Sports
“ஒவ்வொரு தோனி ரசிகனுக்கும் ஒரு புகார் உண்டு” - பிசிசிஐ குறித்து சாக்லின் முஸ்தாக் கருத்து!
பிசிசிஐ எம்.எஸ்.தோனியை சரியான முறையில் நடத்தவில்லை என பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சாக்லின் முஸ்தாக் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். திடீரென்று அறிவிக்கப்பட்ட இந்த ஓய்வு தோனியின் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கும், கிரிக்கெட் ஆர்வலர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதனைத்தொடர்ந்து தோனியின் சாதனைகள் குறித்தும், அவருடனான நினைவுகள் குறித்தும் பல்வேறு நாடுகளைச் சார்ந்த கிரிக்கெட் வீரர்களும் தொடர்ந்து கருத்துகளை சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சாக்லின் முஸ்தாக், தோனி கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடாமல் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டிருப்பது பிசிசிஐ அவரை சரியாக நடத்தாததை காட்டுகிறது எனத் தெரிவித்துள்ளார். தோனியின் ரசிகர்கள் அவர் இறுதியாக ஒரு போட்டியில் விளையாடுவதை விரும்பியிருப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
”தோனியை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு புகார் இருக்கும் என நான் எண்ணுகிறேன். இந்திய அணியின் சீருடையைக் கடைசியாக உடுத்தி, கையுறை அணிந்து பேட்டை ஏந்தி, பின்பு கையுறையைக் கழற்றி, அவருடைய தொப்பியை கடைசியாக ஒரு முறை நீக்கியிருந்தால் அது மிகவும் சிறப்பாக அமைந்திருக்கும்.” என முஸ்தாக் தன்னுடைய யூ-ட்யூப் சேனலில் தெரிவித்துள்ளார்.
”பொதுவாக நான் எதையும் என்னுடைய நிகழ்ச்சியில் எதிர்மறையாகச் சொல்லமாட்டேன். நான் இதைச் சொல்லவேண்டாம் என நினைக்கிறேன். ஆனால் என்னுடைய இதயம் இதைச் சொல்லவேண்டும் எனச் சொல்லுகிறது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் “ஒரு பெரிய வீரரை இப்படிச் சரியாக நடத்தாதது, பிசிசிஐ-யின் இழப்பு. அவர் இப்படி ஓய்வு பெற்றிருக்கக்கூடாது. பிசிசிஐ அவரை சரியாக நடத்தவில்லை என அவரது கோடிக்கணக்கான ரசிகர்களும், கிரிக்கெட் விரும்பிகளும் ஒப்புக்கொள்வார்கள் என என்னால் உறுதியாகக் கூற முடியும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தானும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தோனி சிறந்த மனிதர் மற்றும் ஒரு நிஜ நாயகன் எனவும் சாக்லின் முஸ்தாக் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!