Sports

“RCB கேப்டனாக விராட் கோலியே தொடர்வார்” : அணி உரிமையாளர் சஞ்சீவ் சுரிவாலா திட்டவட்டம்!

ஐ.பி.எல் தொடர் சுவாரஸ்யங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த ஒன்று. அதனால்தான் அதற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இன்று வரை நீடிக்கிறது. அத்தொடரின் முக்கியமான ஆச்சரியங்களில் ஒன்று விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மோசமான பெர்பார்ஃபெமென்ஸ்.

இதுவரை நடந்த ஐ.பி.எல் தொடர்களில் ஆர்.சி.பி அணி 5வது, 7வது, 3வது, 2வது, 8வது, 6வது, 8வது இடங்களையே பிடித்துள்ளது. இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி சிறப்பாகச் செயல்படும் அதே சமயத்தில் அவர் ஆர்.சி.பி-யின் கேப்டனாக இருந்தும் அந்த அணி சிறப்பாகச் செயல்படாத நிலை தொடர்வது ஐ.பி.எல் ஆச்சரியங்களில் ஒன்று.

இதுவரை ஐ.பி.எல் பிளே ஆஃப் சுற்றுக்கு இரண்டு முறை மட்டுமே ஆர்சிபி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டு மட்டும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. மற்ற அனைத்து ஐ.பி.எல் தொடர்களும் ஏமாற்றமாகவே அந்த அணிக்கு அமைந்தது. அந்த அணிக்கு 2013-ம் ஆண்டிலிருந்து விராட் கோலி தலைமையேற்று வழி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் ஆர்.சி.பி கேப்டனாக விராட் கோலி தொடர்வாரா என்ற கேள்விக்கு அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் சுரிவாலா திட்டவட்டமான பதில் ஒன்றை வழங்கியுள்ளார்.

”விராட் கோலி இந்திய அணியின் கேப்டன். அவருக்கு அதிக அளவிலான ரசிகர்கள் உள்ளனர். நாங்கள் எல்லோரும் வீராத்தை நேசிக்கிறோம், அவருடன் சேர்ந்து பயணிக்க விரும்புகிறோம்” எனத் தெரிவித்துள்ள அவர் “சில நேரம் நாம் வெல்கிறோம். சில நேரம் நாம் தோற்கிறோம்.

இதுதான் இந்த விளையாட்டு. ஆனால் அந்த தனிமனிதர் யார் என்று நாம் மறந்துவிடவேண்டாம். அவருடைய சாதனைகள் என்னென்ன என்பதையும் மறந்துவிடவேண்டாம். “ எனவும் தெரிவித்துள்ளார்.

Also Read: ஐபிஎல் தொடருக்கு தயாராகும் ஹர்திக் பாண்டியா!