூட்டையை கட்ட விட்ட ரபாடா இந்த முறை பூரணை பெவிலியனுக்கு அனுப்பினார். பஞ்சாப் அணி 2 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி எளிதாக அந்த ஸ்கோரை அடித்தது.
லாங் ஆன், மிட் ஆன் ஃபீல்டர்களை உள்ளே நிற்க வைத்து ஒரு Gamble செய்து ஷ்ரேயாஸ் ஐயர் விக்கெட்டை தூக்கியது, பெளலர்களை சரியாக ரொட்டேட் செய்தது என கே.எல்.ராகுல் தனது முதல் கேப்டன்ஸி மேட்சில் சிறப்பாக செயல்பட்டாலும் சூப்பர் ஓவரில் நல்ல டச்சில் இருந்த அகார்வாலை இறக்காமல் பூரணை இறக்கினார். பூரண் நல்ல அதிரடியான ப்ளேயர்தான். ஆனால் அந்த போட்டியில் யார் ஃபார்மில் இருக்கிறார் என்பதுதான் முக்கியமே தவிர இதற்கு முன்னே நடந்த மேட்ச்களை கணக்கில் கொள்வது சரியாக வராது. டெல்லி அணியும் ஃபீல்டிங்கில் பல கேட்ச்களை கோட்டைவிட்டனர். இப்படி இரண்டு அணிகளும் அடுத்து வரும் போட்டிகளில் சில தவறுகளை தவிர்க்க வேண்டியது அவசியம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!