Sports

ஐபிஎல் போட்டியை நடத்த போட்டிப்போடும் வெளிநாடுகள்: முடிவெடுக்க முடியாமல் திணறும் பி.சி.சி.ஐ! #CoronaCrisis

கொரோனா பரவலால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கு மற்றும் பல்வேறு வான்வழி போக்குவரத்து கட்டுப்பாடுகள், தடைகள் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் தொடங்கப்படுவதாக திட்டமிட்டிருந்த ஐ.பி.எல். தொடர் தேதிக்குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்தியாவில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு 3 மாதங்களுக்கும் மேலாகியும் நடப்பாண்டு ஐபிஎல் போட்டியை நடத்துவது குறித்து எவ்வித முடிவையும் பிசிசிஐ தரப்பு எடுக்காமல் இருந்து வருவது வீட்டிலேயே முடங்கியுள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றைத்தையே அளித்து வருகிறது.

இதற்கிடையே, இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து உச்ச நிலையிலேயே இருந்து வருவதால், ரசிகர்கள் இல்லாமல் வெளி நாடுகளில் ஐபிஎல் போட்டியை நடத்த பிசிசிஐ திட்டமிட்டு வருகிறது. அதனையடுத்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்திய ஐக்கிய அரபு அமீரகம், இலங்கை ஆகிய நாடுகள் தங்களது நாட்டில் போட்டியை நடத்துவதற்கு ஆர்வம் காட்டின.

இந்நிலையில், முழுமையாக கொரோனாவை கட்டுப்படுத்திய நியூஸிலாந்தும் தற்போது ஐபிஎல் போட்டியை நடத்த ஆர்வம் காட்டியுள்ளது. ஏற்கெனவே உள்நாட்டில் ரக்பி போட்டிகளை ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களுடன் வெற்றிகரமாக நடத்திவரும் நிலையில் ஐபிஎல் போட்டியையும் நடத்த நியூஸிலாந்து முன்வந்துள்ளது.

இது தொடர்பாக பேசியுள்ள பிசிசிஐ பொருளாளர் நியூசிலாந்தில் போட்டியை நடத்த அந்நாடு ஆர்வம் காட்டியுள்ளது. ஆனால், நேரடி ஒளிபரப்பு செய்வதில் காலதாமதம் ஆவதால் இது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். முன்னதாக டி20 உலகக்கோப்பை போட்டியை நடத்துவதில் முடிவு எட்டப்படாமல் உள்ளது. அதேபோல ஐபிஎல் போட்டியை நடத்துவதை தீர்மானிக்க முடியாமல் பிசிசிஐ திணறி வருகிறது.

இருப்பினும் கோடிக்கணக்கில் பணம் கொழிக்கும் போட்டியாக இருப்பதால் எப்படியாவது இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்திட வேண்டும் என்பதில் பிசிசிஐ திண்ணமாக உள்ளது. கூடிய விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Also Read: “VIVO தான் ஸ்பான்சர்” : உறுதி செய்த பிசிசிஐ - பா.ஜ.கவினர் போராட்டங்களை கண்டுகொள்ளாத அமித்ஷாவின் மகன்!