Sports

பார்சிலோனாவை விட்டு வெளியேறினார் மெஸ்ஸி - கிளப்பின் மீதான அதிருப்தியில் விலகியதாக தகவல்!

லியோனல் மெஸ்ஸி பார்சிலோனா கால்பந்தாட்ட கிளப்பிலிருந்து விலகுவதாக அந்த கிளப் நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை ஆகஸ்ட் 25-ம் தேதி பத்திரிகையாளர்களுக்கு பார்சிலோனா நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் லீக் காலிறுதிச் சுற்றில் பயோர்ன் முயினிக் அணிக்கு எதிராக பார்சிலோனா அணி 8-2 என்ற கோல் கணக்கில் கடுமையான தோல்வியைச் சந்தித்தது.

மெஸ்ஸியின் கால்பந்தாட்ட வாழ்க்கையில் இது மிக மோசமான தோல்வியாகப் பார்க்கப்படுகிறது. மேலும் பார்சிலோனா அணியின் வரலாற்றிலும் இது மோசமான பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 2007 – 2008-ம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான் எந்த கோப்பையையும் வெல்லாமல் ஒரு வருடத்தை பார்சிலோனா அணி கழித்துள்ளது.

பார்சிலோனாவில் மெஸ்ஸி அங்கம் வகித்து விளையாடிய காலகட்டத்தில் உலகின் முன்னணி கால்பந்தாட்ட வீரராகத் திகழ்ந்ததோடு மட்டுமல்லாமல் 6 பாலன் டி ஓர் விருதுகளையும் வென்றுள்ளார். மேலும் அவர் பார்சிலோனாவுக்கு 10 லா லிகா கோப்பைகளையும், 4 சாம்பியன்ஸ் லீக் கோப்பைகளையும் வென்று கொடுத்துள்ளார்.

தற்போது மெஸ்ஸி வெளியேறுவதன் மூலமாக அவர் சட்டச் சிக்கல்களை சந்திக்கநேரிடும் எனக் கருதப்படுகிறது. மெஸ்ஸிக்கும் பார்சிலோனாவுக்கும் இடையேயான ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள ஒரு ஷரத்தின் அடிப்படையில் வெளியேறியுள்ளார் என்றும், ஆனால் அந்த ஷரத்து சட்டப்படி செல்லுபடியாகும் காலம் முடிந்துவிட்டது என கிளப் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மெஸ்ஸி எந்த வித பிரச்சினையும் இல்லாமல் வெளியேறும் பட்சத்தில் அவருக்கு ஏற்ற சம்பளம் கொடுத்து அவரை ஏற்றுக்கொள்ளும் கிளப்புகள் என்று பார்த்தால் பார்ஸி செயிண்ட் ஜெர்மெயின் மற்றும் மேன்செஸ்டர் சிட்டி உள்ளிட்ட இரண்டு மட்டுமே உள்ளன.

சமீபகாலமாகவே பார்சிலோனா கிளப் எடுத்த முடிவுகள் மெஸ்ஸிக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “600 மட்டுமல்ல 700 விக்கெட்டுகளையும் என்னால் வீழ்த்தமுடியும்” - சாதித்த ஜேம்ஸ் ஆண்டர்சன் நம்பிக்கை!