Sports

‘எனக்கும் CSK அணிக்கும் எந்த பிரச்சினையும் இல்லை’ - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ரெய்னா!

சுரேஷ் ரெய்னா தனக்கும் சி.எஸ்.கே அணி நிர்வாகத்துக்கும் இடையே எந்த விதமான பிரச்சினையும் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

Cricbuzz இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் ரெய்னா, தான் மீண்டும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு திரும்புவதற்கான வாய்ப்புகள் உண்டு எனச் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.

துபாயில் நடக்க உள்ள ஐ.பி.எல் தொடரில் பங்கேற்கச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தியாவிலிருந்து கிளம்பிச் சென்றபோது சுரேஷ் ரெய்னாவும் சென்றார். ஆனால் சென்ற வாரம் சில தனிப்பட்ட காரணங்களால் அவர் ஐ.பி.எல் தொடரிலிருந்து விலகி மீண்டும் இந்தியா திரும்பினார்.

அவர் இந்தியா வந்ததற்குக் காரணம் அவரை சி.எஸ்.கே நிர்வாகம் சரிவர நடத்தவில்லை எனவும், இதனால் மனமுடைந்த ரெய்னா இந்தியா திரும்பினார் எனவும் வதந்திகள் பரவின.

ஆனால் ஓரிரு நாட்களுக்குப் பின் அவரது மாமா பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் படுகொலை செய்யப்பட்ட செய்தி வெளிவந்தது. இதனால்தான் ரெய்னா இந்தியா திரும்பினார் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரெய்னா “அது ஒரு தனிப்பட்ட முடிவு. நான் என்னுடைய குடும்பத்துக்காகத் திரும்பி வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. என்னுடைய வீட்டில் சில விஷயங்களை உடனே கவனிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. சி.எஸ்.கேவும் என்னுடைய குடும்பமே. சகோதரர் தோனி எனக்கு மிகவும் முக்கியமானவர். அது ஒரு கஷ்டமான முடிவு. எனக்கும் சி.எஸ்.கே அணிக்கும் இடையே எந்த விதமான பிரச்சனைகளும் இல்லை.” என ரெய்னா தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னை மீண்டும் ரசிகர்கள் சி.எஸ்.கே அணியில் பார்க்கலாம் என்றும் சூசகமாக அவர் ஐ.பி.எல் தொடருக்கு திரும்புவது குறித்துப் பேசியுள்ளார்.

Also Read: “எனது உறவினர்களைக் கொன்றவர்களை விட்டுவிடாதீர்கள்” - பஞ்சாப் முதலமைச்சருக்கு சுரேஷ் ரெய்னா கோரிக்கை!